பொது செய்தி

தமிழ்நாடு

தென் சென்னை மிதக்க இது தான் காரணம் 13 ஆண்டுகளில் நீர்நிலைகள் கபளீகரம்

Updated : டிச 09, 2015 | Added : டிச 08, 2015 | கருத்துகள் (47)
Advertisement
தென் சென்னை மிதக்க இது தான் காரணம் 13 ஆண்டுகளில் நீர்நிலைகள் கபளீகரம்

சென்னை நகரம் முன் எப்போதும் இல்லாத வகையில், வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கு திட்டமிடாத வளர்ச்சி தான் காரணம் என்றாலும், நீர்நிலைகளையும், விலைமதிப்பில்லா, சதுப்பு நிலங்களையும், கண்மூடித்தனமாக, 'கான்கிரீட்' காடுகளாக மாற்ற, அரசு உடந்தையாக இருந்ததே காரணம் என்பது, மீண்டும் உறுதியாகியுள்ளது.

சோழிங்கநல்லுார் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் முளைத்திருக்கும், ஐ.டி., கட்டடங்களுக்காக, நிலப் பயன்பாடு மாற்றம் பெரும் அளவில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பழைய மகாபலிபுரம் சாலையே, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் நீரோட்டத்தைத் தடை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நீர்நிலைகள் கபளீகரம் செய்யப்பட்டதையும், இது தானாக உருவானதல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. சென்னை, தாழ்வான, தட்டையான நிலப்பரப்பை உடையது. இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அதை ஈர்த்து தன்னுள் தாங்கி பிடித்துக் கொள்வதற்கும், இயல்பான நீரோட்டத்துக்கும், இயற்கையாக அமைந்த சதுப்பு நிலப்பகுதிகளும், கால்வாய்களும் அதிக அளவில் இருந்தன. கடந்த, 2000ம் ஆண்டில், சென்னையில், ஐ.டி., என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மாநில அரசு முன்னுரிமை தரத் துவங்கியது. தென் சென்னை, புறநகர்ப் பகுதிகள் அமைந்திருக்கும் காஞ்சி மாவட்டத்தில், தொழில் நிறுவனங்கள் பெருகவும் ஊக்கம் அளித்தது.


ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்:

* ஐ.டி., நிறுவனங்கள் பெருகப் பெருக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தரமணி, சோழிங்கநல்லுார் பகுதிகளில், இதர நிறுவனங்களும், குடியிருப்புகளும், சென்னை நகருக்குள் இல்லாத வகையில், வானுயர் கட்டடங்களும் கட்டப்பட்டன. அதற்கு ஏற்றார்போல், நில உபயோக மாற்றம் செய்யப்பட்டது. விளை நிலங்களாக, நீர்நிலைகளாக இருந்த பகுதிகள், கண்மூடித்தனமாக குடியிருப்பு பகுதிகளாக உருமாறின. அப்பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கல்வி நிறுவனங்களும் உருவாகின.
* இத்துடன், 174 சதுர கி.மீ., பரப்பளவில் இருந்த, சென்னை மாநகரம், காஞ்சி மாவட்டத்தின் பல பகுதிகளை உள்ளடக்கி, 426 சதுர கி.மீ., கொண்ட விரிவாக்கப்பட்ட மாநகராட்சியாக, 2009ல் மாறியது. அதன்பின் அப்பகுதி, முன்னிலும் வேகமாக விரிவடைந்தது. இது போன்ற காரணங்களால், வெள்ள நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களில், நீரோட்டம் தடைபட்டது.
* வெள்ள நீரை, பூமிக்குள் பெருமளவில் தேக்கி வைக்கும், விலை மதிப்பில்லாத, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டுப்பாடின்றி ஆக்கிரமிப்புகள் நடந்தன. இதுதவிர ஒக்கியம் மடுவு உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட தீவு போன்ற சிறு, சிறு, நீர்நிலைகள், கான்கிரீட் கட்டடங்களாக மாறின.
* பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கட்டப்பட்டிருக்கும் மேம்பால ரயில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள என்.ஐ.ஓ.டி., எனப்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ள, ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலம் என, அரசே, ஆக்கிரமிப்பு செய்வோருக்கு வழிகாட்டி விட்டது.
* பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பை கொட்டும் இடமும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தான் உள்ளது. 1960களில், 15 ஆயிரம் ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது 1,500 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிப் போய்விட்டது.
* இது போல், கிழக்கு கடற்கரைச் சாலையில் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில், கால்வாய் போன்ற நீர்நிலைகளை, செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், தங்களுக்குள் பங்கு போட்டு, கோடி கோடியாக குவித்தனர்.

நகர்ப்புறமயமாதலில் காட்டிய தீவிரத்தை, நீர்நிலைகளை காப்பதில் அரசு காட்டாததன் விளைவாக, மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, புறநகர்ப் பகுதியையே, ஒரு மாபெரும் ஏரிக்குள் எடுத்து வைத்தது போல் தத்தளிக்கிறது.எல்லாவற்றையும் கண்டும், காணாமல் இருந்துவிட்டு, இப்போது குத்துதே, குடையுதே என புலம்புவதற்கு, யார் காரணம் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


புறநகர் ஆக்கிரமிப்பு:

புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை, 'தி நியூஸ் மினிட்'
ஆங்கில செய்தி இணையதளத்தில், சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் என்பவர் வெளியிட்டுள்ளார். அதில், 2002 - 06ல் தென் சென்னை புறநகர்ப் பகுதிகள் எப்படி இருந்தன; அவை இப்போது எப்படி மாறியுள்ளன என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் :உத்தண்டியில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கோவளம் சிற்றோடைக்கு இடைப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மணற்பாங்கு, மழைநீரை உறிஞ்சும் அபரிமிதமான சக்தியைக் கொண்டது.

