முப்பது பர்சண்டேஜ் கமிஷன்... - மூச்சு முட்டும் கலெக்ஷன்!| Dinamalar

முப்பது பர்சண்டேஜ் கமிஷன்... - மூச்சு முட்டும் கலெக்ஷன்!

Added : டிச 08, 2015
Share
பீளமேட்டிலுள்ள திருமண மண்டபத்தில், சென்னைக்கு அனுப்பும் நிவாரணப் பொருட்களை 'பேக்' செய்வதில், சித்ராவும், மித்ராவும் 'பிஸி'யாக இருந்தார்கள். சுற்றிலும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.''அக்கா! ரொம்பப் பசிக்குது. வெளியில போய், ஒரு டீ சாப்பிட்டு வருவமா?'' என்றாள் மித்ரா.இருவரும் கிளம்பி, ஆவின் பாலகத்துக்கு வந்தார்கள். டீ
முப்பது பர்சண்டேஜ் கமிஷன்... - மூச்சு முட்டும் கலெக்ஷன்!

பீளமேட்டிலுள்ள திருமண மண்டபத்தில், சென்னைக்கு அனுப்பும் நிவாரணப் பொருட்களை 'பேக்' செய்வதில், சித்ராவும், மித்ராவும் 'பிஸி'யாக இருந்தார்கள். சுற்றிலும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
''அக்கா! ரொம்பப் பசிக்குது. வெளியில போய், ஒரு டீ சாப்பிட்டு வருவமா?'' என்றாள் மித்ரா.
இருவரும் கிளம்பி, ஆவின் பாலகத்துக்கு வந்தார்கள். டீ சொல்வதற்குள், ஒரு சிறுவன் வந்து 'டீ பார்சல்' என்றான்.
பிளாஸ்டிக் பையில், சுடச்சுட டீயை ஊற்றி, 5 பிளாஸ்டிக் டம்ளரை எடுத்து, இரண்டையும் சேர்த்து, ஒரு பாலித்தீன் 'கேரி பேக்'கில் போட்டுக் கொடுத்தார், கடைக்காரர்.
''மித்து! இங்க பாரு. இந்த டீயை தினமும் குடிச்சா, குடிக்கிறவனுக்கு 'கேன்சர்' வந்துரும். குடிச்சிட்டு, இதை கால்வாய்ல போட்டா அது அடைச்சிரும். அப்புறம் ஏன் வீட்டுக்குள்ள வெள்ளம் வராது. வா, நம்ம வேற கடைக்குப் போவோம்'' என்று இழுத்துக் கொண்டு, ஒரு ஓட்டலில் நுழைந்தாள் சித்ரா. காபி சொன்னார்கள்.
''என்னக்கா...குஜராத் பூகம்பம், உத்தர்காண்ட் வெள்ளம்னு, எங்கேயோ இருக்கிறவுங்களுக்கு பாதிப்புன்னாலே, நம்ம கோயம்புத்தூர்லயிருந்து தான், முதல்ல உதவி குவியும். ஆனா, நம்ம மக்களுக்கு இவ்ளோ பாதிப்பு ஆயிருக்கு. ஏதாவது உதவி பண்ணுங்கன்னு கலெக்டராபீஸ்ல இருந்து, ஒரு கோரிக்கை, அறிக்கை எதையுமே காணோமே'' என்று கொதித்தாள் மித்ரா.
''அந்த மேட்டர் தெரியாதா உனக்கு...கலெக்ட்ரேட்ல இருந்து, நிவாரண உதவி கொடுக்கலாம்னு முதல்ல சொல்லிட்டாங்க. அதைப்பாத்துட்டு, நிறைய்யப்பேரு, நிதி, பொருளோட போயிருக்காங்க. ஆனா, கவர்மென்ட்ல இருந்து எந்தத் தகவலும் வரலைன்னு சொல்லி, திருப்பி அனுப்பிட்டாங்க'' என்றாள் சித்ரா.
''இதை வாங்கிக் கொடுக்குறதை விட, கலெக்டர்களுக்கு என்னக்கா வேலை...?''
''முழுசாக்கேளு...நம்மூர்ல இருக்குற தொழில் அமைப்புகள், தனித்தனியா ஏகப்பட்ட பொருட்களை 'கலெக்ட்' பண்ணி அனுப்புறாங்கள்ல. அதுல ஒரு அமைப்பைச் சேர்ந்தவுங்க, 'நாங்க புதுப்பொருளா வாங்கி வச்சிருக்கோம். அனுப்புறதுக்கு லாரிகளுக்கு மட்டும் உதவி பண்ணுங்கன்னு, டிரான்ஸ்போர்ட் பெரிய ஆபீசர்ட்ட கேட்ருக்காங்க''
''அவரு, அதுக்கும் காசு கேட்டாரா?''
