பெரும்பாலான பள்ளிகளில் மழைநீர் சேகரிப்புபுறக்கணிப்பு!:கண்டுகொள்ளப்படாத புறநகர் அரசு பள்ளிகள்

Added : நவ 26, 2015 | |
Advertisement
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சுகாதார நடவடிக்கைகள் ஓரளவுக்கு முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால், பல பள்ளிகளில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி, முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதனால் கணிசமான மழைநீர் வீணாகி உள்ளது. சென்னையில் நீடித்த பலத்த மழையால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, ௧௭வது நாளாக நேற்றும் விடுமுறை தொடர்ந்தது.புதிய காற்றழுத்த நிலை காரணமாக அடுத்த
பெரும்பாலான பள்ளிகளில் மழைநீர் சேகரிப்புபுறக்கணிப்பு!:கண்டுகொள்ளப்படாத புறநகர் அரசு பள்ளிகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சுகாதார நடவடிக்கைகள் ஓரளவுக்கு முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால், பல பள்ளிகளில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி, முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதனால் கணிசமான மழைநீர் வீணாகி உள்ளது.
சென்னையில் நீடித்த பலத்த மழையால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, ௧௭வது நாளாக நேற்றும் விடுமுறை தொடர்ந்தது.புதிய காற்றழுத்த நிலை காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கும் மழை நீடிக்கும் என, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மழைநீரை அகற்றினாலும், எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அரசு உத்தரவிட்டும், பணியில் சுணக்கம் காணப்படுகிறது. மைதானங்களில் தேங்கிய நீர் பள்ளி கழிப்பறைகள், சத்துணவு சமைக்கும் இடங்கள் ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலையே தற்போது உள்ளது.சவால்கள் என்ன? *மழை ஓய்ந்த பின், தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், நீர்த்தேக்க தொட்டிகளில் உள்ள குடிநீரை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.* குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து 'குளோரினேஷன்' செய்யப்பட வேண்டும். * மதிய உணவு சமைக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை ஆகியவற்றை சுகாதாரமான நிலைக்கு மாற்ற வேண்டும்.* மதிய உணவிற்காக இருப்பு வைக்கப்பட்ட உணவு பொருட்கள் நனைந்திருந்தால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் * பள்ளி வகுப்பறைகளில் உள்ள மின் இணைப்புகளை பரிசோதித்து, கசிவு உள்ளதா என்பதை உறுதிசெய்து, அப்படி இருந்தால், அதை சீரமைக்க வேண்டும்.
நிதி நிலைமை சிக்கல்:பெயர் வெளியிட விரும்பாத பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளை பொறுத்தவரை, பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற, அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.ஆனால், அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை நிலைமை வேறு. மழைநீர் வடிந்து செல்ல, கால்வாய் வசதி இல்லை. மோட்டார் மூலம் அகற்றுவதற்கான நிதி வசதியும், பள்ளி நிர்வாகங்களிடம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் உதவ முன் வரவேண்டும். ஆனால், அவர்களும் கண்டுகொள்வதில்லை.
பொதுப்பணி துறையிடம் உதவி கேட்டும் கிடைக்கவில்லை. அதற்கு, அரசு அவசர நிதி ஒதுக்கி உதவ வேண்டும். மழை தொடர்வதால் தேங்கிய நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஆனால், மழை நீரை அகற்றி, தினமும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மழைநீர் சேகரிப்பா?:மழைநீர் சேகரிப்புக்காக பள்ளி மாணவ, மாணவியர் மூலம், 'மழைநீர் உயிர்நீர்' என்றெல்லாம் கோஷம் எழுப்பி ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு ஊர்வலங்கள், கண்காட்சிகள் நடப்பது வழக்கம்.
மாநகராட்சி பள்ளிகளில் கணிசமானவற்றில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தாலும் அவை, முறையாக பராமரிக்கப்படாததால், மழைநீர் வீணடிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பே அமைக்கப்படவில்லை என்பது, இப்போது வெளிச்சத்திற்கு வந்துஉள்ளது. மழைநீர் சேகரிப்பு குறித்த விளம்பரத்திற்காக செலவிட்ட நிதியில், மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்கி இருந்தால், பள்ளி வளாகங்கள் மழை, கழிவுநீர் குட்டையாகி இருக்காது.
புறநகரில் எப்படி?:புறநகர் பள்ளிகளில் பல இன்னும், மழைநீர் வெள்ளத்தில் மிதக்கின்றன. வளாகங்களில் விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. மழைநீர் சேகரிப்பு குறித்து, அங்கு விழிப்புணர்வு ஏற்பட்டதாகவே தெரியவில்லை.
தொட்டால் 'ஷாக்':கோடம்பாக்கத்தில் மண்டலத்தில் இயங்கி வரும், 36 பள்ளிகளில், ஐந்து சதவீத பள்ளிகளில் மட்டுமே, சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது.
மழைநீர் தேக்கம், வகுப்புகளில் உள்ள மேஜைகள் துருப்பிடித்து சீரழிவு, தண்ணீர், குப்பை கலந்து தேக்கம், குடிநீர் குழாய்கள் உடைந்து கிடத்தல் என, பல பிரச்னைகள் பள்ளிகளில் நிலவுகின்றன. மேற்கு மாம்பலம், அசோக் நகர் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
பள்ளி வகுப்பறைகளில் சுவிட்ச் போர்டுகளில் தண்ணீர் கசிகிறது. அதை சரிசெய்யாவிட்டால், மாணவர்களை மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. சுகாதார துறை சார்பில் எந்த பள்ளியிலும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது சென்னையில், 23 பள்ளிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அந்த முகாம்கள் அங்கு தொடர்ந்து செயல்படும். மீதமுள்ள வகுப்பறைகளில், மாணவர்களை அமர வைப்போம்
சுந்தரவல்லி, கலெக்டர், சென்னை மாவட்டம்
மழைநீர் - கழிவுநீர் தேக்கம்:வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு, பள்ளி சாலையில், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. அதேபால், 147வது வார்டு, நெற்குன்றம், கங்கா நகரில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளிகளில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
சமீபத்தில் பெய்த தொடர் மழையால், இரண்டு பள்ளி களிலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது. தேங்கி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்த முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இருந்தும் இல்லை:பல்லாவரத்தை அடுத்த அஸ்தினாபுரம் நகராட்சி தொடக்க பள்ளி, குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகல்கேணி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில், மழைநீர் சேகரிப்பு, கழிப்பறைகள் இல்லை.
அதேபோல், மாங்காடு, குன்றத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், அனகாபுத்துார் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளி, பம்மல் பசும்பொன் நகர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றிலும் அதே நிலை தான்.
குரோம்பேட்டை, லட்சுமிபுரம் ஜெயஸ்ரீ முத்துக்குமாரசாமி அரசு உயர்நிலைப் பள்ளி, குன்றத்துார் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவிலம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி, புழுதிவாக்கம், அரசு துவக்கப் பள்ளி ஆகியவற்றில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தும், பராமரிக்கப்படவில்லை.


- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X