சிறுசேரி, ஐ.டி., பூங்கா:இரண்டு நீரோட்ட கால்வாய்கள், இணைந்து கடலுக்குச் செல்லும் வழியில், கோவளம் சிற்றோடையில் சேருமிடத்தில், 'சிப்காட்' உருவாக்கியுள்ள ஐ.டி., பூங்காக்கள், நீரில் மிதப்பதில் ஆச்சரியம் இல்லை.

செம்பரம்பாக்கம் ஏரி:இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், 'ஹுண்டாய்' போன்ற ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.

ஒரகடம்:2006ல் விளைநிலங்களாகவும், ஏரிகளாகவும், நீர்ப்பிடிப்புப் பகுதியுமாக இருந்த ஒரகடம், இன்று, 'டெய்ம்லர், பென்ஸ், ரெனோ -நிசான்' போன்ற சர்வதேச ஆலைகளின் வரவால் தன் முகத்தை இழந்துவிட்டது.

பள்ளிக்கரணை:2004 மற்றும் 2008 இடையே, ஒரு பெரிய, ஐ.டி., நிறுவன கட்டடம் உருவான பகுதியை, வழக்கறிஞர் டி.கே.ராம்குமார் என்பவர், இந்த புகைப்படம் வாயிலாக சித்தரித்துள்ளார்.

வேளச்சேரி:மேம்பால ரயில் வருவதற்கு முன், அதன்பின், வேளச்சேரியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கு இன்று ஏற்பட்டிருக்கும் கதி, ஆச்சரியத்தைத் தராது.

- - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
14-டிச-201523:41:42 IST Report Abuse
Indhiyan சென்னையில் ரியல் எஸ்டேட் அடிமட்டத்துக்கு அடிவாங்கினால் ரியல் எஸ்டேட் காரர்களை ஓரளவு கட்டுபடுத்தலாம். பேராசையே காரணம். மக்களும் ஓரளவுக்கு கட்டுக்கு வருவார்கள். எல்லா தொழில்களுக்கும் சென்னையே தேவை என்பதில் இருந்து பிற நகரங்களும் சென்னைக்கு சமமான தொழில் நகரமாக மாற வேண்டும். சென்னையே கதி என்னும் நிலை மாறவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை இன்னும் இரண்டு மடங்கு ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
manirangasamy - udumelpet,இந்தியா
12-டிச-201509:34:00 IST Report Abuse
manirangasamy சுமார் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன, உண்மையும் அதுதான் ஆக 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னையை 426 சதுர மீட்டர் பரப்பளவாக்கியது, பேராசை, பணம் சம்பாறிக்கும் வழிமுறை,மக்களின் மனதில் இடம் பிடிக்கும் அசட்டுத்தனமான,எதற்கும் இறங்கிவரும் கேவலமான குறுகிய புத்தி, எதிர்கட்சிக்காரர்களை, வர விடாமல் தடுக்கும் எண்ணம், மக்கள் வரிப்பணத்தில் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துகொள்வது போன்றவையே 50 லட்சம் பேரை பாதித்துள்ளது என்பது நிதர்சனம், ஆக மீண்டும் வெளியேறிய அவர்களை உள்ளே அனுமதித்தால், வளர்ச்சியின் வேகம் கூடுதலாகும் ஆனால் எதிர் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் எல் நினோ மூலமாக நடைபெறும் என்று தென்னாட்டை குறிப்பிட்டுருக்கிறது, ஐ நா சபை , சதுப்பு நிலக்காடுகள் வாழத்தகுதியற்ற இடமாகும் ஆகையால் இனி வரும் காலங்களில் அரசு என்ன செய்யப்போகிறது மக்களின்[வரி]பணமா மக்கள்மீது பாசமா ?வள்ளுவனின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன ..... பீலி செய் சாகாடும் அச்சிறும் -அப்பண்டம், சால மிகுத்துப்பெயின் ....... குருவி தலையில் பனங்காய் ?,தாங்காது சென்னை என்ன செய்ய போகிறது அரசு ?
Rate this:
Share this comment
Cancel
manirangasamy - udumelpet,இந்தியா
12-டிச-201508:45:31 IST Report Abuse
manirangasamy யாருக்கும் வெட்கமில்லை இதில் நீருக்கு மட்டும் வெட்கம் வேண்டி எதிர் பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது, அரசியல்வாதிகள்,கவுன்சிலர்கள்,மெம்பர்கள், ரியல் எஸ்டேட் காரர்கள்,பணம் படைத்தவர்கள் என்று இல்லாமல் அரசே கூட பூகோள அமைப்பை வெட்கமில்லாமல் அலட்சியப்படுததியதின் விளைவே தற்போது தமிழகம் வெட்கி தலை குனிந்து நிற்கிறது, தமிழகத்தை பற்றி வெட்கமில்லாமல் ஓட்டுக்கு காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களுக்கும் வெட்கமில்லை,ஒட்டு வாங்கிக்கொண்ட ஆட்சியாளர்களுக்கும் வெட்கமில்லை, இவர்கள் சொன்னதைக்கேட்ட வந்தேரிகளுக்கும் வெட்கமில்லை, ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை, இதிலே நீருக்கு மட்டும் ஏன் வெட்கம் வர வேண்டும் ?தன் சொந்த இடத்திற்க்குத்தானே வந்துள்ளது, தான் குடி இருக்கும் தலைநகரையே காக்கதெரியாத தலைவன் தன் நாட்டை எப்படி காப்பாற்றுவான் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X