ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்? இன்று(டிச.,9) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்| Dinamalar

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்? இன்று(டிச.,9) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

Updated : டிச 09, 2015 | Added : டிச 08, 2015 | கருத்துகள் (8)
 ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்? இன்று(டிச.,9) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

இன்று நம் நாட்டில் நிலவும் நிலை என்ன? ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஊழலுக்கு துணை போபவர்கள், ஊழலை அனுசரித்து வாழப்பழகிப்போனவர்களாக இருக்கிறார்கள்.

ஓட்டுனர் உரிமம் பெறுதல், ரேஷன் கார்டு புதுப்பித்தல், பிறப்பு சான்றிதழ் பெறுதல், குடிநீர், மின் இணைப்பு பெறுதல், வீடு கட்ட அனுமதி பெறுதல், குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான போலீஸ் விசாரணை அறிக்கை அளித்தல் போன்றவற்றிக்கு ஒரு தொகையை லஞ்சமாகவோ அல்லது 'அன்பளிப்பு' என்ற பெயரிலோ கொடுத்து, காலதாமதமின்றி தங்கள் காரியங்களை முடித்துக்கொள்வதில் தவறில்லை என்ற மனநிலைக்கு பொதுமக்கள் மாறிவிட்டனர்.

இத்தகைய மனப்போக்கானது, தங்களது கடமையை செய்வதற்கு பெறப்படும் லஞ்சத்தை, பொதுமக்கள் அங்கீகரித்து விட்டனர் என்ற உணர்வை லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் கொடுப்பவராகவோ அல்லது லஞ்சம் பெறுபவராகவோ இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை. விதிமுறைகளுக்குட்பட்ட காரியங்களை செய்து கொடுக்க, லஞ்சம் கொடுப்பவர்களுக்கு உடனடியாக செய்து கொடுப்பதும், கொடுக்காதவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தை கூறி இழுத்தடிப்பதும் இன்று வாடிக்கையாகிவிட்டது.

இன்றைய சூழலில், ஒரு நியாயமான, சட்டவிதிமுறைகளுக்குட்பட்ட காரியத்தை செய்து கொள்வதற்கு லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை ஒருவர் மேற்கொண்டால், அவர் சமுதாயத்தில் சந்திக்க வேண்டிய இடையூறுகளும், அதன் விளைவாக ஏற்படும் மனவேதனையும் அளவிட முடியாதது. இதுபோன்ற நிலைப்பாட்டை எடுத்தவரை காட்டிலும், அவரது குடும்பத்தினரின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கும்.


நேர்மைக்கு சோதனை:

தனது பணியில், லஞ்சம் வாங்கமாட்டேன் என்று கடமையாற்றும் சில அரசு அலுவலர்களும் உள்ளனர். அவர்களது நேர்மையான செயல்பாட்டால், உடன் பணியாற்றும் ஊழியர்கள், உயர் அதிகாரிகளின் விரோதம், அதிருப்தியை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. அதுபோன்ற அலுவலர்களின் வாழ்க்கை நிலையை, அரசு பணியேற்கும் இளைய தலைமுறையினருக்கு உதாரணமாக காட்டப்படும் சூழலும் இன்று நிலவி வருவதை காணமுடிகிறது.நேர்மையான செயல்பாடு என்பது அரசு பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறையாகும்.

மாறாக, எந்தெந்த சந்தர்ப்பங்களில் நேர்மையையும், சட்டவிதிமுறைகளையும் விட்டு விலகிச் செல்ல முடியும் என்பதை ஆராய்ந்து, ஊழல் புரிவதற்காக மாற்றுப்பாதையை தேடுவதில் பொதுமக்கள் பலர் முனைகின்றனர்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை, பல்வேறு காரணங்களை கூறி, செலுத்தாமல் இருப்பதும் ஒரு வகை ஊழல்தானே!கடந்த அரை நுாற்றாண்டில் கல்வி, விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தில் கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ள நம் நாட்டில் ஊழலும், அதுதொடர்பான செயல்பாடுகளும் அளவுக்கு அதிகமாக தலைதுாக்கியுள்ளன. பணம் ஈட்டுவது குறித்து சமுதாய பார்வையும் மாறத் தொடங்கியுள்ளது. நேர்மையாக வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை முறை என்ற நிலை, மாறி வருவதை காண முடிகிறது.

நிறுவனங்களுக்கு சலுகை ஊழல்: அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சம் பற்றி பேசும் சமுதாயம், உள்நாடு, வெளிநாடு கம்பெனிகளுக்கும், நிதிநிறுவனங்களுக்கும் வழங்கப்படும் வரம்புமீறிய சலுகைகள் அதிகமாக பேசப்படுவதில்லை. காலப்போக்கில், அந்த நிறுவனங்கள் செயல்இழக்கும்போது, ஊழல் செயல்பாடுகளும் காலம் கடந்து வெளியாகின்றன. சில சமயம் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாகின்றனர். அத்தகைய ஊழல் செயல்பாட்டால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும், சேதமும் பொதுமக்களின் சுமையாகத்தான் அமைகின்றன.

இந்திய மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் ஊழல் மிக அதிகமாக வியாபித்துள்ளதை காணமுடிகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டங்களை ஊழல் சீரழிப்பதோடு, அந்நாட்டின் நிலையான ஆட்சிக்கும், உள்ளநாட்டு பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக விளங்குகின்ற நிலையை காண முடிகிறது. சர்வதேச அளவில் ஊழலை தடுக்க, ஐ.நா., அமைப்பு, 2003 அக்.,31ல், ஊழலுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி, அதை உலக நாடுகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது.


இந்தியாவுக்கு 86வது இடம்:

ஒவ்வொரு ஆண்டும் டிச.,9 ஐ சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து, ஊழலின் நச்சுத்தன்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென தெரிவித்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம், 2014ல் வெளியிட்ட அறிக்கைபடி, ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 175 உலகநாடுகளில் ஊழல் தரவரிசையில் 86ம் இடத்தில் உள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரித்துவிட்டு, மற்ற நாட்களில் 'மாமூல்' வாழ்க்கையை தொடர்வதால் ஊழல் ஒழிப்பில் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது. சட்டவிதிமுறைக்குப்பட்ட காரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடவேண்டும்.

லஞ்சம் கேட்பவரிடம், 'லஞ்சம் ஏன் கொடுக்கணும்' என கேட்க வேண்டும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். லஞ்சப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாநில லஞ்சஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வு துறைக்குரியது என எண்ணி, தங்களது பங்களிப்பை புறக்கணிக்கக்கூடாது.


ஆசிரியர்களின் பொறுப்பு:

ஊழலுக்கு எதிரான உணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பில் பெரும்பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்களே.

தேர்வுக்குரிய பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்காமல், ஊழலின் கறைபடியாமல் களங்கமற்ற மனிதர்களாக வாழ்வில் திகழும் வழிமுறைகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஊழலுக்கு அடிப்பணியாமல் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு உணர்வை வளர்ப்பதில் வெளியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தமக்குத்தாமே விதித்துக்கொண்டவையாக இருப்பின், அது நிச்சயமாக நல்ல பலனை தருகின்றன என்று காந்திஜியின் வாக்கு, இன்றைய யதார்த்த நிலையை உணர்த்துகிறது.-

பி.கண்ணப்பன் ஐ.பி.எஸ்.,ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.,pkannappan29755@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X