'பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்' என்றார் திருவள்ளுவர். அவரது வாக்கு இன்று வித்தியாசமான வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆம்... கடந்த சில தினங்களில் தமிழகமெங்கும் கொட்டித்தீர்த்த பருவ மழை, பல படிப்பினைகளை நமக்கு கொடுத்துள்ளது. குறிப்பாக சென்னை நகரம், வெனிஸ் நகரானது. எப்போதும்போல் அரசியல்வாதிகள் இதையும் அரசியலாக்கி தங்கள் கடமையை சிறப்பாக செய்து வருகின்றனர்.
தொலைக்காட்சி செய்தி பிரிவுகளோ, 'போச்சு போச்சு எல்லாம் போச்சு' என்கிற ரீதியில் பொதுமக்களை மேலும் பீதிக்கு ஆளாக்கி வருகின்றன. மேல்தட்டு மக்களோ எதை பற்றியும் கவலைப்படவில்லை. நடுத்தர மக்களோ, 'இதற்கு அரசு பொறுப்பு' என்கின்றனர். ஆனால், இது எல்லாவற்றையும் விட மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒரு பிரிவு இருக்கிறதே அவர்கள், பாதுகாப்பான இடங்களுக்குப் போய், கிடைப்பதை உண்டு, தங்கள் உயிரை தக்கவைத்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. வழக்கமாக, இதர பிரிவு மக்களின் கழிவுகளுக்கு நடுவில் ஆண்டு முழுவதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
முதலில் அரசு இயந்திரம் என்பது, ஆளுங்கட்சி அல்ல என்பதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை இடர் என்றால், அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு வர வேண்டும். தாம் குடியிருக்கும் பகுதிக்கு ஒரு அதிகாரி கூட வரவில்லை என்றும், குப்பை அள்ளவில்லை, சாக்கடை சுத்தம் செய்யவில்லை என்பதும் தான், பரவலான குற்றச்சாட்டு.இதை செய்ய கடமைப்பட்டவர்கள் எல்லாம் அதே பகுதியில் தங்கள் மத்தியில்தான் வசிக்கின்றனர் என்பதை யாரும் உணரவில்லை. குப்பை அள்ளுபவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்களா என்ன?
நாம் அருவெறுத்து கொட்டும் குப்பை மேடுகளை, அவர்கள் தினமும் மனமுவந்து செய்வதால், அவர்களை மனிதர்களாகக்கூட நடத்துவதில்லை. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, அது எந்த நிலையில் இருக்கிறது என்று நினைத்ததுண்டா? இருந்தும், மழை விட்டதும் அவர்கள் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.அதேபோல் வருவாய் துறை, காவல் துறையினர் நாமெல்லாம் பாதுகாப்பு தேடும்போது, தங்கள் உயிரையும், குடும்பத்தினரையும் மறந்து பணியில் ஈடுபடுவதை நினைக்கிறோமா?
நாம் கொட்டிய குப்பை தானே அடைப்பை ஏற்படுத்தி நீரை தேங்கவைத்து வெள்ளம் உட்புகக் காரணமாகிறது. தம் பகுதி தண்ணீர் வடிய வேண்டும் என்பதற்காக சாலை, வாய்க்கால் கரையை வெட்டி தண்ணீரை திருப்பிவிட்டு மேலும் பாதிப்பை அதிகரிக்கும் வகையில் மூழ்கடிக்கிறோம். நிவாரணம் தரவில்லை என்று, சாலை மறியல் முற்றுகை போராட்டம் செய்வதால் என்ன பயன். வேலை செய்பவர்களை தடை செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை தடுத்து, எல்லாருக்கும் நிவாரணம் கேட்டுப் போராடுவதில் நியாயம் உள்ளதா? அந்த நேரத்தில் அரசு அலுவலர்களுடன் நாமும் சேர்ந்து பணி செய்யக் கூடாதா?
வீடு மனை வாங்கும்போது, அந்த பகுதி மழைநீர் தேங்கும் என்பதை அறிந்திருந்தும், நீர்வழித் தடம் என்று தெரிந்தும் வாங்குகிறோம். யாராவது சொன்னாலும், 'அதெல்லாம் வராது, வந்தால் தான் என்ன ஏதோ ஒரு சில நாள் பாதிப்பு வருவது சகஜம் தானே' என்று சமாதானம் செய்து கொள்கிறோம். பின், பாதிப்பு வந்ததும், அரசு பொறுப்பு என்கிறோம்.
மழை நீர் சேமிப்பு குறித்து கவலையே படுவதில்லை. குறைந்த பட்சம் நம் வீட்டுப் பரப்பில் கிடைக்கும் நீரை சேமித்திருந்தால், பாதி மழைநீர் பூமிக்கடியில் சென்றிருக்கும். வெள்ளத்தின் அளவு குறைந்திருக்கும். நிலைமை மோசமானதும் பெரிய அதிகாரிகள், அமைச்சர்கள் என்று வந்து உட்கார்ந்து கொண்டு, வேலை செய்பவர்களை நசனசத்து கொண்டு இருக்கின்றனர்.
நிவாரணப் பொருட்களாக வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் வழங்க மக்களுக்கு டோக்கன் அச்சடிப்பது எப்படி என்று ஆலோசிக்க, ஆறு மணிநேரம் கூட்டம் நடத்தி, இரவு, 11:00 மணிக்கு, சிந்தித்து வையுங்கள் என்று சொல்லிவிட்டு போன மேதாவி அதிகாரிகள் இருக்கின்றனர். ஓர் ஆட்டை, ஒன்பது அதிகாரிகள் மேய்க்கும் நிலை. அதைவிட தாம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், இப்போதே நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலை கொண்டு வா என்று மிரட்டிப் பெற்று, சரிபார்க்கக் கூட இயலாதவாறு மொட்டை கையெழுத்து வாங்கி பட்டியல் தயார் செய்து, பட்டுவாடா செய்ய வைத்த அதிகாரிகளையும், அதை சாதகமாக்கி பொய் பட்டியல் தயார் செய்து ஊழல் செய்தவர்களையும் என்ன சொல்வது.
