புதுடில்லி : சைக்கிள் பெடலை இயக்குவதன் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான வழியை இந்தியா அமெரிக்க வம்சாளியை சேர்ந்த கோடீஸ்வரர் மனோஜ் பார்கவா கண்டுபிடித்துள்ளார்.
இது தொடர்பாக மனோஜ் பார்கவா கூறுகையில், இந்த சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த சைக்கிளின் பெடலை இயக்குவதன் மூலம், சக்கரம் ஜெனரேட்டராக மாறி, மின்சாரம் உற்பத்தி செய்யும். இதில் கிடைக்கும் மின்சாரம், சைக்கிளில் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்யும் . அடுத்த வருடம் மார்ச் முதல் இந்த சைக்கிள் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரமாக இருக்கும்.
இந்த சைக்கிளை ஒரு மணி நேரம் இயக்குவதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம், கிராமப்புறங்களில் 24 மணி நேரம் பயன்படுத்த முடியும். ஒரு சிறிய விளக்கு, மின்விசிறி, போன் சார்ஜ் செய்தல் ஆகியவை நாள் முழுவதும் இயக்கலாம். இதன் மூலம் மின்சார கட்டணம் மிச்சமாகும். எரிபொருள் செலவு குறையும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. இது தொடர்பாக கடந்த வருடம் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தேன்.
இந்த கண்டுபிடிப்பை அரசு துறையுடன் சேர்ந்து செய்ய விரும்பவில்லை. அங்கு திறமை மிகவும் குறைவு. இதற்கு அரசு துறை எனக்கு உதவுமா என முடிவெடுக்கவே ஆறு மாதம் ஆகும். முதலில் உத்தர்கண்ட் மாநிலத்தில் விற்பனை துவங்கி பின்னர் மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும். உத்தர்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டாலும், வீடுகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்வதில் பற்றாக்குறை உள்ளது. இந்த சைக்கிள் இந்த பற்றாக்குறையை குறைக்கும். இந்த சைக்கிள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உற்பத்தி செய்யப்படும்.
மேலும் இந்த சக்கிளை பயன்படுத்துவதன் மூலம் உடலில் எரிக்கப்படும் சக்தியின் அளவு கணக்கிட முடியும் இந்த சைக்கிளால் உலகம் முழுவதும் 1.3 பில்லியன் மக்கள் பயன்பெறுகின்றனர் என கூறினார்.