சிவகாசி: பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்தை தடுக்கவும், அங்கு பணிபுரியும் தொழிலாளியை பாதுகாக்கவும் தானியங்கி தீயணைப்பான் மாதிரி வடிவமைப்பை ஜமீன் சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவன் ஜெயக்குமார் கண்டுபிடித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 750 க்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இங்கு அரசு வலியுறுத்தி வரும் பாதுகாப்பை கடைபிடித்து வந்தாலும் தொழிலாளர்களின் கவனக்குறைவு, இயற்கை சூழல் காரணங்களால் வெடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதத்தில் ஜமீன்சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவன் தானியங்கி தீயணைப்பான் மாதிரி வடிவமைப்பை உருவாக்கி உள்ளார். இந்த வடிவமைப்பை பட்டாசு ஆலை அறைகளில் பொருத்தினால் வெடி விபத்தை முற்றிலும் தடுக்க முடியும்.
மாணவன் கூறுகையில் “இதை ஆலையில் செயலாக்கம் செய்தால் வெடி விபத்தை முழுமையாக தடுக்க முடியும். இதற்கு வெப்ப சென்சார் கருவி, எக் சாஸ்ட் பேன், அலாரம், இரண்டு நீர் தேக்க தொட்டிகள், சிறிய பேட்டரிகள் இருந்தால் போதும்.அறையில் வெடி, தீ விபத்து ஏற்படும் போது அதை வெப்ப சென்சார் உணர்ந்து உடனடியாக அலாரத்திற்கு தகவல் கொடுக்கும். அந்நேரத்திலேயே பேட்டரி உதவியுடன் பட்டாசு தயாரிப்பு அறையில் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வேகமாக பைப் மூலம் கடந்து அறை முழுவதும் தெளித்து தீயை கட்டுப்படுத்தும். புகை எக்சாஸ்ட் பேன் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவை அனைத்தும் தானியங்கி மூலம் நடக்கும். இதன் மூலம் பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்தை தடுக்க முடியம்.எனது தாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார். அவர் படும் கஷ்டத்தை மனத்தில் வைத்து இந்த வடிவமைப்பை உருவாக்கினேன்,” என்றார்.
மாணவன் ஜெயக்குமார் மாநில அளவில் நடந்த பல்வேறு அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று பல பரிசுகள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மாணவனை பாராட்ட 97879 64984 ல் அழைக்கலாம்.