மண்...மனிதன் . பாக்டீரியாக்கள்| Dinamalar

மண்...மனிதன் . பாக்டீரியாக்கள்

Added : டிச 14, 2015 | கருத்துகள் (1)
 மண்...மனிதன் . பாக்டீரியாக்கள்

மண் தொட்டு மனிதன் வரை பாக்டீரியாக்கள் இல்லாத உயிரினங்களே இல்லை. மனிதர்களின் உடம்பில் செல்களை விட பாக்டீரியாக்கள் பல மடங்கு அதிகமாக உள்ளன.
மனித உடலில் 68 முதல் 72 சதவீதம் பாக்டீரியாக்கள் நன்மை செய்யுமா, தீமை செய்யுமா என்பதே இன்னமும் நமக்கு தெரியாது. மூன்று முதல் நான்கு சதவீதம்தான் நல்ல பாக்டீரியாக்கள் நம் உடலில் உள்ளன. அவற்றின் டி.என்.ஏ., தொடர்ச்சியை வைத்து உயிர் தொழில்நுட்பத்தின் மூலம் அவை பழைய பாக்டீரியாவா அல்லது புதியதா என கண்டறியலாம். சமீபகாலமாக புதிய வகை பாக்டீரியாக்கள் நிறைய கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை நன்மை செய்வதா, தீமை செய்வதா என்பதற்கான ஆராய்ச்சியை இன்னும் நாம் தொடவில்லை. சராசரி மனிதன் ஒரு பாக்டீரியாவை ஆராய்ச்சி செய்வதிலேயே வாழ்நாள் முடிந்து விடும். எனவே தான் அதிகமான ஆராய்ச்சிகள் இல்லை.
நன்மை செய்வது எப்படி எப்போதுமே நம் உடலோடு ஒட்டி கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அமைதியாக தான் இருக்கின்றன. நம்மோடு இருப்பவை நம்மை என்ன செய்கிறது என்பதையும் சில ஆராய்ச்சிகளில் கண்டறிந்துள்ளனர். 'பீகாலி, பிராட்னிசி' வகைகள், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு சத்தை அகற்றுகின்றன. தீமை செய்யும் பாக்டீரியாக்களை கொல்கின்றன. இவை நம் உடம்பில் அதிகரிக்க 'புரோபயாடிக்' உணவுகளை சாப்பிட வேண்டும். தயிர், யோகர்ட் சாப்பிடலாம். 'புரோபயாடிக்' சார்ந்த பானங்களும் கடைகளில் கிடைக்கின்றன.
கெட்டது அழியாது
'ஹெலிகோ பேக்டர் பைரோலின்' பாக்டீரியா அல்சரை உண்டுபண்ணும். குடலில் இருக்கும் அவற்றை முழுவதுமாக கொல்வது கஷ்டம். அதற்கு பதில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்க வேண்டும். இவற்றை ஆய்வகத்தில் வளர்க்க முடியாது. அல்சர் நோயாளிகள் தயிர், மோர், யோகர்ட், ஒரு வகையான பாலாடை கட்டி ஆகியவை சாப்பிடலாம். பச்சை காய்கறிகள் அரை வேக்காட்டில் சாப்பிடலாம். கீரை, சாலட், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, புதினா, மல்லித்தழை சாப்பிடலாம். ஆராய்ச்சியின் நோக்கம் வாய் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள பாக்டீரியாக்களும், அவற்றின் நோய் தாக்கம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஆரோக்கியமான அமெரிக்கரின் வயிற்றில் எந்த வகை பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து வருகிறேன். ஆரோக்கியமான ஒரு சில இந்தியர்கள், சர்க்கரை நோயாளிகளின் வயிற்றில் எந்தவகை பாக்டீரியாக்கள் உள்ளன என்பதையும் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
'பிலிபேக்டர் அலோசிஸ்' பாக்டீரியாக்கள், பற்களில் தங்கியுள்ளது. இதனுடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள் வயிற்றிலும் இருக்கலாம். அமெரிக்க ஆராய்ச்சியின் படி உணவு சாப்பிடுவதை பொறுத்து பாக்டீரியாக்கள் உருவாகின்றன. பீட்சா, பர்கர் சாப்பிடுவதை பொறுத்தும், இட்லி, தோசை சாப்பிடுவதை பொறுத்தும் பாக்டீரியாக்கள் வேறுபடுகின்றன. மனிதனின் சுகாதாரம், நோய் ஆகியவற்றில் பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உணவே தீர்மானிக்கின்றன
