மார்கழி வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி வழிபாடு

Added : டிச 23, 2015
மார்கழி வழிபாடு

திருப்பாவை
பாடல்- 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக்
கொண்டவளே! அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக
புல் மைதானங்களில்
நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராட வந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்
படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம்.
கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி
தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் 'ஆஆ' என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு.
திருவெம்பாவை

பாடல்- 8
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழியீ தென்ன உறக்கமோ? வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
பொருள்: கோழிகள் கூவுகின்றன. பறவைகள் ஒலித்து சப்தஸ்வரங்களில் ஆன இசைபோல நாதம் செய்கின்றன. வெள்ளைச் சங்குகள் முழுங்குகின்றன. ஒப்பில்லாத பரஞ்ஜோதி, உவமைஇல்லாத கருணை கொண்டவன், அறிய முடியாத மேலான பொருளான சிவனை நாங்கள் பாடிக் கொண்டிருப்பது உனக்கு கேட்கவில்லையா? நீ
வாழ்வாயாக. உனக்கென்ன அப்படி ஒரு உறக்கம்? அதில் கிடைக்கும் சுகம் பற்றி கொஞ்சம் எடுத்துச் சொல், கேட்கிறோம். கருணைக் கடலாகிய சிவனிடத்தில், நீ அன்பு வைத்தது இந்த முறையில் தானோ? உலகம் அழியும் காலத்தில் எஞ்சியிருப்பவன் அவன்
மட்டுமே! உமாதேவியின் துணைவன் மகிமையைப் பாட எங்களுடன் சேர்ந்து கொள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X