புதுடில்லி:''டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்குப் பதிலாக, 'ஜோக்பால்' மசோதாவை உருவாக்கியுள்ளார்,'' என, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டலடித்துள்ளார்.
ரகசியம் காக்கின்றனர்:டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில், லோக்பால் மசோதாவை மாநில அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதா பற்றிய விவரங்கள், இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் கூறியதாவது:டில்லி, ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, 'ஜன் லோக்பால்' மசோதாவில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. தற்போது, கெஜ்ரிவால் அரசு தயாரித்துள்ள மசோதாவில், முன்னர் கூறப்பட்டவற்றில், பல அம்சங்கள் இடம் பெறவில்லை. அந்த மசோதாவையே நீர்த்துப் போக வைக்கும் விதமான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. அதனால் தான், இந்த மசோதா பற்றிய விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்காமல் ரகசியம் காக்கின்றனர்; இதில், வெளிப்படைத் தன்மை இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அவர்களை விசாரிப்பதற்கான கடுமையான விதிமுறைகள் எதுவும், இந்த மசோதாவில் இடம் பெறவில்லை.
மிக மோசமானது : தன்னிடம் யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே, மசோதாவில், நீர்த்துப் போகும்படியான விஷயங்களை, கெஜ்ரிவால் இடம்பெறச் செய்துள்ளார். முந்தைய, காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மசோதாவை விட, தற்போதைய மசோதா மிக மோசமானது. இது, லோக்பால் மசோதா இல்லை; மகா ஜோக்பால் மசோதா. இந்திய அரசியல் வரலாற்றில், வேறு எந்த அரசியல் தலைவரும், கெஜ்ரிவாலைப் போன்ற மோசடியை செய்தது இல்லை. இதற்கு பொறுப்பேற்று, தன் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ராம்லீலா மைதானத்தில் ஜன் லோக்பால் மசோதா குறித்து என்ன கூறப் பட்டதோ, அதில் உள்ள அனைத்து அம்சங்களும், தற்போதைய மசோதாவில் இடம் பெற்றுள்ளன. ஒரு கமா, முற்றுப் புள்ளியை கூட மாற்றவில்லை.
குமார் விஸ்வாஸ்
ஆம் ஆத்மி நிர்வாகி