வால்பாறை:வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை, மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து, 2,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன.
இங்குள்ள பல்வேறு தேயிலை எஸ்டேட்டுகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் தொழிலாளர்கள், பல்வேறு எஸ்டேட்டுகளில் பணிபுரிந்து வந்தனர். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம், 2001ல் குறைக்கப்பட்டதால், வறுமையை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
இந்நிலையில், வால்பாறையில் உள்ள எஸ்டேட்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கடந்த பல ஆண்டுகளாக, பல்வேறு தேயிலை எஸ்டேட்டுகளில் தேயிலை மற்றும் காபி பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்டேட் நிர்வாகம் வழங்கியுள்ள வீடுகளில் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இருந்தாலும், பணி ஓய்வு பெற்ற பின்னர், இவர்களுக்கு நிரந்தரமாக வசிக்க வீடு இல்லாததால், சொந்த ஊருக்கும் செல்ல முடியாமலும், இங்கேயே மீண்டும் பணிபுரிய முடியாமலும் பரிதவிக்கின்றனர்.
நுாறு ஆண்டு கனவு:இது குறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறையில் உள்ள பல்வேறு தேயிலை எஸ்டேட்டுகளில், மூன்று தலைமுறையாக தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களது சொந்த ஊரிலும் வீடு இல்லை. பிழைப்பு தேடி வால்பாறையில் உள்ள எஸ்டேட்டுகளில் பணிபுரிந்துவருவதால், எங்களுக்கு என்று ஒரு வீடு வாசல் எதுவும் இல்லை.
ஓடாய் உழைத்து உடல் வலுவிழந்த நிலையில் வயது முதிர்ந்த காலத்திலாவது, தங்க ஒரு குடிசை கூட இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறோம். தமிழக அரசு எங்களின் நிலையை கருத்தில் கொண்டு, வால்பாறை மலைப்பகுதியிலேயே பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்பது எங்களின் நுாறு ஆண்டு கனவாக உள்ளது.இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்.
'அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்': இது குறித்து வால்பாறை எம்.எல்.ஏ., ஆறுமுகத்திடம் கேட்ட போது, ''வால்பாறையில் எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்க, மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்ட பின், அந்த இடங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்ட வேண்டும் என்று, சட்டசபை கூட்ட தொடரில் தொடர்ந்து வலியுறுத்துவேன்,'' என்றார்.