'கடல் நீர் நீச்சல் பயிற்சி பெற்று இருந்ததால் வெள்ளத்தில் சிக்கியோரை எளிதாக காப்பாற்ற முடிந்தது' என, தமிழக கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் அண்மையில் பெய்த கன மழையால், வெள்ளத்தில் சிக்கிய, 2,000 பேரை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கமாண்டோ வீரர்கள் காப்பாற்றினர்.
அந்த அனுபவம் குறித்து, அவர்கள் கூறியதாவது: கடலோர பாதுகாப்பு குழுமத்தின், கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றிய, 60 பேரை தேர்ந்தெடுத்து, சென்னை, கோவளத்தில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, நீச்சல் பயிற்சி வல்லுனர்கள் மூலம் அலைசறுக்கு, கடல் நீர் நீச்சல், ஆபத்தில் சிக்கி தவிப்போரை படகில் ஏற்றி, தானும் அந்த படகுடன் நீச்சலிட்டபடி கரையை அடைதல் போன்ற பயிற்சிகளை அளித்தனர்.தாம்பரம் - சி.டி.ஓ., காலனி, குட்வில் நகர், முடிச்சூர் - வரதராஜபுரம், கிருஷ்ணாபுரம், லட்சுமி நகர், பி.டி.சி., குவாட்டர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர் என, தகவல் கிடைத்ததும், நாங்கள் மீட்பு படகுடன் விரைந்தோம். கழுத்தளவு நீரில் சிக்கி தவித்தோரை மீட்டோம்.
மணப்பாக்கத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வீடுகள் உள்ள பகுதிகளில், உயிருக்கு போராடியோரை காப்பாற்றுவது பெரும் சவாலாக இருந்தது. 18 பசு மாடுகளை மீட்டோம்; மாடுகள் நீச்சல் அடித்தன; ஓரளவுக்கு மேல், அதற்கு, எங்களின் உதவி தேவைபட்டது.துாத்துக்குடியில் உள்ள வான் தீவு என்ற பகுதியில் இருந்து, பாம்பன் பாலத்தை, மூன்று மணி நேரத்தில் அடையும் அளவுக்கு, எங்களுக்கு அளிக்கப்பட்ட கடல் நீர் நீச்சல் பயிற்சியே, வெள்ளத்தில் சிக்கியோரை காப்பாற்ற உதவியாக இருந்தது.இவ்வாறு கமாண்டோ வீரர்கள் கூறினர்.
நெகிழ்ச்சிகள் பல...:
கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறியதாவது:
* டிச., 2ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, நாங்கள் முகாமிட்டு இருந்த வரதராஜபுரம் பகுதிக்கு, ஒருவர், மூச்சிறைக்க நீந்தி வந்து, 'நிறைமாத கர்ப்பிணி உயிருக்கு போராடுகிறார்; விரைந்து வாருங்கள்' என, அழைத்தார். நாங்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, ஆறு மாத கர்ப்பிணி என, தெரியவந்தது. அந்த பெண், அவரின் குழந்தை மற்றும் பெற்றோர், உறவினர்களை காப்பாற்ற எடுத்த முயற்சி பாராட்டும்படி இருந்தது.
அதுபோல், தலா, 60 கிலோ எடை கொண்ட, நான்கு நாய்கள் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கி கொள்ள, சகோதரர்கள் இருவர், கொட்டும் மழையில் நடுங்கியபடி, 'எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை; நாய்களை காப்பாற்றுங்கள்' என, கோரினர். அவற்றை மீட்ட பின், அவர்களின் கண்களில் வழிந்த நீர், எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. இதுபோல் பல சுவாரஸ்மான சம்பவங்களை சந்தித்தது நல்ல அனுபவம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -