திருட்டு நகைக்கு கேசு... திரு ஆபீசருக்கு 25 பவுன் காசு!| Dinamalar

திருட்டு நகைக்கு கேசு... திரு ஆபீசருக்கு 25 பவுன் காசு!

Added : டிச 01, 2015
Share
மித்ரா வீட்டுக்குள் நுழைந்த சித்ராவிடம், ''வாடிம்மா...நீ அக்கா தான. கண்ட நேரத்துலயும் வண்டியில ஊரைச் சுத்தாதன்னு இவள்ட்ட சொல்ல மாட்டியா? ஊரே கெட்டுக்கிடக்குது. இவ என்னடான்னா, எட்டு மணிக்குதான் வீட்டுக்கே வர்றா'' என்று அலுத்துக்கொண்டாள் மித்ராவின் அம்மா.''அம்மா...நீங்க போங்க. நான் பேசிக்கிறேன்'' என்று அனுப்பி விட்டு, ''ஏய்! ஏன்டி... கண்ட நேரத்துலயும் ஊரு
திருட்டு  நகைக்கு கேசு... திரு ஆபீசருக்கு 25 பவுன் காசு!

மித்ரா வீட்டுக்குள் நுழைந்த சித்ராவிடம், ''வாடிம்மா...நீ அக்கா தான. கண்ட நேரத்துலயும் வண்டியில ஊரைச் சுத்தாதன்னு இவள்ட்ட சொல்ல மாட்டியா? ஊரே கெட்டுக்கிடக்குது. இவ என்னடான்னா, எட்டு மணிக்குதான் வீட்டுக்கே வர்றா'' என்று அலுத்துக்கொண்டாள் மித்ராவின் அம்மா.
''அம்மா...நீங்க போங்க. நான் பேசிக்கிறேன்'' என்று அனுப்பி விட்டு, ''ஏய்! ஏன்டி... கண்ட நேரத்துலயும் ஊரு சுத்துற?'' என்று மித்ராவைப் பார்த்து கண்ணடித்தாள் சித்ரா.
''அக்கா...நீயுமா...நான் தான் கவரிங் செயின் கூடப் போடுறதில்லையே. அப்புறம் என்ன பயம்?'' என்றாள் மித்ரா.
''கழுத்துல பாசி போட்ருந்தாலும், அதையும் அறுத்துட்டுப் போயிருவானுக. நம்மூரு போலீசும் அப்பிடித்தான இருக்கு. மீனாட்சி இறந்ததுக்குக் காரணமான ரெண்டு பேரை, இன்னும் பிடிக்க முடியலையே!'' என்று உஷ்ணமாய்ப் பேசினாள் சித்ரா.
''அது தான் முடியலை. ஆனா, திருட்டு நகை வாங்குறீங்கன்னு கேசு போட்ருவேன்னு சின்னச்சின்ன நகைக்கடைக்காரங்க 15 பேரை மிரட்டி, நம்மூரு இன்ஸ்பெக்டர் ஒருத்தரு, 50 பவுன் நகையப் புடுங்கிருக்காரு. அதுல 25 பவுனை 'ரெக்கவரி' காமிச்சிட்டு, மீதியை லவட்டிட்டாராம். எல்லை தாண்டிய பயங்கரவாதமா இருக்கேன்னு நகைக்கடைக்காரங்க குமுறுறாங்க''
''ஓ... நீ சொல்றதைப் பார்த்தா... 'ஹெல்மெட்' போட்டுப் போய், கஞ்சாக்காரங்கள்ட்ட காசு வாங்குனாரே 'திரு' ஆபீசர்... அவரு மாதிரி இருக்கு''
''எக்ஸாக்ட்லி... அவரே தான். நம்ம சிட்டி போலீஸ்ல நடக்குற கூத்தையெல்லாம் கேட்டா...''
''அப்பிடி என்ன மித்து, புதுசாப் பண்ணீட்டாங்க?''
