மெல்போர்ன் : பூமியை போன்றே, மனிதர்கள் வாழ ஏற்ற சூழலில் 'உல்ப் 1061' எனும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பூமியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது: மனிதர்கள் வசிப்பதற்குத் தகுதியான கிரகங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், பூமியை ஒத்த சூழல் கொண்ட 3 கிரகங்களை கண்டறிப்பட்டன. ஒரு சிறு நட்சத்திரத்தை இம்மூன்று கிரகங்களும் சுற்றி வருகின்றன. நட்சத்திரத்திற்கு 'உல்ப் 1061' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது புவியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
உல்ஃப் 1061சி : இம்மூன்று கிரகங்களின் நிலப்பரப்பும் பாறை போல கடினமாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. குறிப்பாக நடுவில் உள்ள கிரகத்தின் தன்மை, பூமியைப் போலவே உள்ளது. அந்த கிரகத்திற்கு 'உல்ப் 1061சி' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பூமியைவிட 4 மடங்கு பெரியதாக இருக்கும். இங்கு திரவ வடிவில் நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது.
மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ள கிரகங்கள் இதற்கு முன்பு கண்டறியப்பட்டாலும், அவை 'உல்ப் 1061' நட்சத்திரத்தைவிட இரு மடங்கு தொலைவில் உள்ளன.