பெரு மழைக்கு பின் ... இனி என்ன?| Dinamalar

பெரு மழைக்கு பின் ... இனி என்ன?

Added : டிச 24, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 பெரு மழைக்கு பின் ... இனி என்ன?

கொட்டித்தீர்த்த பெரு மழை, இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட வெள்ளம் ஆகியவற்றால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அடைந்துள்ள சிரமம் கொடுமையானது. பாதிக்கப்பட்டவர்
களுக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்பு ஒரு பக்கம்; அதை விட மனதளவில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் என்றுமே ஆறாது. குடிநீர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளி
களுடனும், அவர்கள் மீட்புக்காகவும், உணவுக்காகவும் கையேந்தி நின்ற காட்சிகளையும், உயிரிழிப்புகளையும் பார்க்கும் போது நெஞ்சு வலித்தது.இறைவன் அனுப்பிய எச்சரிக்கை குறுந்தகவல்தான் இந்த மழை என்பதை உணர்ந்து, மனித நேயத்துடன் மக்கள் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவியால், கடுமையான சிரமங்களிலிருந்து ஓரளவுக்கு அவர்கள் மீண்டு வருகின்றனர்.
புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவை இயற்கையின் சீற்றம் எனலாம். ஆனால் மழை மிக அதிகமாக பெய்வதை இயற்கை தந்த பேரழிவு என குறிப்பிடுவதே மிகத் தவறு. மழை, உயிரினங்களுக்கு இயற்கை தரும் வரமாகும். மழைக்காக யாகம் வளர்த்து வருண பகவானிடம் நாம்
வேண்டியதை மறந்து விடக்கூடாது. பெருமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்படலாம்.
மறைமுக எச்சரிக்கை
மழை அதிகமாக பெய்வது, பல்வேறு வழிகளில் மக்களுடைய நன்மைக்காகத்தான். இயற்கை அதன் வழியில் இயல்பாக சென்று கொண்டிருக்கும் போது, அதன் வழியில் குறுக்கிட்டது மனித
தவறுதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இந்த பெரு மழை விடுத்த மறைமுக எச்சரிக்கை இது என்றுதான் நாம் எடுத்து கொள்ள வேண்டும். இந்த அசாதாரண சூழ்நிலையை திறமையாக கையாளக்கூடிய... எதிர்பாராததை எதிர்பார்த்து எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டிய பேரிடர் மீட்புக்குழுவும் நம்மிடம் தயார் நிலையில் இல்லை என்பதும் ஒரு குறைபாடுதான்.
ஆண்டாண்டு காலமாக நீர்ப் பாதைகளை கண்டுகொள்ளாமல் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளோம். இதற்கு கட்டியவர்கள் காரணமா அல்லது கட்ட அனுமதித்தவர்கள் காரணமா என இப்போது ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. பொதுவாக நகரின் விரிவாக்கம் சரியாக திட்டமிடப்படாததும், அதிக மழையை பெற்றுக் கொள்ள போதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாததும், நீர் வழித்தடங்களை தடுப்பதால் ஏற்படும் கடுமையான விளைவுகள் குறித்தும் மக்களுக்கு போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாததும்தான், இந்த பேரழிவுக்கு காரணம். நீரின் போக்கு தடுக்கப்பட்டதால், நீர் வராது என்று உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளும் நீரில் மூழ்கின.
நீர்வழித்தடங்கள் வெளியிடப்படுமா சில நாட்களில் நன்றாக வெயில் அடித்தவுடன், இந்த மழை கற்றுத்தந்த பாடங்களை மக்கள் எளிதாக மறந்து விடலாம். அதே தவறுகள் மீண்டும் தொடரலாம். அரசு நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுமோ என்பதுதான் இன்றைக்கு பலரது அச்சம். ஒவ்வொரு ஏரிக்கும், கண்மாய்க்கும் வரும் நீர், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர் ஆகியவற்றின் வழித்தடங்களை மக்களுக்கு வரைபடங்கள் மூலம் குறிப்பாக
அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலுள்ள ஒவ்வொரு கண்மாயின் பரப்பும், ஆழமும் அந்த வரைபடங்களில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்த வரைபடங்களை வலைதளங்கள் மூலம் கிடைக்க செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்களே நீர் வழித்தடங்களிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு செய்யாமலும், பிறர் செய்ய விடாமலும் பார்த்து கொள்வார்கள்.
