ஸ்ரீகாந்தால் எதுவும் முடியும்

Updated : டிச 22, 2015 | Added : டிச 22, 2015 | கருத்துகள் (31) | |
Advertisement
என்னால் எதுவும் முடியும் என்கிறார் பார்வையற்ற இளைஞர் ஸ்ரீகாந்த்.டாக்டர் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தபோது, இந்தியத் தலைமை 2020 (Lead India 2020) இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் சிலரை 28, ஆகஸ்ட் 2006 அன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். கலாமின் வழக்கமான கேள்வி-பதில் பாணியில்தான் உரையாடல் நடந்துகொண்டிருந்தது.மாணவர்களை நோக்கிக் கேட்டார். “நீங்களெல்லாம்
ஸ்ரீகாந்தால் எதுவும் முடியும்


என்னால் எதுவும் முடியும் என்கிறார்
பார்வையற்ற இளைஞர் ஸ்ரீகாந்த்.

டாக்டர் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தபோது, இந்தியத் தலைமை 2020 (Lead India 2020) இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் சிலரை 28, ஆகஸ்ட் 2006 அன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். கலாமின் வழக்கமான கேள்வி-பதில் பாணியில்தான் உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

மாணவர்களை நோக்கிக் கேட்டார். “நீங்களெல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்?”
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொல்ல, பார்வையற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் பட்டென்று சொன்னார். “நாட்டின் குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறினால் நான்தான் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்யப்படுவேன்!”

சுற்றியிருப்பவர்கள் திடுக்கிட, கலாம் புன்னகைத்தார். அம்மாணவனின் வித்தியாசமான விருப்பத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொண்டார். ஸ்ரீகாந்தைப் போல மிகப்பெரிய இலக்குகளை அடைய ஆசைப்படு. சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதுதான் குற்றம் என்றார்.“உங்களுடைய கனவு ஒருநாள் நனவாக ஆசைப்படுகிறேன். இதற்காக நீங்கள் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்!” என்று ஸ்ரீகாந்திடம் கேட்டுக் கொண்டார்.

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் 23 வயதாகும் அந்த ஸ்ரீகாந்த் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால் வியப்பின் உச்சிக்கு போய்விடுவீர்கள்.

ஐம்பது கோடி ரூபாய் புழங்கக்கூடிய சுற்றுச்சுழலுக்கு ஊறு செய்யாத பேக்கிங் பொருட்கள் தயாரிக்கும் நான்கு நிறுவனங்களின் தலைவராக ஐதராபாத்தில் இருக்கிறார். இவருக்கு கீழ் நுாற்றுக்கணக்கான ஊழியர்கள்.எப்படி இந்த அதிசயம் என்று நினைப்பவர்கள் ஸ்ரீகாந்த் கடந்து வந்த பாதையை தெரிந்து கொண்டால் அந்த அதிசயம் என்ற வார்த்தையை அழித்துவிடுவீர்கள்.

முதலில் ஸ்ரீகாந்த் யாரென்று பார்ப்போம்.

பிறவியிலேயே பார்வையற்றவரான ஸ்ரீகாந்த், ஆந்திரமாநிலம் மசூலிப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு விவசாய கூலித்தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர்.பிறக்கும் போதே பார்வையில்லை.

பார்வையில்லாதவராக பிறந்ததைவிட வறுமையான குழ்நிலையில் பிறந்ததுதான் ஸ்ரீகாந்திற்கு பெரும் கொடுமையாக இருந்தது,அனுதினமும் சொல்லால் கொல்லாமல் கொன்றார்கள்.

பார்வையற்ற மகனை பள்ளிக்கு அனுப்பினால் எங்கே படிக்கப்போகிறான் என்று எண்ணிய அப்பா தன்னுடன் விவசாயத்திற்கு கூட்டிச்சென்றார் ஆனால் ஸ்ரீகாந்திற்கு படிப்பதில்தான் பிரியம்.அப்பா-பிள்ளைக்குள் நடந்த இந்த துவந்த யுத்தத்தில் பிள்ளையே ஜெயிக்க, வீட்டில் இருந்து ஐந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள பள்ளிக்கு செருப்பு கூட அணியாத கால்களுடன் நண்பர்கள் உதவியுடன் நடந்தே போய்படித்து வந்தார்.

பள்ளியில் இவரை கடைசி பெஞ்சில் உட்காரவைத்தும்,விளையாட விடாமல் அவமதித்தும்,சந்தேகம் கேட்டால் கேலி செய்தும் மனிதத்தின் புனிதத்தை குறைத்துக்கொண்டனர்.உன்னால் என்ன செய்யமுடியும் என்ற கேள்விக்கு என்னால் என்ன செய்யமுடியாது என்பதை பதிலாக தந்துவிட்டு பள்ளியைவிட்டு நின்றுவிட்டார்.

ஸ்ரீகாந்தின் மாமா ஒருவர், ஹைதராபாத் பேகம்பேட்டை தேவ்நார் பார்வையற்றோர் பள்ளியில் ஸ்ரீகாந்தை சேர்த்தார். தங்கிப்படிக்கும் வசதிகொண்ட இப்பள்ளியில் மழலையர் கல்வியில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பார்வையற்றவர்கள் படிக்கலாம். ஆங்கிலவழிக் கல்வி. மாநில அரசு பாடமுறைத்திட்டம். ஆறாம் வகுப்பில் இருந்து பார்வையற்றோருக்கான சிறப்பு கணினிப் பயிற்சியும் வழங்கப்படும். இந்தியாவின் சிறந்த பார்வையற்றோர் பள்ளியாக 2003 மற்றும் 2008 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி இது. இப்பள்ளியில் படிக்கும்போதுதான் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் கலாமை சந்திக்கும் வாய்ப்பு ஸ்ரீகாந்துக்கு கிடைத்தது.

“மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்” என்ற கலாமின் அறிவுரை ஸ்ரீகாந்துக்கு அதன்பின்னர் ஒவ்வொரு நொடியும் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. விவேகானந்தரும், கலாமும் ஸ்ரீகாந்துக்கு இரண்டு கண்கள். இளைஞர்களுக்கான இவர்களது அறிவுரைகள் அனைத்தும் மனப்பாடம். 'நம்முடைய விதியை நிர்ணயிக்கும் சக்தி, நம்முடைய கரங்களுக்கே உண்டு' என்ற விவேகானந்தரின் கருத்து, ஸ்ரீகாந்துக்கு போதுமான தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்தது. கனவினை நோக்கி நகர ஆரம்பித்தார்.

கிரிக்கெட் விளையாடினார். செஸ் விளையாடினார். பார்வையற்றவர்களுக்கு எது எதெல்லாம் சவாலோ? அந்த சவால்களை தனது செவிகளை கொண்டு வென்றார். தேசிய செஸ் வீரராக தன்னை உயர்த்திக் கொண்டார். ஆந்திரப்பிரதேச மண்டலத்தின் பார்வையற்றோர் பிரிவுக்கான கிரிக்கெட் வீரராக களமிறங்கினார். தேசிய இளைஞர் விழாவின் சிறந்த உறுப்பினர் என்று பெயர் எடுத்தார். இந்திய தேசிய அறிவியல் காங்கிரஸின் (Indian National Science Congress) வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பத்தாம் வகுப்பில் 90% மதிப்பெண் பெற்றார்.

ஆனாலும் இவருக்கு ராயல் ஜூனியர் கல்லூரியில் இவர் கேட்ட அறிவியல் பிரிவு தரப்படாமல் ஆர்ட் பிரிவுதான் ஒதுக்கப்பட்டது பார்வையற்றவரால் அறிவியல் பிரிவில் படிக்கமுடியாது என்று காரணம் சொன்னார்கள்.

அது முடியுமா?முடியாதா? என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன் நீங்கள் எனக்கு அறிவியில் பிரிவுதான் கொடுக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார், நிர்வாகம் முடியாது என்றது, கோர்ட்டிற்கு சென்றார் வெற்றி பெற்று அறிவியல் பிரிவை படித்தார்.
முழுப்பாடங்களையும் ஆடியோ டேப்பில் பதிவு செய்து, தொடர்ச்சியாக கேட்டு, கேட்டே உள்வாங்கிக் கொண்டார். முடிவில் 98%மதிப்பெண் எடுத்து கல்லுாரி நிர்வாகமே பாராட்டும் சாதனை மாணவரானார்.

