நீங்கள் நல்லவரா கெட்டவரா| Dinamalar

நீங்கள் நல்லவரா கெட்டவரா

Added : டிச 16, 2015 | கருத்துகள் (1)
 நீங்கள் நல்லவரா கெட்டவரா

காலம் காலமாகவே நாம் மனிதர்களை 'நல்லவர்கள்' என்றும் 'கெட்டவர்கள்' என்றும் பகுத்து வைத்திருக்கிறோம். நண்பர் கேட்டார் “நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார்?” என்று.
நல்லது செய்கிறவர்கள் நல்லவர்கள். கெட்டது செய்கிறவர்கள் கெட்டவர்கள் என்று மேம்போக்காக பதிலளித்தேன். 'எது நல்லது எது கெட்டது?' என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். நல்லவர்கள் செய்வது நல்லது; கெட்டவர்கள் செய்வது கெட்டது என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் அது சரியான விடையாக இருக்கமுடியாது. ஏனெனில் சில நேரங்களில், நல்லவர்கள் கெட்டதைச் செய்துவிடுகிறார்கள்; கெட்டவர்கள் நல்லதும் செய்துவிடுகிறார்கள்.
கெட்டதைச் செய்துவிட்டார்கள் என்பதற்காகவே, நல்லவர்களைக் கெட்டவர்கள் என்றோ, நல்லது செய்திருக்கிறார்கள் என்பதால் கெட்டவர்களை நல்லவர்கள் என்றோ சொல்லிவிட முடியாது. எதைச்செய்ய வேண்டும் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று காலந்தோறும் சமூகம் சிலவற்றை வரையறுக்கிறது. நன்மைகள் வரும் என்பதற்காகவும், தீமைகள் நேரும் என்பதற்குமான அறவுரையாகவும் அறிவுரையாகவும் நாம் அவற்றைப் பின்பற்றுகிறோம். செய்யவேண்டியவற்றைச் செய்யாமலும் இருக்கக்கூடாது. செய்யக்கூடாதவற்றைச் செய்யவும் கூடாது. இவ்விதியை மீறுவதென்பது கெடுதலை ஏற்படுத்திவிடும் என்கிறார் திருவள்ளுவர்.
''செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்கசெய்யாமை யானும் கெடும்''வாழ்க்கையானாலும் சரி, வளர்ந்து வரும் நிறுவனங்களானாலும் சரி, வணிகமானாலும் சரி, வண்ணமயமான கலையானாலும் சரி, வேறு எவையாயினும் இந்த 'செய்தக்க' ,'செய்தக்க அல்ல' தான் நன்மை தீமைகளையும் நல்லது கெட்டதுகளையும் தீர்மானிக்கின்றன.
நல்லது கெட்டதைக்கூட நாம்தான் அடிக்கடி மாற்றிக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக, அன்று குடிப்பது ஒழுக்கமின்மை என்றும் சட்டப்படி குற்றம் என்றும் கருதப்பட்டது. குடிப்பவர்கள் சமூகத்தில் மதிப்பை இழந்திருந்தனர். கைதாகிச் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இப்போது, அரசாங்கமே கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று சோகமாக இருந்தாலும் குடிக்கிறோம்; சுகமாக இருந்தாலும் குடிக்கிறோம். முதியவர்களும் குடிக்கிறார்கள், இளைஞர்களும் குடிக்கிறார்கள், ஆண்களும் பெண்களும் குடிக்கிறார்கள். முன்பெல்லாம் குடிகாரர்களுக்கு பெண் கொடுக்கமாட்டார்கள். இன்று 'யார்தான் குடிக்கவில்லை?' என்று சமாதானம் செய்து கொள்ளுகிறார்கள்.
காலமாற்றம் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. அப்படி மாறுகிறபோது தாம் வாழ்ந்த காலம்தான் சிறந்த காலமென்று, மூத்த தலைமுறையினர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பெரியவர்களை மதித்தது ஒரு காலம். 'அன்று இத்தனைப் போட்டியில்லை. போராட்டமில்லை. எல்லாம் இயல்பாக இருந்தது. இன்று சற்று கவனக்
குறைவாக இருந்தால்கூட, காலம் எங்களுக்கு 'கல்தா' கொடுத்துவிடுகிறது.
நிர்பந்தப்படுத்தப்படுகிற சில கால மாற்றங்கள், நாங்கள் அப்படி இருப்பதாக உங்களைக் கருதவைத்தாலும் எங்கள் உள்ளத்தை யார் அறிவார்?” என்கிற
இன்றைய இளைஞர்கள், நாளை தம் பிள்ளைகளிடமிருந்து இதனினும் மோசமான நடத்தையை (ட்ரீட்மெண்ட்) எதிர்கொள்ளக் காத்திருப்பதும் உண்டு.யார் வெற்றியாளர்