வாயில் உள்ள பாக்டீரியாக்கள் ஒருவித புரோட்டீன் உற்பத்தி செய்கின்றன. இந்த புரதங்கள் பற்களில் உள்ள கசிவு வழியாக ரத்தக்குழாய்களுக்குள் சென்றால், கொழுப்புடன் சேர்ந்து படிந்து ரத்தஓட்டத்தை குறைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. காய்கறிகள், சாலட் சார்ந்த உணவுகள் சாப்பிடும் போது நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகின்றன. இது ஒரு ஆராய்ச்சியின் முடிவு. பற்களில் உள்ள பாக்டீரியா மூட்டுவாதத்தை ஏற்படுத்தும். வாய், வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மனிதனின் உடல்
அசவுரியத்தை நிர்ணயிக்கிறது. வயதானவர்களுக்கு அல்சீமர் எனப்படும் மறதிநோய்க்கு கூட காரணமாக இருக்கலாம்.
டி.பி., எனப்படும் காசநோய்க்கு 'மைக்கோ பாக்டீரியல்' எனப்படும் ஒரு பாக்டீரியாதான் என்பதை கண்டறிந்தோம். தற்போது ஒரு நோய்க்கு பல பாக்டீரியாக்கள் காரணமாகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டு வருகிறது. உணவுதான் பாக்டீரியாக்களை தீர்மானிக்கிறது. மோசமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், வயிற்றுக்குள் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை தொந்தரவு செய்கிறோம். எனவே, பாக்டீரியாக்கள் நம் தலையெழுத்தை தீர்மானிப்பது என்றாலும் உண்மைதான்.
அமெரிக்கர் பழக்க வழக்கம்
உலகிலுள்ள ஐந்து இடங்களில் மக்கள் நுாறு வயதை கடந்து வாழ்கின்றனர். ஜப்பானின் ஒகினாவோ, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பகுதிகளை சொல்லலாம். இங்கே சுத்தமான காற்று, ஆரோக்கியமான, காய்கறிகள் சார்ந்த உணவு, உலர் பருப்புகள், முறையான உடற்பயிற்சி ஆகியவைதான் காரணம்.
அமெரிக்கர்கள் ஒருநாளைக்கு மூன்று முறை பல் துலக்குகின்றனர். பற்களுக்கு இடையில் மெல்லிய நரம்பு கொண்டு பாக்டீரியா கிருமிகளை சுத்தம் செய்கின்றனர். ஆண்டுக்கு இரண்டு முறை பற்களை மருத்துவமனையில் சுத்தம் செய்வதற்கு, அரசே இன்சூரன்ஸ் திட்டம் மூலம் இலவச உதவி செய்கிறது. பற்களில் ஒட்டியுள்ள பாக்டீரியாக்கள் சதை, திசுவிலும் ஒட்டிக் கொண்டு பிரச்னையை ஏற்படுத்தும். இந்தியாவில் இப்போதுதான் மனிதர்களிடம் உள்ள பாக்டீரியாக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
சந்தர்ப்பவாதிகளே அதிகம் மூன்று முதல் நான்கு சதவீதம் தான் நல்ல பாக்டீரியாக்கள். மற்றவை சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், அமைதியாக இருக்கும் இவை கெட்டவையாக மாறிவிடும். அடிக்கடி 'ஆன்டிபயாடிக்' மாத்திரைகள் சாப்பிடுவதால், நல்ல பாக்டீரியாக்கள் இறந்து விடும். கெட்டவை தலைதுாக்கி ஆடும்.
சில டாக்டர்கள் ஜலதோஷம் வந்தால் கூட, அதிகமான ஆன்டிபயாடிக் தருகின்றனர். தன்னைத்தானே காத்து கொள்ளும் வகையில் போராடும் சக்தி உடலுக்கு உள்ளது. நோய் எதிர்ப்பு குறையும் போது தேவைப்பட்டால், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் எடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள், மற்ற நோயாளிகள் அடிக்கடி ஆன்டிபயாடிக் எடுக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.
மண்ணே சரணம் மண்ணில் இருந்து பெறும் பொருட்களில் மண்ணில் உள்ள பாக்டீரியாக்களும் சேர்ந்தே இருக்கும். கீரை, காய்கறிகளை கழுவினாலும் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றை சாப்பிடும் போது வயிற்றுக்குள் சென்று நன்மை செய்யும். மண்ணில் மோசமான பாக்டீரியாக்கள் இருந்தால், வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். மண்வளமும் முக்கியம். மண்ணில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வாழ வேண்டுமெனில், ரசாயன உரம் அதிகம் இடக்கூடாது.- வில்சன் அருணி, இணை பேராசிரியர், மருத்துவக் கல்லுாரி, லோமா லிண்டா பல்கலைகழகம், கலிபோர்னியா.இமெயில் : waruni@llu.edu

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X