சென்னையில் வினியோகிக்க, பிற மாவட்டங்களில் இருந்து, தினமும், 15 ஆயிரம் சமையல் காஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட உள்ளன.
மத்திய அரசின், எண்ணெய் நிறுவனங்களுக்கு, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார், மணலி, கும்மிடிப்பூண்டியில், சமையல் காஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்கள் உள்ளன. இவற்றில், வௌ்ள நீர் புகுந்ததால், காஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னை, காஞ்சி, திருவள்ளூரில், காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து, பிற மாவட்டங்களில் உள்ள காஸ் நிரப்பும் மையங்களில் இருந்து, சென்னைக்கு தினமும், 15 ஆயிரம் சிலிண்டர்கள் கொண்டு வர, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை, காஞ்சி, திருவள்ளூரில், தினமும், ஒரு லட்சம் பேர், காஸ் சிலிண்டர் முன் பதிவு செய்வர். தற்போது, வௌ்ள பாதிப்பால், பலர், வீடுகளை விட்டு வௌியேறி உள்ளனர். இதனால், சிலிண்டர் முன் பதிவு, 20 ஆயிரம் என்றளவில் உள்ளது.இந்நிலையில், மணலி, எண்ணுார், கும்மிடிப்பூண்டி மையங்களில் தண்ணீர் சூழ்ந்ததால், ஆலைகளை இயக்க முடியவில்லை. இதனால், திருச்சி, சேலம், செங்கல்பட்டில் இருந்து, சென்னைக்கு தினமும், 15 ஆயிரம் சிலிண்டர் என, டிச., 14 வரை, கொண்டு வரப்பட உள்ளன.மணலி, எண்ணுாரில் உள்ள காஸ் நிரப்பும் மையங்களில், தண்ணீர் அகற்றும் பணி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தண்ணீரில் சென்ற 'புக்':
வௌ்ள நீர் புகுந்த வீடுகளில், எண்ணெய் நிறுவனங்கள் வழங்கிய, காஸ் சிலிண்டர் புத்தகம் உட்பட, முக்கிய ஆவணங்கள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள், காஸ் ஏஜன்சிக்கு சென்று, முகவரியை தெரிவித்தால் போதும். அவர்களின் பதிவு எண் கண்டறிந்து, மாற்று புத்தகம் வழங்கப்படும்.
- நமது நிருபர் -