கோவை:மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், ஊழியர் பற்றாக்குறையால், பணிச்சுமை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாநிலம், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் வழக்கு தொடர்பாக, நீதிமன்றங்களில் தங்கள் தரப்பில் ஆஜராக, தனியாக வக்கீல்கள் நியமிக்க இயலாத நிலையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக இலவசமாக வக்கீல்களை நியமித்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண மக்கள் நீதிமன்ற விசாரணை, சிறை 'லோக் அதாலத்' போன்ற பல்வேறு பணிகள், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.இது போன்ற பணிகளை செய்வதற்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் போதிய ஊழியர் இல்லை. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், இரு ஊழியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். இவர்கள் தான், தாலுகா அளவில் செயல்படும் சட்டப்பணிகள் ஆணைக்குழு பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. தாலுகா அளவிலான பணிகளை கவனிக்க நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ ஊழியர்கள் கிடையாது.
மாதந்தோறும் இரண்டு வாரம் 'லோக் அதாலத்' விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவ்வப்போது தேசிய அளவிலான 'மெகா லோக் அதாலத்' விசாரணை நடத்தி, அதிக வழக்குகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.வழக்கமான பணிகளோடு, லோக் அதாலத் பணிகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால், கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும், இதே நிலைதான் இருப்பதாக, ஊழியர்கள் கூறுகின்றனர். 'சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிப்பதற்கு, ஐகோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோர்ட் ஊழியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.