அடுத்தது இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடி நிறுவனங்களுக்கும் எழுதிபோட்டார் சொல்லிவைத்தார் போல இவரது பார்வை குறைபாட்டை காரணமாக சொல்லி ஐஐடி நிறுவனங்கள் இவரை நிராகரித்தது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்திற்கு (Massachusetts Institute of Technology) பொறியியல் படிக்க எழுதிப்போட்டார். இது சாத்தியமா? பணம் செலவழிக்க முடியுமா? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவேயில்லை.

ஸ்ரீகாந்தின் விண்ணப்பத்தை கண்ட எம்.ஐ.டி. நிர்வாகம் அவரை வாரி அணைத்துக் கொண்டது. “ஸ்ரீகாந்த் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். இவருக்கு கட்டணமெல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க கல்வி இலவசம்!” என்று உலகளவில் புகழ்பெற்ற அந்த தொழில்கல்வி நிறுவனம் அறிவித்தது.

பிரபலமான ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் சிலர் ஸ்ரீகாந்தின் அமெரிக்கப் பயணத்துக்கு ஆகும் செலவை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள். வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர், நம்மூரைச் சேர்ந்த அரசுசாரா தொண்டுநிறுவனம் ஒன்றின் உதவியோடு, ஸ்ரீகாந்த் கற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.

படித்து முடித்ததும் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எங்களிடம் பணிக்கு வாருங்கள் பல லட்சங்களை சம்பளமாக தருகிறோம் என்று இவருக்கு அழைப்பு விடுத்தது.எனக்கு லட்சங்கள் முக்கியமில்லை லட்சியமே முக்கியம் என்று சொல்லி தாயகம் திரும்பியவர் மறு சுழற்சி முறையில் பயன்படக்கூடிய பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை ஒரு தகரகொட்டகையில் எட்டு தொழிலாளர்கள் மற்றும் மூன்று சிறிய மெஷின்களுடன் ஆரம்பித்தார்.

அந்த நிறுவனங்கள்தான் தற்போது நான்கு பெரிய நிறுவனங்களாக வளர்ந்துள்ளன.ஐம்பது கோடி ரூபாய் பணம் சுழற்சியாகிறது.எழுபது சதவீதம் தொழிலாளர்கள் மாற்றுத்திறனாளிகள்.

நம்மைப் போன்ற இளைஞர்கள் கல்வியின் மதிப்பையும், நமது பொறுப்பையும் உணரவேண்டும். பொன் போன்ற காலத்தை வீணடிக்கவே கூடாது. விவேகமற்ற அறிவு வீணானது என்று விவேகானந்தர் சொல்வார். அதுபோலவே, பொறுப்புகள் இல்லாத சுதந்திரமும் வீணாகிவிடும், மனிதனையும் வீணாக்கிவிடும் என்பது சமீபத்தில் தனக்கு நடந்த பாராட்டுவிழாவில் ஸ்ரீகாந்த் பதிவு செய்த வார்த்தை.

எல்லாம் சரி அந்த ஜனாதிபதிக்கனவு என்று நினைவு படுத்த, அதற்கு வயது என்று ஒன்று இருக்கிறது அந்த வயதில் நிச்சயம் என்னை ஜனாதிபதியாக பார்ப்பீர்கள் என்றார் உறுதியாக...

(பார்வையற்ற சாதனை இளைஞர் திரு.ஸ்ரீகாந்த் பற்றி எனக்கு அறிமுகம் செய்து எழுதவைத்த துபாய் நண்பர் திரு.பாரதிதாசனுக்கு சிறப்பான நன்றி.)

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (31)

Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
26-ஜன-201621:22:09 IST Report Abuse
Rajasekaran Palaniswamy அருமை. வாழ்த்துக்கள் தம்பி. உன் கனவு நனவாகட்டும்.
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
20-ஜன-201619:17:12 IST Report Abuse
Murugan உன்னால் முடியும் தம்பி. முயற்ட்சி உன்னை அழைத்து செல்லும் புரப்புடு .............
Rate this:
Cancel
தாமரை - பழநி,இந்தியா
15-ஜன-201612:46:18 IST Report Abuse
தாமரை இந்தக் கட்டுரை பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு சமர்ப்பணம். அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளராகக் களமிறக்குங்கள். வாஜ்பாய் காலத்தில் அப்துல் கலாம்.மோடி காலத்தில் ஸ்ரீகாந்த்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X