வெற்றி முகம் மலரட்டும்| Dinamalar

வெற்றி முகம் மலரட்டும்

Added : நவ 30, 2015 | கருத்துகள் (2)
 வெற்றி முகம் மலரட்டும்


மனித வாழ்க்கையில் இளம் பருவம் என்பது முக்கியமானது மட்டுமல்ல. மிகவும் கவனத்துடன் செதுக்கப்படவேண்டிய பருவம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் கல்வி, தொழில் மற்றும் சமுதாய துறைகளால் தனிச் சிறப்புடன் திகழ்ந்து வெற்றியாளர்களாக பிரகாசிக்க வேண்டுமென்றால் அதற்கு அடித்தளமாக அமைவது இளைய பருவத்தில் நாம் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைமுறை தான்.
விருப்பங்கள் பலவிதம் இன்றைய காலக்கட்டத்தில் இளைய பருவத்தினர் பலரும், பிறரைப் போல வாழ வேண்டும் என்ற நோக்குடன் சராசரியாக தங்களது வாழ்க்கையை கடத்துவதை நாம் பார்க்கிறோம். 'அவரைப் போல வாழ வேண்டும். இவரைப் போல வாழ வேண்டும்' என்று தங்களுக்கு பிடித்தமானவர்களின் வாழ்க்கை முறையை போல், தமக்கும் அமைய வேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
மற்றவர்களால் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டு, கவரப்பட்டு வாழ்வதால் அவர்களுக்கு உள்ள தனித்துவம் எங்கோ மறைக்கப்படுகிறது என்பது தான் உண்மை. தனித்துவம்
இயற்கை மனிதர்களுக்கு அளித்த மிகப்பெரியவரம் அல்லது வரப்பிரசாதம், ஒவ்வொரு நபரும் தனிச்சிறப்பு பெற்று சிறந்து விளங்குவதற்கான மிகப் பெரிய சக்தி 'தனி மனித தனித்துவம்' என்பது. இன்று உலகில் ஜெயித்தவர்களின் பட்டியலை ஆராய்ந்து பார்த்தால், அதில் பெரும்பாலோனோர் அவர்களின் தனித்துவத்தை தங்களின் மூலதனமாக வைத்து, அதனால் பெரும்
பயனடைந்து, அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் மகத்தான சாதனைகள் படைத்துள்ளார்கள் என்ற உண்மை புலப்படும். வாழ்க்கையில் பிரகாசிப்பவர்கள் நிரந்தரமான புகழுக்கும் மரியாதைக்கும் உள்ளவர்களாக விளங்குகிறார்கள்.
முகமூடி வாழ்க்கை
மனோதத்துவ ரீதியில், பிறரைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை
முகமூடி ஆளுமை கொண்டவர்கள் (மாஸ்க்ட் பெர்சனாலிட்டி) என்கிறோம். எப்பொழுது ஒரு நபர் மற்றவரைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்து தனது வாழ்க்கையை நடத்துகின்றாரோ, அப்பொழுதே அந்த நபர் முகமூடி அணிந்து தனது வாழ்க்கையை நடத்துகின்றார் என்பது தான் யதார்த்தம்.
பல நேரங்களில் கற்பனையில் கூட அமைகின்ற இந்த முகமூடியினை, பலரும் ஏற்று தங்களது தனித்துவத்திற்கு நேர்
மாறாக அல்லது தங்களது தனித்துவத்திற்கு பொருந்தாத வாழ்க்கை முறையினை மேற்கொள்கின்றனர். இப்படி வாழும் பொழுது அநேக நேரங்களில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி பெறுவதில்லை..
வெற்றி முகம் முகமூடியை தவிர்த்து, தனிச்சிறப்பு பெற்று சிறந்தோங்கி வாழ்வதற்கான வழிமுறையை கடைப்பிடிக்க, இளைய தலைமுறையினர் தங்களது முகத்தை வெற்றி முகமாக மாற்றுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு தேவையான வழிமுறைகளை, இளைய
தலைமுறையினர் எங்கும் தேடி அலையத் தேவையில்லை. தங்களுக்குள் புதைந்து இருக்கும் ஆற்றலை கண்டறிந்து அதை வெளிப்படுத்த தெரிந்தாலே போதும். இன்றைய உலகத்தை வெல்வதற்கான ஆளுமை படைத்தவர்கள் தான் எல்லோரும். இதை அறிந்து செயல்படுவதினால் வெற்றியடைகின்றனர்.
மற்றவர்கள் அறியாததால் வெற்றி பெறுவதில்லை. வெற்றி முகம் மலர இன்றைய இளம் பருவத்தினருக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது சுயநம்பிக்கை என்னும் தாரக மந்திரம். அதுவே வெற்றிக்கு தேவையான முதலும் முக்கியமான படியாக அமைகிறது.
