புதுடில்லி : டில்லியின் தெவ்லி பகுதியில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், ஆம்புலசிற்கு பலமுறை போன் செய்தும் எந்த பதிலும் இல்லை.
அந்த பெண்ணின் குரல் கேட்ட அவ்வழியாக வந்த கார் டிரைவர் ஒருவர், அருகில் சென்று விசாரித்துள்ளார். கர்ப்பிணியும் அவருடன் இருந்த 2 பெண்களும் நிலைமையை கூறி உள்ளனர். அந்த பெண்ணிற்கு பிரசவ வலி அதிகமாக இருந்ததால், தனது காரை கொண்டு தற்காலிக மறைவு ஒன்றை அந்த டிரைவர் ஏற்படுத்தித் தந்துள்ளார்.
மேலும் தன்னிடம் இருந்த துணி, தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு அப்பெண்ணிற்கு உதவி உள்ளார். சிறிது நேரத்தில் அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த டிரைவரை மருத்துவமனை ஊழியர்கள் பாராட்டி உள்ளனர். கார் டிரைவர் செய்த உதவிக்கு கை மாறாக அவரின் பெயரையே குழந்தைக்கு வைத்துள்ளனர், அப்பெண்ணின் குடும்பத்தினர்.