புதுடில்லி:இந்தியா - ரஷ்யா இடையே, அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின், ரஷ்ய பயணத்தின் போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதுபற்றி, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, 23ல், ரஷ்ய பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு தலைநகர் மாஸ்கோவில், 23, 24ம் தேதிகளில், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினுடன், வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.இக்கூட்டத்தின் போது, இந்தியா - ரஷ்யா இடையே, அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பைஅதிகரிக்கும் நோக்கில், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அவற்றில் ஒன்றாக, தமிழகத்தின் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில், இருவரும் கையெழுத்திடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளை, அதிகபட்ச பயன்பாட்டுக்கு உட்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், அதிகரித்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.
மஹாராஷ்டிராவின் ஜெய்தாபூர், ஆந்திராவின் கோவடா, குஜராத்தின் விர்தி ஆகிய பகுதிகளில், அணு மின் திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.