எல்லோருக்குமே, இப்போது நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நன்றாக இருக்க வேண்டும் என்றால் நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்றல்ல. வசதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை. வசதியாக இருப்பதென்பது விரும்புகிறவற்றை வாங்குகிற சக்தி, நினைப்பதை நடத்துகிற பலம் என்பதாகத்தான் 'நன்றாக' இருப்பது கருதப்
படுகிறது. அதற்கு அதிகமான வருவாய் வேண்டும். நியாயமான வருவாய் நன்றாக இருக்க உதவாது என்பதால், கொள்ளை லாபம், ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது, லஞ்சம் வாங்குவது, மோசடிகள் செய்வது என்று கூடுதலாக முனைகிறோம். இது நல்லதல்ல. எப்போதோ கவிஞர் வாலி தலைமையில் நடந்த கவியரங்கில் நான் இப்படிப் பாடினேன்.“நல்லா இருக்கணும்னா… நல்லவனா இருக்க முடியாது. நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது. இந்த நாட்டில் பணத்தாளே அடிக்கலாம்… பிடிபட்டால் பணத்தாலே அடிக்கலாம்” என்று. கவிஞர் வாலி இவ்வரிகளைப் பெரிதும் ரசித்தார். நல்லவர்கள் பலர் 'நன்றாக' இல்லாதபோது, எது நல்லது என்று யாரால் சொல்ல முடியும்.
எது நல்ல காலம் நல்லது கெட்டது என்பது, அவரவர் அனுபவத்தின் விளைவாகவும், எதிர்பார்ப்பின் பேரிலும் சொல்லப்படுகிற தனிப்பட்டக் கருத்து. ஒரு வரலாற்றுச்
செய்தியை அண்மையில்படித்தேன். பாபிலோனில் ஒரு கல்வெட்டு கிடைத்ததாம். அது ஏழாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதன் எழுத்துக்களை எப்படியோ சிரமப்பட்டு வாசித்து அர்த்தம் புரிந்து கொண்டனர். 'பழையகாலம் பொற்காலம்; தற்காலம் மோசமான காலம்' என அதில் எழுதப்பட்டு இருந்தது. ஏழாயிரம் ஆண்டு பழமையான கல்வெட்டு எழுதப்
பட்ட காலமே மோசமானதென்றால், நல்லவர்களாக வாழ்ந்ததாக கருதப்படும் நம் நுாற்றாண்டுத் தலைமுறை மிக மோசமான நுாற்றாண்டுதானே. இன்று மோசமான தாத்தாவும், நல்ல பேரனும் ஏன் இருக்க முடியாது?
“கெட்டகாலத்தில் வசிக்கும் நாம்கூட, நம் பேரப்பிள்ளைகளிடம் நம் காலம் பொற்காலம் என்றுதான் சொல்வோம்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுவார். நல்லது என்பது அவரவருக்கு நல்லதாகத் தோன்றுவதே தவிர, நல்லதென்பது எது என்று இப்போது நிச்சயித்துவிட முடியாது.
நடத்தை சான்றிதழ்
பிள்ளைகள் மேற்படிப்புக்குச் செல்கிறபோதும், வேலைக்குச் சேர்கிற போதும் நடத்தைச் சான்றிதழ் என்ற நிர்பந்தம் காலம் காலமாக இருந்து வருகிறது. இதைத்தருகிறவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதுதான் அவலம். ஒருமுறை வலம்புரிஜான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒரு வேடிக்கை செய்தார். “என்னைப் போலில்லை; இவர் நல்ல நடத்தையுள்ளவர்” என்று ஒருவருக்குச் சான்றிதழ் கொடுக்க, இப்படியெல்லாம் கொடுக்கக்கூடாது என்று ஒரு நிறுவனம் அதைத்திருப்பிவிட ''மோசமானவர்களிடம் மக்களை அனுப்பி நன்னடத்தைச் சான்றிதழ் கேட்பதை முதலில் நிறுத்துங்கள்” என்று பதில் அனுப்பியிருக்கிறார் அவர். “எண்ணிய முடிதல் வேண்டும்'' என்பார் மகாகவி பாரதி. கூடவே ”நல்லன எண்ணல் வேண்டும்” என்பார். நல்லது நடக்க வேண்டுமெனில் முதலில் நாம் நல்லவர்களாக இருக்கவேண்டும். அதனினும் மேலாக நம்மைச்
சுற்றியிருப்பவர்களை நல்லவர்களாகப் பார்த்துக் கொள்வது இன்னும் நல்லது. நாம் முதலில் நல்லவர்களாக இருக்க வேண்டும். நாம் நினைப்பதும் நிகழ்வதும் நல்லதாக இருக்க வேண்டும். எப்படியோ, நல்லது நடந்தால் நல்லது.- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர். 94441 07879

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X