ஊட்டி: மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்ட போலீசாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா-தமிழக எல்லையோர வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட் அமைப்பினரின் செயல்பாடுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ், நக்சல் தடுப்பு படை, வனத்துறையினர் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆயுதப்படை சார்பில், போலீசாருக்கு, ஆண்டுக்கு இரு முறை அளிக்கப்படும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான முதற்கட்டப் பயிற்சி, ஊட்டி ஷூட்டிங் மட்டத்தில் துவக்கப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
போலீசாருக்கு ஆண்டுக்கு இரு முறை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பது வழக்கமான ஒன்று தான். நீலகிரி எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதால், துப்பாக்கி சுடுதலில் ஒவ்வொரு போலீசாரும் கை தேர்ந்து இருப்பது அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.