சுய நம்பிக்கை எந்த ஒரு மனிதனும் முன்னேற்றம் என்பது தனக்குள்ளே ஆரம்பிக்கும் விஷயம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், உயர்ந்த நிலை அடைய வேண்டும், செல்வாக்குடன் வாழ வேண்டும், சிறந்த தொழில் அதிபராக வேண்டும், பொருளாதார ரீதியில் வெற்றி பெற வேண்டும் என்ற வாழ்க்கை எண்ணங்களுக்கு பிரதான ஊற்றாக அமைவது சுய நம்பிக்கை என்னும் தாரக மந்திரம் தான். நாம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம், முதலில் நமக்கு தோன்ற வேண்டும். அதை நாம் முழுமையாக நம்ப வேண்டும். இதுவே சுய முன்னேற்றத்திற்கான முதல் படி.
சுய நம்பிக்கை என்ற கருத்தை உற்றுப் பார்த்தால், வெற்றி பெறுவதற்கு மனிதன் தனது தனிச்சிறப்பை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுதல் அவசியம் என்று தெரிய வரும். முதலில் நம்மை நாம் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளுதல்
அவசியம். நம்மை நாமே ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிறர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.சுயமாக தன்னை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் போது அவர்களிடம் உள்ள நிறைகுறைகளை கண்டறிய முடிகிறது. வெற்றிக்கு தேவையான நிறைகளை பெறுவதற்கும், குறைகளை குறைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு மிக முக்கியமான சுயமுன்னேற்றத்தளம் அமைகிறது. அந்த தளத்தில் இருந்து அவர்களது செயல்களை, முழு உற்சாகத்தோடு வழி நடத்திச் செல்ல பழகிக் கொண்டார்கள் என்றால், வாழ்க்கையில் தேவைப்படும் வெற்றியை முழுமையாக அடைவதற்கு நாட்கள் வெகுதுாரம் இல்லை.
யார் வெற்றி பெறலாம் சுயநம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற்றதற்கான ஆதாரம் இல்லை. மாறாக வெற்றி பெற்ற அனைவருமே, சுயநம்பிக்கை உடையவர்கள் தான் என்று சரித்திரம் பிரதிபலிக்கிறது. சுயநம்பிக்கையை எளிமையாகக் கூற வேண்டுமென்றால், ஒரு நபர் தனது திறமையின் மேல் அல்லது சக்தியின் மேல் வைத்துள்ள நம்பிக்கை என எடுத்துக் கொள்ளலாம். சுயநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஏறத்தாழ ஒரே வகையில் அமையப் பெற்றாலும், தன்னம்பிக்கைக்கு முன்னால் சுய நம்பிக்கை என்ற நிலையை ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
குறைவான சுய நம்பிக்கையுள்ளவர்கள் சக்தி இழந்தவர்களாக காணப்படுகிறார்கள். சிறிய பிரச்னையைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர்களாகத் தெரிகிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் பலசாலிகளாகவும், தாங்கள் ஏதோ நோஞ்சான் போன்ற உணர்விலும்
இருக்கிறார்கள். சுயநம்பிக்கையை உள்வாங்கி வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணங்களை கொண்டவர்களாகவும், தங்களின் வாழ்க்கையில் வெற்றிக்கான லட்சியங்களை கண்டறிவதற்கு சக்தி படைத்தவர்களாகவும் இருக்கின்றனர். இந்த சக்தி அவர்களை வெற்றிப்பாதையில் உற்சாகப்படுத்தி அவர்களது வாழ்க்கையை மிளிரச் செய்யும்.
தனக்குள் இருக்கும் திறன்களை சுயநம்பிக்கையோடு வெளிப்படுத்தி முகமலர்ச்சியுடன் மிளிர்பவர்களுக்கு எப்பொழுதும் வெற்றிமுகம் மலரும்.
- நிக்கோலஸ் பிரான்சிஸ் தன்னம்பிக்கை எழுத்தாளர், மதுரை. 94433 04776

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X