வடமதுரை:வடகிழக்கு பருவமழை காலத்திலும், வடமதுரை பகுதியில் போதிய மழை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை, கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்தது. இதன் பலனாக நீர்தேக்கங்கள், கண்மாய்,குளங்கள் நிரம்பியுள்ளன.
ஆனால் வடமதுரை ஒன்றிய பகுதியில் மழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை. ஒவ்வொரு மழை காலத்திலும் வெள்ள நீர் புரண்டோடும் சந்தனவர்த்தினி, கல்லாறு போன்ற வறட்டாறுகளில்கூட நீர் வரத்து இல்லை. இந்த ஆறுகளில் நீர்வரத்து வந்தால் அருகிலுள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் வாய்க்கால் அமைப்புகள் உள்ளன. ஆறுகளில் நீர் வராததால் கண்மாய், குளங்களை சார்ந்த ஆயக்கட்டு பகுதி விவசாயிகளும், மறைமுக பாசன வசதி பெறும் விவசாயிகளும் விரக்தியில் உள்ளனர்.
வங்க கடலில் சென்னைக்கு கிழக்கே உருவாகும் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலைகளால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்கிறது. இலங்கை பகுதியில் புயல் உருவாகும் போது, தென் மாவட்டங்களின் கடலோரங்களில் கணிசமான மழை பெய்கிறது. இவ்விரண்டு நிகழ்வுகளின் போதும் வடமதுரை பகுதியில் கனமழை கிடைப்பதில்லை.
கடந்த 2005, 2007, 2008 ஆண்டுகளுக்கு பின்னர் போதிய மழையின்றி இப்பகுதியில் குளங்கள் நிரம்பவில்லை. எனவே இந்தாண்டு வரை கிணறுகள் வறண்டு, வயல்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அவற்றில் இருந்து பாசனத்திற்கு நீர் எடுக்கும் நிலைதான் உள்ளது. இந்தாண்டும் மழை பொய்த்தால், வடமதுரையை வறட்சி பகுதியாக அறிவித்து, நிவாரணம் வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என, விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE