முன்னாள் இந்நாள் டவுன் டாடி... புதுசா போட்டாங்க ஜோடி!| Dinamalar

முன்னாள் இந்நாள் டவுன் டாடி... புதுசா போட்டாங்க ஜோடி!

Added : டிச 22, 2015
Share
மங்கிய மாலைப்பொழுதில், பாரதி பூங்காவில் அமர்ந்து, ஜாலி மூடில் மித்ராவைப் பார்த்து, கேள்விக்கணை தொடுத்தாள் சித்ரா.''மித்து....நவீன திருவிளையாடல்...கேள்விக்கு நான்...பதிலுக்கு நீ...சேர்ந்தே இருப்பது...?''''கோவையும் குப்பையும்''''சேராதிருப்பது?''''மழை நீரும் குளங்களும்''''பிரிக்க முடியாதது...?''''கரப்ஷனும்
முன்னாள்  இந்நாள்  டவுன் டாடி... புதுசா போட்டாங்க ஜோடி!

மங்கிய மாலைப்பொழுதில், பாரதி பூங்காவில் அமர்ந்து, ஜாலி மூடில் மித்ராவைப் பார்த்து, கேள்விக்கணை தொடுத்தாள் சித்ரா.
''மித்து....நவீன திருவிளையாடல்...கேள்விக்கு நான்...பதிலுக்கு நீ...
சேர்ந்தே இருப்பது...?''
''கோவையும் குப்பையும்''
''சேராதிருப்பது?''
''மழை நீரும் குளங்களும்''
''பிரிக்க முடியாதது...?''
''கரப்ஷனும் கார்ப்பரேஷனும்''
''சொல்லக்கூடியது?''
''காந்திபுரம் பாலமும்,
டெக்ஸ்டூல் பாலமும்''
''சொல்லக்கூடாதது?''
''2,378 கோடி ரூபாய் திட்டங்கள்...'' இனி நானே சொல்றேன். பேருக்கு...மேயர். 'பாரு'க்கு அர்ஜூனன், குத்தாட்டத்துக்கு டெபுடி, ஆக மொத்தம் அஞ்சு வருஷத்துல கோவைக்கு எம்டி'' என்று வெடித்துச் சிரித்தாள் மித்ரா.
''மித்து...சத்தியமா நீதான்டி கெத்து. சொன்னது மாதிரியே, அஞ்சு வருஷமும், ஒண்ணுமே இல்லாம, பஞ்சு மிட்டாயாட்டம் கரைஞ்சிருச்சுல்ல. இதுல, அடுத்த எலக்ஷனுக்கு இப்பவே ரெடியாயிட்டாங்க'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா! நான் சொன்னனே அந்த குத்தாட்டப் பார்ட்டி. அவுங்க தான், தெற்கு தொகுதி 'கேண்டீடேட்'டாம். அடுத்த சமூக நலத்துறை அமைச்சர் நான் தான்னு சேச்சி, இப்பவே பஜ்ஜி சுட ஆரம்பிச்சிட்டாங்க'' என்றாள் மித்ரா.
''இருக்கலாம் மித்து...மாநகர் மாவட்டத்துல, சின்னச்சாமியைத் தவிர, பழைய ஆளுங்க பேரு, எதுவும் தலைமைக்கு 'ரெகமண்ட்' ஆகலையாம். தெற்குத் தொகுதிக்கு, அந்த 'பார்' பார்ட்டி கருப்பு கவுன்சிலரு, இந்தம்மா ரெண்டு பேரோட பேரு தான் போயிருக்காம்''
''அப்டின்னா, அந்தம்மா சொன்னது நடந்துருமா...?''
''நடக்கலாம்...கவுண்டம்பாளையத்துல பிஆர்ஜி, மேட்டுப்பாளையத்துல நாசர், வடக்குல கான்ட்ராக்டர் சந்திரசேகர்ன்னு பட்டியல் போனதா பேசிக்கிறாங்க. ராவணன் ஆலோசனையில தான், பட்டியல் தயாராச்சாம். இதுல, 'சென்ட்ரல்' அண்ணாச்சியும், தெற்குக்கு முட்டுறாராம்'' என்றாள் சித்ரா.
''டிஎம்கேல தலைமைக் குழப்பமே தீர்ந்தபாடில்லை. ஆனா, ஸ்டாலின் தயார் பண்ணுன 40 வேட்பாளர்க பட்டியல்ல எங்க பேரு இருக்குன்னு, சிங்காநல்லுார்ல 'மாஜி' டெபுடியும், தெற்குத் தொகுதியில, வீரமான கோவாலும் வீடு வீடாப் போய் 'கேன்வாஸ்' பண்ண ஆரம்பிச்சிட்டாங்க'' என்றாள் மித்ரா.
''நாலஞ்சு வருஷமா, ஊழலைத் தவிர, ஊருக்குள்ள பெருசா ஒண்ணும் நடக்கலை. எதுக்காவது, இவுங்க ஒரு ஆர்ப்பாட்டமாவது நடத்துனாங்களா...எலக்ஷன் வந்ததும் வந்துட்டாங்க''
''அக்கா...நீ ஆர்ப்பாட்டம்னு சொன்னதும், காங்கிரஸ் சார்புல, கோயம்புத்துார்ல நடத்துன ஆர்ப்பாட்டம் ஞாபகம் வந்துச்சு. வந்தது 200 பேரு கூட இல்லை. ஆனா, பத்து வண்டியில போலீசைக் குவிச்சிட்டாங்க''
''காங்கிரஸ்காரங்க மேல போலீஸ்க்கு அவ்ளோ பயமா?''
என்று இடையில் புகுந்தாள் சித்ரா.
''அதை ஏன் கேக்குற... இவுங்க மறியல் பண்ணிருவாங்களோன்னு, போலீஸ் பயப்பட...நம்ம மறியல் பண்றதா நினைச்சு, போலீஸ் அரெஸ்ட் பண்ணிருமோன்னு, பாதி கதர்ச்சட்டைக பயந்து, நைசா நழுவ... கடைசில, போலீஸ் ஆபீசருக்கு மாவட்டத் தலைவரு கை கொடுக்க...ஒரே காமெடிக் கூத்தா இருந்துச்சு'' என்றாள் மித்ரா.
''சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, பிரபு கோஷ்டி, சுதர்சன நாச்சியப்பன் கோஷ்டின்னு ஏகப்பட்ட கோஷ்டி இருக்கே. கோஷ்டிக்கு நுாறு பேரு வந்தாக்கூட, 400 பேராயிருக்குமே'' என்றாள் சித்ரா.
''காங்கிரசை விடு...த.மா.கா.,காரரோட மினி பஸ்களைப் பாத்து, கணுவாய், மருதமலை, சோமையம்
பாளையம் மக்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க'' என்று அடுத்த மேட்டருக்குத் தாவினாள் மித்ரா.
''அந்தக் கட்சியில, அவ்ளோ 'சவுண்ட்' ஆன ஆளு யாருடி?'' என்றாள் சித்ரா.
''மாநகர் மாவட்டத்துல துணை பொறுப்புல இருக்குற 'கொமாரு' ஒருத்தரோட மினி பஸ்க, அந்த ஊர்ப்பக்கமா ஓடுது. அந்த வண்டிக வந்தாலே, மக்கள் தெறிச்சு ஓட வேண்டியதா இருக்கு...பேய் வேகம். டிக்கெட்டும், கவர்மென்ட் 'பிக்ஸ்' பண்ணுனதை விட, ரெண்டு மடங்கு அதிகம். அதாவது, நாலு ரூபா டிக்கெட்டுக்கு எட்டு ரூபா வாங்கிட்டு, ரெண்டு டிக்கெட் கொடுப்பாங்க'' என்றாள் மித்ரா.
''இந்த 'கம்ப்ளைன்ட்' ஒரு நாள், கலெக்டராபீசுக்கு வந்துச்சே?'' என்று குறுக்கிட்டாள் சித்ரா.
''வந்து...என்ன பிரயோஜனம்? ஆர்டிஓ, ஜேடிசி எல்லாருக்குமே புகார் போயிருக்கு. ஒரு நடவடிக்கையும் இல்லை. அந்த ரூட்கள்ல கவர்மென்ட் பஸ்சும் இல்லாததால, அந்த பஸ்களை விட்டா, மக்களுக்கும் வேற வழியில்லை'' என்றாள் மித்ரா.
''மித்து...சிட்டி டிராபிக்கைப் பாத்துட்டு இருந்த வசூல் ராஜாவை ஒரு வழியா, சென்னைக்குத் துாக்கிட்டாங்க. புதுசா வர்ற ஆபீசராவது, சிட்டி டிராபிக் பிரச்னைக்கு ஏதாவது பண்றாரான்னு பார்ப்போம்'' என்றாள் சித்ரா.
''போலீஸ் மட்டும் இதுல என்னக்கா பண்ண முடியும். ரோடு, பாலம், ஃபுட்பாத், பார்க்கிங் வசதி, மெட்ரோ டிரெயின் பிராஜக்ட் இதெல்லாம் பண்ண வேண்டியது கவர்மென்ட்டு...அதைப் பண்ணாம, டிராபிக் போலீஸ் மட்டும் என்ன பண்ணுவாங்க. புதுசா யாரு வந்தாலும், அவுங்க பங்குக்கு, வசூல் பண்ணுவாங்களே தவிர, வேறெதுவும் நடக்காது'' என்றாள் மித்ரா.
''பங்குன்னதும், நம்ம குத்தாட்ட சேச்சி பண்ணுன வேலை ஞாபகம் வந்துருச்சு. வெள்ள நிவாரணமா, என் பங்குக்கு தலைமைல கேக்குறாங்கன்னு சொல்லி, சிட்டியில நாலு பெரிய ஜவுளிக்கடைகள்ல கடைக்கு ஐநுாறு சேலை, ஐநுாறு நைட்டின்னு ரெண்டாயிரம் சேலை, நைட்டி, இன்ஸ்கர்ட் எல்லாம் வாங்கிருக்காங்க. மாவட்டம்கிட்டயும் ஒப்படைக்கலை. தனியாப் போயும் தரலையாம்'' என்றாள் சித்ரா.
