விழுப்புரம்: மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கணவர் மீது விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மாமனார் மனு கொடுத்துள்ளார்.
செஞ்சி அடுத்த என்.ஆர்., பேட்டையை சேர்ந்த நூர்ஜஹான், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் ஜான்மா என்பவரை விக்கிரவாண்டியை சேர்ந்த கவுஸ் மகன் அமீர் என்பவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தோம். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
எனது மகளுக்கு நாங்கள் சீதனமாக வழங்கிய நகைகளை அமீர் தனது அண்ணியிடம் கொடுத்துள்ளார். இதை என் மகள் திருப்பிக்கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் எனது மகளை அமீர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
பின், மருத்துவமனையில் வாக்குமூலம் கொடுக்கும் போது <உண்மையை கூறினால், இரு மகன்களையும் கொலை செய்துவிடுவதாக கூறியுள்ளார். இந்த உண்மையை எங்கள் ஜமாத்தாருடன் சென்று மருத்துவமனையில் பார்த்தபோது, எனது மகள் கூறினார்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி எனது மகள், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்வதாக தெரிய வருகிறது. எனது மகளை கொலை செய்த அமீர் மீது சட்டப்படி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில், நூர்ஜஹான் கூறியுள்ளார்.