''இல்லையில்லை...'எனக்கும் உதவணும்னு ஆசையாத்தான் இருக்கு. ஆனா, இது கவர்மென்ட்டுக்குத் தெரிஞ்சா, என் சீட்டு காலியாயிரும். அதனால, நீங்களே ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கோங்க'ன்னு, கையெடுத்துக்கும்பிட்டு அனுப்பி வச்சிருக்காரு''
''எல்லாரும், அவுங்கவுங்க பதவியைக் காப்பாத்திக்கிட்டா போதும்னு தான் இருக்காங்க'' என்றாள் மித்ரா.
''இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா, நம்மூர்ல இருந்து அனுப்புன எல்லாமே புது பொருள்தான். இதெல்லாம், உண்மை
யிலேயே இல்லாதவங்களுக்குக் கிடைச்சா நல்லது'' என்றாள் சித்ரா.
''அதுலயும் ஆளும்கட்சிக்காரங்க, பிரச்னை பண்ணிருக்காங்க. இங்கயிருந்து கடலுாரு, சென்னைக்குப் போன பல லாரிகளை, அங்கங்க மறிச்சு, 'நாங்களே எல்லாத்தையும் கொடுத்துக்கிறோம்'னு, ஆளுகளைத் திருப்பி அனுப்பிருக்காங்க. நாம கொடுத்த பொருட்கள் மேல, 'அம்மா' ஸ்டிக்கரை ஒட்டி, மக்களுக்குக் கொடுக்குறாங்களாம்'' என்றாள் மித்ரா. காபி வந்தது. ஆற்றிக்கொண்டே பேசினாள் சித்ரா.
''அது சரி...அந்த நடிகர் எங்க போனாரு, இந்த ஹீரோ எதுவுமே கொடுக்கலைன்னு 'வாட்ஸ் அப்'ல வறுக்குறாங்களே. அமைச்சர்க, எம்.எல்.ஏ.,க்களெல்லாம் எவ்ளோ கொடுத்தாங்கன்னு யாருமே கேக்குறதில்லை''
''ஆமாக்கா...எல்லாரும் குறையாவா சம்பாதிச்சிருக்காங்க. ஆளுக்கொரு ஏரியாவை எடுத்துக்கிட்டு, அஞ்சு, பத்து கோடி ரூபா செலவழிச்சு, நிவாரண உதவி கொடுத்தா, கட்சிக்காவது பேரு வருமேன்னு ஏடிஎம்கேகாரங்களே பேசிக்கிறாங்க''
''குளம், குட்டைகளை மூடுறது தான், இத்தனை பிரச்னைக்கும் காரணம்னு தெரிஞ்சே, நம்மூர்ல இப்பக்கூட, குளத்தை மூடிட்டு தான் இருக்காங்க. அதைப் பண்றதும், ஆளும்கட்சி ஆளுங்க தான்''
''குறிச்சி குளத்துக்கு எதிர்ல இருக்குற சின்னக் குளத்தை மூடுறதைச் சொல்றியா...'மணி'யான அந்த கவுன்சிலரைப்பத்தி, போலீஸ் கமிஷனர்ட்ட வக்கீலுக புகார் கொடுத்தாங்களே. என்னாச்சு...?'' என்றாள் மித்ரா.
''இதுவே எதிர்க்கட்சி கவுன்சிலரா இருந்தா, இப்பவே கேசைப் போட்டு, உள்ள தூக்கிப் போட்ருவாங்க. இப்பவும் அந்த கவுன்சிலர், அரவாண்
திருவிழாவுக்கு ராட்டினம் போடுறதுக்கு, கிரவுண்டை ரெடி பண்ணிட்டு இருக்காரு'' என்றாள் சித்ரா.
''ஏற்கனவே, மழை பேஞ்சு, அந்த மண்ணெல்லாம் லுாசாயிருக்கும். அதுல, ராட்டினத்தை வச்சு, குழந்தைங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, அதுக்கு இவரு பொறுப்பு ஏத்துக்குவாரா?'' என்றாள் மித்ரா.
''நீ ரொம்பத்தா எதிர்பார்க்கிற மித்து...!'' என்றாள் சித்ரா.
''நான் எதிர்பார்க்லைக்கா. நம்ம கார்ப்பரேஷனை 'கன்ட்ரோல்' பண்ற ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்களும், ஆபீசர்களும் தான் ரொம்ப ஆசைப்படுறாங்க. ஜேஎன்என்யுஆர்எம் திட்டத்துல, சிட்டிக்குள்ள குடி தண்ணி விநியோகத்தை விரிவுபடுத்துற வேலைக்கு, 556 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விட்டாங்களே. அதுல, பத்து பத்தா முப்பது
பர்சண்டேஜ், மொத்தமா கமிஷனா போகப்போகுதாம்'' என்றாள் மித்ரா.
''என்ன மித்து சொல்ற...முப்பது பர்சண்டேஜ் அவுங்களுக்குப் போய்...அதுக்கு மேல கான்ட்ராக்டர் லாபம் வச்சு, வேலையப் பார்த்தா, அந்த வேலை எந்த லட்சணத்துல இருக்கும்?'' என்றாள் சித்ரா.
''இருக்கிறதே ஆறு மாசம்...அதுக்குள்ள அறுவடை பண்ண வேண்டாமா?''