''வெளிநாட்டு வேலை வாங்கித்தர்றேன்னு, ஒரு கேரளாக்காரரு, நூறு நூத்தம்பது பேர்ட்ட பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாரு. சாய்பாபா காலனி ஸ்டேஷன்ல பல பேரு 'கம்ப்ளைண்ட்' பண்ணிருக்காங்க. உடனே, அந்த ஆளைக் கூப்பிட்டு மிரட்டுன போலீஸ்காரங்க, ஒரு 'அமவுன்டை' வாங்கிட்டு, அமைதியாயிட்டாங்க'' என்றாள் மித்ரா.
''ஒரு எப்.ஐ.ஆர்., கூடப் போடலையா?'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் சித்ரா.
''ம்ஹூம்... கடைசியில, 'கம்ப்ளைன்ட்' கொடுத்தவுங்க கேட்டதுக்கு, 'ஏன்யா, நீங்க காசைக் கொடுத்து ஏமாந்துட்டு, எங்க கழுத்தை ஏன்யா அறுக்குறீங்க'ன்னு கொந்தளிக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.
''புது ஆபீசரு வந்தும், இவுங்க எல்லாம் திருந்துறது மாதிரித் தெரியலை. அவரும், வந்ததுல இருந்து, நிறையா வேலை பாக்குறாரு. ஸ்டேஷன்களுக்கு நம்பரெல்லாம் மாத்திட்டாரு. எல்லா ஸ்டேஷன்லயும் இருக்குற குப்பையெல்லாம் அரசு காகித ஆலைக்கு 'ரீ சைக்கிள்' பண்றதுக்கு அனுப்பச் சொல்லிட்டாரு''
''அந்த மேட்டர் தான் ஒனக்குத் தெரியுமா...பீளமேடு ஸ்டேஷன்ல, பழைய 'பைல்' எல்லாத்தையும் எரிச்சிட்டாங்க. விஷயம் தெரிஞ்சு, கமிஷனர் செம்ம 'டோஸ்' விட்ருக்காரு''
''மித்து...'கேடி பில்லா கில்லாடி ரங்கா' மாதிரி, நம்மூரு போலீஸ் ஆபீசரையும், விழுப்புரத்துல இருக்குற ஒரு எஸ்.ஐ., ஒருத்தரையும் சேத்து வச்சு, ஒரு டைட்டில் போட்டு, 'டீட்டெயில் ஸ்டோரி' ஒண்ணு, சிட்டியில இருக்குற போலீஸ் ஆபீசர்களுக்குள்ள பரவிட்டு இருக்கு''
''நம்மூரு ஆபீசர், எஸ்.பி.,யா இருக்கிறப்ப, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள்ட்ட வெத்து எஸ்.ஆர்.,ல கையெழுத்து வாங்கிட்டு, போலி ரசீது தயாரிச்சு, கவர்மென்ட் பணத்தை சுட்டுட்டார்ன்னு இருக்குமே... அது 2008 வருஷத்து 'கம்ப்ளைன்ட்' ஆச்சே...!''
''அதே தான். அதை யாரு, இப்போ பரப்பிட்டு இருக்காங்கன்னு தெரியலை'' என்றாள் சித்ரா.
''கார்ப்பரேஷன் இன்ஜினியர்கள்ட்ட வேற ஒரு 'மெசேஜ்' பரவிட்டு இருக்கு...சென்ட்ரல் ஜோன்ல, ஒரு ஏரியாவுல, மழை நீர் வடிகால் கட்டாமலே, கட்டுனதாச் சொல்லி, அஞ்சு லட்ச ரூபாயை 'ஸ்வாஹா' பண்ணிட்டாங்க. அதுக்காக, அந்த கான்ட்ராக்டரை பிளாக் லிஸ்ட் பண்ணி, இன்ஜினியரை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாரு கமிஷனரு'' என்றாள் மித்ரா.
''அது தான் தெரியுமே...!''
''அந்த கான்ட்ராக்டரே, மண்டலத்து அண்ணாச்சியோட பினாமி தானாம். அந்த ஜோன்ல, ரெண்டு, மூணு வருஷத்துல இதே மாதிரி, பல வேலைகளைப் பண்ணாமலே, பண்ணுனதா 'பில்' போட்ருக்காங்க. தோண்டுனா, நிறையா மேட்டர் வரும். இதைக் கண்டு பிடிச்ச குத்தத்துக்காக, இன்ஜினியரை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்களேன்னு பொங்குறாங்க''
''இதுவும் கார்ப்பரேஷன் மேட்டர் தான். நம்ம 'பவர்ஃபுல்' லேடி ஆபீசர்க்கு, வலது கரமா இருந்தாரே ஒரு 'குண்டு' பார்ட்டி. ரிக்கார்டுகளைப் பாதுகாத்துக்கிட்டிருந்த அவரை திடீர்னு, ஸ்கூலுக்குத் தூக்கி அடிச்சிட்டாங்க. அதுக்கு முன்னாடி, அந்த ஆபீசர் ரூம்ல பயங்கரமா சத்தமாம். என்ன நடந்துச்சு, எதுக்குத் தூக்குனாங்கன்னு ஒரே ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு'' என்றாள் சித்ரா.
'அக்கா... சாயங்காலமானா...சுந்தராபுரம், போத்தனுார் ஏரியாவுல, வீட்டுக்குள்ளயே இருக்க முடியாத அளவுக்கு, குப்பை நாத்தம் குமட்டுது. ரோட்டுலயே நடக்க முடியலை. அந்த ஏரியா மக்கள் எப்பிடிக்கா பொறுத்திருக்காங்க?'' என்றாள் மித்ரா.
''கரெக்ட் மித்து... பயங்கர நாத்தம். மறுபடியும் குப்பையப் பிரிக்காமப் போடுறது தான் காரணம்கிறாங்க'' என்றாள் சித்ரா.
''குப்பை 'டிரிப்' அடிக்கிறது, பெரிய இடத்து ஆளு கம்பெனி. குப்பையப் பிரிக்கிற கம்பெனி, கார்ப்பரேஷன் நிறுத்தி வச்ச 22 கோடியில, 17 கோடியைக் கொடுக்க ஐகோர்ட்ல ஆர்டர் வாங்கிட்டு வந்து, எட்டு கோடியை ஏற்கனவே வாங்கிருச்சு. ரெண்டு பேர்ட்டயும் எந்த கமிஷனும் வாங்க முடியாம, நம்ம ஊரு குப்பை இன்ஜினியரு, குழம்பிக் கெடக்குறாராம்'' என்றாள் மித்ரா.
''நீ ரொம்ப லேட் மித்து... அவரு, இப்போ புதுசா ஒரு 'ஐடியா' போட்ருக்காரு. வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு லாரிக உள்ள போற இடத்துல, ஒரு பந்தல் போட்டு, அங்கயே 'சொல்யூஷன்' ஊத்தி விடலாம்னு. அதுக்காக, அம்பது லட்ச ரூபால 'ப்ளான்'
பண்ணிருக்காராம்''
''என்ன கொடுமை சரவணன்... கோடி கோடியா சம்பாதிச்சவரு, இப்பிடி லட்சத்துக்கே, பாடாப்படுறாரு''
''இப்பல்லாம் யாரு, எவ்ளோ சம்பாதிக்கிறாங்கன்னு கணிக்கவே முடியுறதில்லை மித்து. நம்மூருல ரிஜிஸ்டர் ஆபீசுல, முன்னாள் பத்திரிகையாளர் ஒருத்தரு வேலை பாக்குறாராம். அவரு, எல்லா ஆபீசுக்கும் போயி, ஆபீசர்களை மிரட்டி, பணம் பறிக்கிறாராம். பணம் தரலைன்னா, எல்லாப் பேப்பர்லயும் நியூஸ் போட்டுவேன்னு மெரட்டுறாராம். நாளுக்கு நாலாயிரம் ரூபா இல்லாம, வீடு திரும்புறதில்லையாம்'' என்றாள் சித்ரா.