''அதெப்பிடிக்கா அமுக்க முடியும். எப்பிடியும் தலைமைக்குத் தெரிஞ்சிடாதா?'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் நடக்குற காரியமா மித்து...மகளிரணிக்காரங்களும், தனித்தனியா, கார்டனுக்கு பேக்ஸ் அனுப்பிருக்காங்க. ஆனா, டெபுடியம்மா, 'என்னைய எவளும் ஒண்ணும் செய்ய முடியாது. பெட்டிஷன் அனுப்புனவ எல்லாரு பதவியையும் காலி பண்ணப்போறேன்'னு சவால் விட்ருக்காங்க'' என்றாள் சித்ரா.
''அதுவும் நடந்தாலும் நடக்கும் போலிருக்கு...ஏன்னா, முந்தா நாள் தான், அந்தம்மாவை செயற்குழு உறுப்பினரா அறிவிச்சிருக்காங்க. புகார் போனதுக்கு, இதான் பதிலா?'' என்றாள் மித்ரா.
''மித்து...நேத்து காலையில சர்க்யூட் ஹவுஸ்ல ஒரு செயற்குழு கூடிருக்கு...ஆளும்கட்சி கவுன்சிலர்க, கிளைச் செயலாளர்களை திடீர்னு கூப்பிட்டுப் பேசுனாங்களாம். என்னன்னு விசாரிச்சியா?''
''ம்...விசாரிச்சேன்...சிங்காநல்லுார், தெற்கு, வடக்குன்னு தொகுதி வாரியா கவுன்சிலரு, நிர்வாகிகளைக் கூப்பிட்டு, ஏரியால என்னென்ன வேலை 'பெண்டிங்' இருக்கு, எலக்ஷனுக்கு இப்பவே என்னென்ன வேலை பாக்கணும்னு சொன்னாங்களாம். ஏதாவது 'மால்' கிடைக்கும்னு, பெருசா எதிர் பார்த்துப் போனவுங்களுக்கு, ஒண்ணும் கிடைக்கலைன்னதும் ஏமாந்துட்டாங்க''
''நீ 'மால்'ன்னு சொன்னதும், ஞாபகம் வந்துச்சு. நம்மூர்ல இருக்குற கொண்டாட்டமான 'மால்'ல இருக்குற தியேட்டர்கள்ல 'சி பார்ம்' லைசென்சே இல்லாம, படம் ஓட்டிட்டு இருக்காங்களாம். இன்னொரு 'மால்'லயும், என்னென்ன கட்டிட விதிமீறல் நடக்குதுன்னு விசாரணை நடக்குது. இத்தனை வருஷம் கழிச்சு, ஏன் திடீர்னு இதைத் தோண்டுறாங்கன்னு தான் தெரியலை'' என்றாள் சித்ரா.
இடையில் வந்த போனை 'அட்டெண்ட்' செய்த மித்ரா, 'அப்பிடியா அப்பிடியா' என்று அடிக்கடி ஆச்சரியமாய்க் கேட்டு, 'சரி நான் அப்புறம் கூப்புடுறேன்' என்று 'கட்' செய்து விட்டுப் பேசினாள்.
''அக்கா... ஒரு மேட்டரை 'கன்பார்ம்' பண்ணிட்டு சொல்லுவோம்னு தான் உனக்குச் சொல்லாம இருந்தேன். அது இப்பதான் உறுதியாச்சு. எலியும் பூனையுமா இருந்த, நம்ம முன்னாள் இந்நாள் 'டவுன்டாடி' ரெண்டு பேரும், புதுசா ஜோடி போட்ருக்காங்க''
''என்ன மித்து சொல்ற...ரியலி?''
''என்னாலயே நம்ப முடியலை தான். ஆனா, தகவல் உறுதி தான். அமாவாசையன்னிக்கு, மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில்ல ரெண்டு பேரும் சந்திச்சு, முக்கால் மணி நேரம் பேசிருக்காங்க. பொது எதிரியை வீழ்த்துறதுக்கு ஒண்ணு சேரலாம்னு முடிவெடுத்திருக்கிறதா, நம்ம 'சோர்ஸ்' சொல்லுது'' என்றாள் மித்ரா.
''மித்து...திடீர்னு இறந்துட்டாரே, கவுன்சிலர் பால்ராஜ். ரொம்ப அமைதியான ஆளு. ஆக்டிவ்வா அரசியல் பண்ணலைன்னாலும், பெருசா பேரையும் கெடுத்துக்கலை. துணை மேயராக வேண்டியவரை, சதி பண்ணி தடுத்துட்டாங்க. விக்டோரியா ஹாலுக்கு வெளிய நின்னு, அன்னிக்கு அவரு கண்ணு கலங்குனது, இப்பவும் கண்ணு முன்னயே நிக்குது'' என்று வேதனைப்பட்டாள் சித்ரா.
பூங்காவிற்குள் இருள் கவ்வத் துவங்கியது. இருவரும், வேகமாய் வெளியேறி, வண்டியைக் கிளப்பினார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X