லக்னோ: உ.பி.,யில், சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, அபராதம் செலுத்த முடியாமல் சிறைவாசம் அனுபவித்து வந்த, 14 கைதிகளின் விடுதலைக்கு, அங்குள்ள பள்ளி மாணவர்கள் உதவியுள்ளனர்.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பரேலி நகரில், புனித பிரான்சிஸ் என்ற பள்ளி, நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி மாணவர்கள், சேவை நோக்கத்துடன் சில செயல்களை செய்து வருகின்றனர். சமீபத்தில், இவர்கள் செய்த சேவையால், மாநிலம் முழுவதும் இவர்களுக்கு பாராட்டு குவிகிறது.
பரேலி பகுதியில் உள்ள சிறைகளில், சிறு குற்றங்களை செய்த சில கைதிகள், நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அபராதத் தொகை செலுத்த முடியாததால் தண்டனை காலம் முடிந்தும், அவர்களால், சிறையில் இருந்து வெளியில் வர முடியவில்லை.
இது குறித்த தகவல், இந்த பள்ளி மாணவர்களுக்கு தெரியவந்ததும், அந்த கைதிகளுக்கு உதவ முன்வந்தனர். மாணவர்கள் அனைவரும் சேர்ந்து, 40 ஆயிரம் ரூபாய் திரட்டினர். இந்த தொகையை, சிறைவாசம் அனுபவித்து வரும், 14 கைதிகளின் அபராதத்திற்காக செலுத்தினர். இதையடுத்து, 14 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
பள்ளியைச் சேர்ந்த மாணவர் அக்சத் கூறியதாவது:ஏழ்மை காரணமாக, சிறிய தொகையை கூட செலுத்த முடியாமல், சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் விடுதலையாக உதவியது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, புதுவிதமான அனுபவம். விடுதலை யானவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வாய்ப்பு கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.