இப்படிப்பட்ட நிலைமைகளில், ஒரு சில துறையினர் மட்டும் தான் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணிக்கு அழைப்பது போன்று, அனைத்து அரசு அலுவலர்களையும் ஆசிரியர்களையும் நிவாரணப் பணிக்கு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆகாய தாமரை பூண்டுசெடிகளை அகற்றி, வடிகால்கள் சுத்தம் செய்யாமல் விட்டவர்கள், இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல்வாதிகளைப் பொறுத்த மட்டும், ஆட்சி செய்யும் கட்சியை குற்றம் சொல்வதும், சுற்றிப்பார்த்து வாய்க்கு வந்தபடி பேசும் தலைவர்களையும் தவிர, யாராவது நிவாரணப் பணியில் பங்கெடுத்திருக்கின்றனரா? ஆளும் கட்சியை குறை சொல்வதாக நினைத்து, பணி செய்யும் அலுவலர்கள் பேரில் சேற்றைவாரி இறைக்கின்றனர்.ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியே தலைகீழாக பேசுவர். சிலரோ இதையே தேர்தல் பிரசாரமாக்கி வருகின்றனர்.
இதுவா இப்போது தேவை? பற்றி எரியும்போது காப்பாற்ற முயற்சிக்காமல் விசிறி கொண்டு வீசி அணைப்பதாக பாசாங்கு எதற்கு? தாங்கள் இந்த நேரத்தில் செய்யும் உதவிகள், விமர்சனங்கள் தேர்தலுக்கு உதவும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு என்ன பயன். அதேபோன்று, பொதுமக்களின் பொறுப்பின்மை மிக அதிகம். நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடுகட்டுதல், மழைநீரை முற்றிலுமாக சேமிக்க தவறுதல், குப்பை கூளங்களை தரம் பிரிக்காமல் கொட்டுதல், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துதல் நீர் வழித்தடங்களை சிறிது சிறிதாக வெட்டி, தம் இடத்துடன் சேர்த்துக் கொள்ளுதல். ஊருணிகள் குளங்கள் பொது கிணறுகள் என்று எதையும் விடாமல் குப்பை கூளங்களை கொட்டி துார்த்து விடுதல் என்று, இதையெல்லாம் அரசா ஊக்குவிக்கிறது?மக்களின் சுயநலம் மட்டுமே இப்படிச் செய்ய வைக்கிறது.
ஒரே ஒரு உதாரணம்: அரசியல் காரணங்களுக்காக மனைபட்டா கொடுக்கிறேன் பேர்வழி என்று அறிவித்து, நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கின்றனர்.
அரசே ஏரிகளை துார்த்து, கலெக்டர் அலுவலகம், கோர்ட் என கட்டி வருகிறது. உதாரணம், மதுரை, விழுப்புரம். பேருந்து நிலையங்கள் தனியாரும் அதற்குப் போட்டியாக ஏரிகளைக் கூறுபோட்டு கல்லுாரிகள், வீடுகள் கட்டி வருகின்றனர். பொது சொத்து என்றால், நமக்கும் பங்கு உண்டு பராதீனம் செய்யலாம் என்ற மனப்பான்மை போலும்.
அரசு குறைந்தபட்சம் இப்போதாவது நிலைமையை உணர்ந்து, நீர் வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யமின்றி காலி செய்ய வேண்டும்.
நீர் சேமிப்பு நிலைகள் அனைத்தையும் துார் வாருவதுடன், அதன் நடுவில் குறிப்பிட்ட அளவுக்குமேல் சேரும் நீரை பூமிக்குள் செலுத்தும் வகையில், உறை கிணறுகள் அமைக்க வேண்டும். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்; வெள்ளத்தின் அளவு குறையும். கடல் நீர் உள்ளே நுழைவது தடுக்கப்படும். கடந்த 2011ல், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிய துணி தவிர எல்லாம் பறிபோயிற்று. மக்கள் திறந்த வெளியில் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். குடிதண்ணீர், உணவு வண்டிகள் வந்ததும் அவர்கள் வரிசையில் நின்று அமைதியாக பெற்றுச் சென்ற ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த மக்களின் நடத்தை நமக்கெல்லாம் படிப்பினை.
ஆனால், முற்றிலுமாக மீண்டு புனர்ஜென்மம் அடைத்து விட்டனர். இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பள்ளிச் சிறார்களுக்குக் கூட கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். சில தினங்களில் மழை நின்றுவிடும். நுாறு ஆண்டு களுக்கு முன்னர் பெய்த மழைதானே. அடுத்த கன மழை எப்போதாவதுதானே வரப்போகிறது என்று, அனைத்தையும் மறந்து பழையபடியே இருக்கப் போகி றோமா அல்லது இந்த அளவுக்கு மழை அடுத்த ஆண்டும் வரலாம்; ஏன் அடுத்த மாதம்கூட வரலாம். மாறிவிட்ட புவிவெப்பச் சூழ்நிலையில் எதுவும் எப்போதும் நடக்கும். நாம் அனைவருமே முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுத்து, தற்காத்துக் கொள்ளப் போகிறோமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.
இ - மெயில்: pasupathilingam @gmail.com
- பி.எஸ்.பசுபதிலிங்கம் -
வட்டாட்சியர் பணி நிறைவு
சமூக ஆர்வலர்