மகாத்மா காந்தியின் பெயரிலா ஊழல்?| Dinamalar

மகாத்மா காந்தியின் பெயரிலா ஊழல்?

Updated : டிச 22, 2015 | Added : டிச 19, 2015 | கருத்துகள் (2)
மகாத்மா காந்தியின் பெயரிலா ஊழல்?

மகாத்மா காந்தியை நாம், தேசத் தந்தை என, போற்றுகிறோம். அவரது புகழுக்குக் காரணம், நாடு விடுதலை பெற, விடுதலை இயக்கத்திற்கு தலைமையேற்று, உலகளாவிய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார் என்பது மட்டுமின்றி, இறைமுறை தவறா அறவாழ்க்கை வாழ்ந்தார் என்பதே மிக முக்கியம்.பார் - அட் - லா என்ற உயர்ந்த சட்டப் படிப்பு படித்திருந்தாலும், ஏழையாக வாழ்ந்து காட்டினார் என்பது மிகச் சிறப்பு. மேலும், தன் வேலையை தானே செய்ய வேண்டும் என்றும், வேலை செய்யாது இருக்கக் கூடாது என்றும் எண்ணினார்; அப்படியே வாழ்ந்தும் காட்டினார்.
அப்படிப்பட்ட உயர்ந்த மனிதரின் பெயரால், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' என்ற திட்டம் மத்திய அரசால் தீட்டப்பட்டு, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகிறது. கிராம மக்களுக்கு, 100 நாள் உறுதியாக வேலை கொடுக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் குறிக்கோள். ஆனால், இத்திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தளவுக்கு உதவும் என்பதை எண்ணும்போது, நாட்டுப் பற்றுள்ள சிந்தனையாளர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது.திட்டம் நல்ல திட்டம் தான். ஆள் ஒன்றுக்கு தினக்கூலி, 172 ரூபாய். ஆனால், யாரும் அந்த அளவீடுபடி வேலை செய்யவில்லை. ஒரு சட்டி அல்லது இரண்டு சட்டி மண்ணை ஒப்புக்கு சுமந்து, மற்ற நேரமெல்லாம் சும்மா இருந்து பொழுதைக் கழிக்கின்றனர். சில இடங்களில் துாங்கவும் செய்கின்றனர். இவர்கள் விவசாய கூலி வேலைக்கோ, கட்டுமான வேலைக்கோ மற்ற எந்த வேலைக்கோ, போக விரும்பவில்லை.
ஆகவே, விவசாயம், கட்டடத் தொழில், தையல் தொழில், மில் தொழில் போன்ற தொழில்களுக்கு, ஆள் கிடைக்காத பற்றாக்குறையில், அத்தொழில்கள் தொய்வடைகின்றன.இந்த திட்டத்தால், செலவு செய்த பணத்திற்கு தகுந்த வேலை நடக்க வில்லை. பல பஞ்சாயத்துகளில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டதை, செய்தித் தாள்கள் மூலம் காண்கிறோம். சில பஞ்சாயத்துகளில், ஊரில் இல்லாதவர் பெயரிலும், இறந்தவர்கள் பெயரிலும் வேலை செய்ததாக கணக்கிடப்பட்டு பணம் பெற்றது கண்டறியப்பட்டுள்ளது; வேறு சில பஞ்சாயத்துகளில் வேலையே நடக்காத நாட்களில், வேலை செய்ததாக வங்கியில் பணம் பெற்றதை கண்டறிந்து ஊழல் உறுதி செய்யப்பட்டுள்ளது; தண்டனை வழங்கியதாக தெரியவில்லை.
நாட்டில் உள்ள, மனித சக்தியைப் பயன்படுத்தாது வீணடிக்கும் நாடு, பொருளாதாரத்திலும் வீழ்ச்சி அடைகிறது. அமெரிக்கா, செல்வச் செழிப்பான நாடு என்று கூறப்பட்டது. தற்காலத்தில், எல்லா வேலைகளுக்கும் வெளிநாட்டினரை நம்பி, தாங்கள் வேலை செய்யாததால், அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததை எல்லாரும் அறிவோம். நம் நாடு வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இவ்வாறே பல ஆயிரம் கோடி ரூபாயை வீணடித்து, நாட்டில் உள்ள மனித சக்தியை பயனற்றதாக வீணாக்கினால், நம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது நிச்சயம்.\\\'\ குறிப்பாக, விவசாயம் பாதிக்கப்பட்டால், பசியும் பஞ்சமும் ஏற்படும். 1789ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி, பசியாலும் பஞ்சத்தாலும் உருவானது. புரட்சியாளர்கள் மன்னரையே துாக்கி விட்டனர். உழைக்காமல் உண்டு களித்தோர் எல்லாரும், புரட்சியாளரால் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது உண்மை வரலாறு!
நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சியினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும், இத்திட்டத்தால் ஏற்படும் கேடுகள் பற்றி நன்கு தெரியும். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். ஏன்? வேலைஆட்கள் ஓட்டு வங்கி அல்லவா? இதைப் பற்றி குறை பேசினால், ஓட்டுப் போட மாட்டார்கள் என, அறிந்திருக்கின்றனர். நம் அரசியல்வாதிகள். அவர்கள் கூறும் நியாயம், 'ஏழைகளுக்கு வேலை கொடுத்து உயிரை காப்பாற்றுகிறோம்' என்பது. மழை இல்லாத, தொழிற்சாலைகள் இல்லாத, பஞ்சப் பகுதி என, அறிவிக்கப்பட்ட இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் பாராட்டிற்குரியது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி களிலும் செயல்படுத்தப்படுகிறது. பல தொழிற்சாலைகளுக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகளை பார்க்கிறோம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், நம் பிற்கால சந்ததியினரின் நன்மை கருதியும், இளைஞர்களை மற்ற பயனுள்ள வேலைகளில் ஈடுபடும்படி வழிவகை செய்யலாம். ஆண்டுக்கு, 100 நாட்கள் மட்டும் வேலை செய்து விட்டு, மற்ற நாட்களில் ஓய்வாக இருக்காமல், மற்ற வேலைகளில் ஈடுபடச் செய்து, அவர்கள் பொருளாதாரத்தைப் பெருக்க வழி வகை செய்யலாம். குளங்கள், கால்வாய்கள் மராமத்துச் செய்ய நவீன இயந்திரங்களை பயன்படுத்துவது லாபமாக உள்ளது.ஆகவே, மகாத்மா பெயரில் உள்ள ஊழல் மிகுந்த திட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களை பயனுள்ள வேலைகளில் ஈடுபடச் செய்வதே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமை சேர்க்கும் என்பது தெளிவு.மொபைல் எண்: 95856 66105

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X