''கரெக்ட் மித்து...கோயம்புத்தூருக்கு சிஎம் அறிவிச்ச திட்டங்களுக்கு, அதுக்குள்ள நிதி வராதுன்னு, ஆபீசர்களே திட்டவட்டமாச் சொல்லிட்டாங்க''
''ஏன்க்கா...நிதியில்லையா?''
''அது தெரியலை...இப்போ, சென்னை பாதிப்புகளைச் சரி பண்ணவே, ரெண்டு, மூணு மாசம் ஓடிரும். அதுக்குள்ள எலக்ஷன் வந்துரும்''
''எலக்ஷன்னு சொன்னதும், ஞாபகம் வந்துச்சு. டிஎம்கேல யார் யாருக்கு 'சீட்' கொடுக்குறதுன்னு, ஒவ்வொரு தொகுதிக்கும் அஞ்சு பேரு 'லிஸ்ட்' எடுத்திருக்காங்க. அதை 'செலக்ட்' பண்ணுன 'ஸ்பெஷல் டீம்'ல இருக்கிறவுங்க, இங்க இருக்கிற கட்சி நிர்வாகிகளைப் பத்தி, ஏகப்பட்ட விஷயங்களை 'கலெக்ட்' பண்ணிக் கொடுத்திருக்காங்க. அநேகமா, தேர்தலுக்கு முன்னயே, சில பேரை தூக்குனாலும் தூக்கிருவாங்களாம்'' என்றாள் மித்ரா.
''மித்து! எம்.எல்.ஏ., சீட்டுன்னு சொன்னதும், எனக்கு நம்மூரு ஆளும்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரு, கெரடி கோவில்ல போய் கொந்தளிச்சது
ஞாபகத்துக்கு வந்துச்சு''
''என்னாச்சு...மாலை, மரியாதை எதுவும் செய்யலைன்னா?''
''அதெல்லாமில்லை. அங்க ராக்கால பூஜை நடக்குற நேரத்துக்கு இவரு போயிருக்காரு. அந்த நேரத்துல, கொஞ்ச நேரத்துக்கு அர்ச்சனை, மரியாதை எதுவும் செய்ய மாட்டாங்கள்ல. அது தெரியாம, 'என்னையவே நிக்க வக்கிறீங்களா. யாரு இங்க இ.ஓ., யாரு இந்த அர்ச்சகர்'ன்னு கொந்தளிச்சிருக்காரு. கூடப்போன டாஸ்மாக் புகழ், கருப்பு கவுன்சிலரும், தன்னோட பங்குக்கு அர்ச்சகரை அர்ச்சனை பண்ணிருக்காரு'' என்றாள் சித்ரா.
''என்னக்கா இது...கோவில்ல என்ன நடைமுறைன்னு கூடத் தெரியாம, இவரெல்லாம் எப்பிடி எம்.எல்.ஏ.,வானாரு?'' என்றாள் மித்ரா.
காபியைக் குடித்து விட்டு, பில் கொடுத்து விட்டு, இருவரும் வெளியே வந்தனர். சிக்னலைக் கடக்கும்போது, கேட்டாள் சித்ரா.
''என்ன மித்து...மறுபடியும் 'சிக்னல்' எல்லாம் நல்லா 'ஒர்க்' பண்ணுது''
''அது தான், ஏற்கனவே 'பிக்ஸ்' பண்ணுன அந்த அஞ்சு கம்பெனிகளுக்கே 'டெண்டர்' கொடுத்துட்டாங்களே. ஒரு வி.ஐ.பி.,க்கு ஒன்றரை கோடி ரூபா கொடுத்து, கான்ட்ராக்ட்டை கரெக்ட் பண்ணிட்டாங்களாம். கலெக்டரும் அனுமதி கொடுத்துட்டாங்க. டிராபிக் போலீஸ் ஆபீசர்கதான் 'வடை போச்சே'ன்னு புலம்புறாங்க''
''போலீஸ்ன்னதும் ஞாபகம் வந்துச்சு. வெரைட்டி ஹால் ரோட்டுல உளவு வேலை பார்த்த ஒரு நேர்மையான போலீசை, பான் வியாபாரிங்க சேர்ந்து, திருநெல்வேலிக்கு தூக்கி விட்டாங்க. அதுலயிருந்து சிட்டிக்குள்ள தாறுமாறா பான் மசாலா விக்குது. போலீசுக்கு மாமூல் கொட்டுது''
''நான் ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன். தாமஸ் வீதியில, ரியல் எஸ்டேட் ஆபீசுல, போலி போலீஸ் ஒருத்தரும், வேற ஊருல வேலை பாக்குற ரெண்டு போலீஸ்காரங்களும் சேர்ந்து, பிரைவேட் போலீஸ் ஸ்டேஷன் நடத்தி, செம்ம கட்டப்பஞ்சாயத்து பண்றாங்களாமே'' என்றாள் மித்ரா.
அதை காதில் வாங்காதவளாய், 'வா வா, நிறைய வேலை இருக்கு' என்று ரோட்டைக் கடந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X