வாலட்டா: இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் கூறியுள்ளார் . காமன்வெல்த் நாட்டு தலைவர்கள் கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கு நவாஸ் ஷெ ரீப் சென்றுள்ளார்.
மால்டாவில் நடந்த கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் கேமரூனை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார் .தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில்;
எங்களின் அண்டை நாடான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறோம். அமைதியை பேணிக்காத்திட இந்தியாவுடன் எவ்வித முன் நிபந்தனையுமின்றி பேச்சு நடத்த தயார் . சமீபத்தில் பாரிசில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது . பயங்கரவாதத்தினால் பிரான்ஸ் பெற்ற துன்பத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். இவ்வாறு நவாஸ் கூறினார் .
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் செயலர் அளவில் பேச்சு நடக்கவிருந்தது ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளை சந்தித்து பேசுவோம், இரு நாட்டு பேச்சு நடக்கும் போது பிரிவினைவாதிகளும் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா இந்த நிபந்தனை எதுவும் விதிக்க முடியாது என பேச்சு வார்த்தையை இந்தியா ரத்து செய்தது. இந்நிலையில் நவாஸ் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .