எவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரம் தான்: நாளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

Added : டிச 01, 2015
Advertisement
 எவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரம் தான்: நாளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

முடியாதென்ற முடிவு முடமாக்கும் நம் வாழ்க்கையை; முடியுமென்ற தீர்வு திடமாக்கும் நம் சாதனையை. முடியாதென முனகுகிறவனுக்கு விடியாது எந்நாளும். பாசி பிடித்த படிக்கட்டு வழுக்குவது மாதிரி, அவநம்பிக்கை பிடித்த துயரமனம் வாழ்வை வழுக்கித் தள்ளும். எதையும் எதிர்கொள்ளும் வலிமை படைத்த, மாற்றுத்திறன் படைத்த சாதனையாளர்கள், நம்மை சில நேரங்களில் வியக்க வைக்கிறார்கள். சில நேரங்களில் தங்கள் வேகத்தாலும் விவேகத்தாலும் நம்மை இயக்கவும் வைக்கிறார்கள்.கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத சாதனை படைத்த மகத்தான மாற்றுத்திறனாளிகள், சமூகத்தின் நம்பிக்கை அடையாளங்களாகத் திகழ்கிறார்கள். அவர்களின் முயற்சிகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களில் சிலர் இதோ நம் பக்கத்தில்... +2 சாதனையாளர் டெயன்னா பெரோரா பிறவியிலேயே மேகுலர் டி ஜெனரேஷன் எனும் கண்பார்வைக் குறைபாடுடைய, காரைக்காலைச் சார்ந்த +2 மாணவி டெயன்னா பெரோரா. அவரை பள்ளி நிர்வாகம் தனித்தேர்வராகத் தேர்வை எதிர்கொள்ள அறிவுறுத்திப் வெளியேற்றியது. தந்தை, தாய் உதவியோடு இரவுபகலாகப் பாடங்களைக் கேட்டுப் படித்து, பிளஸ் 2 தேர்வில் மாணவி டெயன்னா பெரோரா 1159 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார். சங்கடங்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்பதை, மாணவி நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறார்.
பரதக் கலைஞர் சுதாசந்திரன் மல்பெரி இலைகளுக்கு ஆசைப்பட்டு மரணித்துப் போகும் பட்டுப்புழுக்களாய் நாம் இனியும் மாறத்தான் வேண்டுமா? தமிழகத்தின் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரான சுதாசந்திரன், 1981 ல் பெரும் விபத்தைச் சந்தித்தார். வலதுகால் அறுவை சிகிச்சையில்
அகற்றப்பட்ட நிலையிலும் கலங்கவில்லை.
எதிர்பாராத சவாலைத் துணிச்சலோடு எதிர்கொண்டார். ஜெய்ப்பூரில் செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு, முன்பிருந்த ஊக்கத்தைவிட அதிகமாய் செயல்பட்டார். 1984ல் மயூரி என்ற திரைப்படத்தில் நடனமாடும் பாத்திரத்தைச் சவாலாக ஏற்று நடித்தார்; சரித்திரம் படைத்தார். 1986ல் தேசிய
விருதினை வென்றார். வெளிநாடுகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி உலகப்புகழ் பெற்றார். இன்றும் நடித்துவருகிறார். இருக்கைக்குக் கீழே இறக்கைகளை மாட்டிக் கொண்டு இரவும் பகலும் பறந்து கொண்டிருக்கும் இவரைப் போன்ற மாற்றுத்திறன்கொண்ட சாதனையாளர்களே, உண்மையில் பூமியின் சாதனைப் புத்திரிகள்.
ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன்
நான்காமாண்டு பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன், கடற்படை அதிகாரிக்கான எழுத்துத்தேர்வில் வென்று உடற்தகுதித்திறன் தேர்வில், கயிறுஏறும் பயிற்சியில் இருந்தபோது கீழே தவறிவிழுந்தார். முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். எதுவும் பயனளிக்கவில்லை. கழுத்துக்குக் கீழே அனைத்து உறுப்புகளும் செயல்
இழந்தன. செயல்படாத உறுப்புக்களோடு என்ன செய்துவிட முடியும்? என்று நொறுங்கிப் போன இளைஞன் ராமகிருஷ்ணனுக்கு நம்பிக்கை தந்தவர் அவருக்குச் சிகிச்சை தந்த டாக்டர் அமர்ஜித். “இறைவன் படைப்புக்கு ஆழமான பொருள் உண்டு. யாரையும் அவன் காரணமில்லாமல் படைப்பதில்லை. உன் வழிகாட்டலுக்கு ஆயிரக்கணக்கான மனிதர்கள் காத்திருக்கிறார்கள். எனவே கவலையைவிட்டு உன் சொந்த ஊரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தை நம்பிக்கையோடு தொடங்கு” என்று சொன்னார்.
அதை வேதவாக்காக ஏற்றுக்கொண்ட ராமகிருஷ்ணன், தென்காசிக்கு அருகில் ஆய்க்குடியில், டாக்டர் அமர்ஜித் பெயரால் 32 ஏக்கரில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமர்சேவா சங்கத்தைத் தொடங்கினார். ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சிப்பள்ளி என்று உருவாக்கி
ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் உன்னத மனிதராகத் திகழும் ராமகிருஷ்ணன், சக்கரநாற்காலியில் அமர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிறார்.
மலைத்து நின்றால் எதுவும் குலைத்துவிடும் நம்மை. மலை குலைந்தாலும் நிலை குலையாத ராமகிருஷ்ணனைப்போன்ற லட்சிய மனிதர்களைக் காணும்போதெல்லாம் நாமும் உற்சாகமடைகிறோம். பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஸ்டீபன் ஹோக்கிங், 21 வது வயதில் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் எனும் நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள் செயல்இழந்து, பேசும்திறனையும் இழந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கணினியின் உதவியோடு தான் சொல்வதை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் திறனை வளர்த்துக்கொண்டார். அவர் ஆய்வுகளைக் கைவிடவில்லை. அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு என்ற துறைகளில் இவர் ஆய்வுசெய்து சொல்லியுள்ள ஆய்வுமுடிவுகள் விஞ்ஞானிகளால் முக்கியமானதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகின் ஆய்வறிஞராக அவர் மாறிப்போனார். அவர் எழுதிய 'நேரத்தின் சுருக்க
வரலாறு' எனும் நுால் உலகப்புகழ் பெற்றது. அவர் எந்தநிமிடத்திலும் தன் குறைகுறித்து வருந்தியதோ தன்னை நொந்துகொண்டதோ இல்லை.
சமவெளிகளில் சாதாரணமாய் ஓடும் நீர்தான், அருவியாய் விழும்போது ஆர்ப்பரிப்போடு கொட்டித்தீர்க்கிறது. உடல் குறையை வென்ற பேராசிரியர் உலகின் அறிஞர்கள் மனதையும் தன் ஈடுஇணையற்ற உழைப்பால் வென்றார்.
துயரம் வேண்டாம் உடல் உறுப்பை இழத்தல் குறையன்று; உற்சாகத்தை இழப்பதே உண்மையில் குறை. ஒரு நாள் வாழ்வாயினும் உற்சாகமாய் பறந்து, பின் இறந்து போகும் ஈசலைப்போல் இருக்கும் மனிதர்கள், துயரங்களைத் தாண்டி இந்த உலகில் உற்சாகமாய் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். எவ்வளவு உயரத்தில் வைத்தாலும்,
பள்ளத்தை நோக்கியே பாய்கிற தண்ணீர் போலல்லாது, கீழ்த் தாழ்த்தி வைத்தாலும் வான்நோக்கி உயர்ந்து சுடர்விடும் அக்கினிச்சிறகு போல் உயரப்பறத்தலே உயர்ந்த தத்துவம். இதனை உணர்ந்த மாற்றுத்திறனாளிகள் சாதிக்கிறார்கள். தன் சூழ்நிலைகளைக் குற்றம் சொல்லியே பிறர்மீது பழிபோட்டு வாழாமல், உடலில் உள்ளக் குறைகளை மனதில் வைக்காமல், உறுதியோடும் உற்சாகத்தோடும் எதிர்கொள்கிறவர்களையே வரலாறு வாழ்த்துத் தெரிவித்து வரவேற்கிறது. கத்திக் கதறுகிறவனை நோக்கிக் கத்தியை வீசத்தான் செய்கிறது வாழ்க்கை. எதையும் தாங்கும் வலிமையோடு எதையும் எதிர்கொள்வோம். எவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் துாரத்தில்தான். எனவே புன்னகையோடு எதிர்கொள்வோம் இந்த இனிய வாழ்வை.
-முனைவர் சௌந்தர மகாதேவன்தமிழ்த்துறைத் தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிதிருநெல்வேலி99521 40275

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X