''அவரைப் பத்தி யாரும், மேல புகார் பண்ணலையா?'' என்றாள் மித்ரா.
''அவரு பெரிய 'பெட்டிஷன்' பார்ட்டியாம்...அதனால பயப்படுறாங்களாம். அந்த தைரியத்துல தான், சாதாரண அசிஸ்டென்டா இருக்கிற அவரு, கவர்மென்ட்ல பர்மிஷனே வாங்காம, தன்னோட பேர்லயே பெரிய ப்ராப்பர்ட்டி ஒண்ணை பதிவு பண்ணிருக்காராம்'' என்றாள் சித்ரா.
''அக்கா...க.க.சாவடியில கலெக்ஷன் பண்ணிட்டு இருந்த பிரேக் இன்ஸ்பெக்டரைத் தூக்கிட்டாங்கன்னு பேசிட்டு இருந்தோமே. அந்த போஸ்ட்டிங்குக்கு வர்றதுக்குப் பயங்கர போட்டியாம். அறுபது லட்ச ரூபாலயிருந்து, 75 லட்ச ரூபா வரைக்கும் பேரம் போயிட்ருக்காம்'' என்றாள் மித்ரா.
''ஏய்...என்னடி சொல்ற....யூ மீன்...75 லேக்ஸ்!''
''ஆமாக்கா... சபரிமலை சீசன் துவங்குதுல்ல. ஆயிரக்கணக்கா வண்டிங்க போகும்ல. அதுலயே, அம்பது, அறுபது லட்சத்தை எடுத்துருவாங்களாம். பேருல பணத்தை வச்சிருக்கிற ஆர்.டி.ஓ.,க்கும், இதுல பெரும் பங்கு போகும். அதனால, தனக்கு வேண்டியவரைப் போடுறதுக்கு, டைரக்டரா அமைச்சர்ட்ட முட்டுறாராம்''
''அப்பிடின்னா, நம்மூர்ல இருக்கிற 7 மாவட்டத்து ஆபீசர் என்ன பண்ணுறாரு?''
''ம்....அவரும் தான் வேற ஒரு 'ட்ராக்'ல முட்டுறாரு. யாருக்கு ஜெயமாகப்போகுதோ?''
''மித்து...சவுத் தாசில்தார் ஆபீசுல இருந்து, ரெண்டு லோடு பழைய பேப்பர், கணக்குல இல்லாம வெளிய போயிருக்கு. அதுல, கலெக்டர் இன்ஸ்பெக்ஷனுக்காக எடுத்து வச்சிருந்த புது பைல்களும் போயிருச்சாம்'' என்றாள் சித்ரா.
''புது பைல் மட்டுமா போகுது? கலெக்டரே கூப்பிட்டு, 'அந்த குவாரியை மூடுங்க'ன்னு சொன்ன பிறகும், பிச்சனுார்ல இருக்குற குவாரியில இருந்து, கேரளாவுக்கு தினமும் 50, 60 லோடு கல்லு போகுது. மைன்ஸ் ஆபீசரு, மூட முடியாதுங்கிறாராம். நம்ம ஊரு வளத்தை, கேரளாவுக்கு பகிரங்கமா கொள்ளையடிச்சிட்டுப் போறாங்க. தடுக்கவே முடியலை'' என்றாள் மித்ரா.
இடையில் புகுந்த மித்ராவின் அம்மா, 'விட்டா... ரெண்டு பேரும் பேசியே நாளை ஓட்டிருவீங்க. வாங்க. சாப்பிட்டுட்டே பேசலாம்' என்று அன்போடு அழைக்க, இருவரும் டைனிங் டேபிளை ஆக்கிரமித்தார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X