பாட்னா : ரயிலில் பயணம் செய்த பெண், சக ஆண் பயணியின் அச்சுறுத்தலுக்கு ஆளானபோது, சரியான நேரத்தில், அந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டி, பாராட்டு பெற்றுள்ளது ரயில்வே அமைச்சகம்.
பா.ஜ.,வைச் சேர்ந்த சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர், அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, ரயில்வே துறையில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார். ரயில்வேயின், 'டுவிட்டர்' பக்கத்தில், பயணிகள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில், டில்லியிலிருந்து பாட்னாவுக்கு, சிரஞ்சீவி எக்ஸ்பிரசில் பயணித்தார். அவர் பயணம் செய்த பெட்டியில், ஒரேயொரு ஆண் மட்டுமே இருந்தார். அவர், அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததுடன், அத்துமீறவும் முயற்சித்தார். அந்த பெண், தன் மொபைல் போன் மூலமாக, ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டரில், தான் ஆபத்தில் இருக்கும் விஷயத்தை பதிவு செய்தார். அடுத்த ரயில்வே ஸ்டேஷனில், அந்த ரயில் நின்றதும், பெட்டியில் ஏறிய போலீசார், அந்த பெண்ணை பத்திரமாக மீட்டதுடன், சில்மிஷம் செய்த நபரையும் கைது செய்தனர்.
சமீபத்தில், ரயிலில் பயணித்த ஒரு குழந்தைக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தையின் பெற்றோர், டுவிட்டர் மூலமாக, ரயில்வே அமைச்சகத்திடம் உதவி கோரினர். உடனடியாக, அந்த குழந்தை இருந்த ரயிலுக்கு டாக்டர் அனுப்பி வைக்கப்பட்டார். இதுபோன்ற மனிதாபிமான உதவிகளை ரயில்வே அமைச்சகம் செய்வது, அனைவரிடமும் பாராட்டுக் களை பெற்றுள்ளது.