யாராவது இந்த வழித்தடங்களில் கட்டடம் கட்டவோ அல்லது வேறு வகையில் ஆக்கிரமிப்பு செய்யவோ முயற்சித்தால் மக்களே ஒன்றுகூடி தடுப்பார்கள். கண்மாய்களில் துார்வாரும் பணி முழுமையாக நடக்கிறதா என்பதை கண்காணிப்பார்கள். விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு
தண்டனை கிடைக்கவும் செய்ய முடியும்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், தங்கள் இடங்களை விற்பனைக்காக விளம்பரம் செய்யும் போது, வெள்ள வரைபடத்திற்கு உட்படாத இடம் என்றோ அல்லது நீர்வழித்தடங்களை ஆக்கிரமிக்காத இடம் என்றோ குறிப்பிட்டு விளம்பரம் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது.
மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சி சென்னையையும் அதைச் சுற்றியுமே தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் அமைக்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து அங்கு சென்று பணியாற்றுகிறவர்களுக்கு வீடுகள் தேவைப்படும் சூழலில் நீர் வழித்தடங்கள் என்றுகூட பார்க்காமல் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. தொழில் வளர்ச்சி தமிழகம் முழுவதும் பரவலாக இருந்திருந்தால், மழை வெள்ளத்தின் சேதாரம் இந்தளவு இருந்திருக்காது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள் நிறைந்த தென் மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அறிவு சார்ந்த பட்டதாரிகள் வெளிவருகின்றனர். ஆனால் தென்தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் வேலை கிடைக்காமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு குடிபெயர்கின்றனர்.
பெரிய தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சென்னையிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் இனியாவது தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பிறநாட்டு விமானங்களும் வரக்கூடிய வகையில் முழுமையான பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும். மதுரை விமான நிலையத்தை சரக்கு விமான நிலையமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தும் கூட, இன்னும் பணிகள் முடிந்து நடை
முறைக்கு வரவில்லை. பல முக்கிய ரயில் திட்டங்கள் நத்தை வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள் இதனை கவனிக்க வேண்டும்.
பாதிப்பு இல்லாத மதுரை மாநிலத்தில் புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கையின் சீற்றத்திற்கு உட்படாத இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பான இடங்களில் தங்கள் முதலீடுகளை செய்யவும் வாய்ப்பாக இருக்கும். பேரிடர் ஏற்படாத இடமான மதுரை போன்ற தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகளை துவக்க, அன்னிய தொழில் முதலீட்டாளர்கள் ஆவலுடன் வருவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு, மக்களும் கஷ்டப்பட்டு அதற்குபின் நிவாரண பணிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிப்பதை விட, நிரந்தர தீர்வான மாநிலத்திற்குள் நதிநீர் இணைப்பு மற்றும் நீர்வழிச்சாலைகள் அமைப்பது பற்றி அரசு முடிவெடுக்க வேண்டும்.
- எஸ்.ரத்தினவேல்,முதுநிலை தலைவர்,தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்,மதுரை. 98430 53153.வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
28-டிச-201511:24:59 IST Report Abuse
Manian ஐயா எஸ்.ரத்தினவேல் :நீங்க சொல்ற எல்லாமே அரசாங்கத்துக்கு எப்பவோ தெரியும். ஓட்டு போடுரவனுகளிலே 75-80% படிக்காத கிராமவாசிகள்.10% ஒட்டுபோடதா சோம்பேறிங்க பாக்கி 10% சினிமா மாதிரி எல்லாமே இருக்கணும்னு கனவு காணுராங்க 20% கீழேதான் மின்வலை தளம் உள்ளவங்க தினசரி பேப்பர் படிக்குறவனுக, ஆனா எதுவும் ஒபயோகமாக செய்யாதவனுக. வெரும் வாய் சவடால்காரங்க. எவனாவது கல்வி வேணும்னு, ஊர்ல குடிக்க தண்ணி வேணும்னு உண்ணாவிரதம் இருந்து செத்துருக்கானா?. சினிமாக்காரன், கிரிகெட்டுகாரன்னா அவுனுடைய கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யுரானுக. லஞ்சம் கொடுத்து அமுக்கின பொறம் போக்குன்னு சொல்லி அரசாங்க எடத்தை திருடிகிட்ட பொறகு எல்லா பயலுகளும் நதி இணைப்புக்கு நெலம் தரமுடியாதுனு அதைக்கூட 5 மடங்கு வெலைக்குவிக்க முடியாது, ஆனா எலவசமா தண்ணிதரனும்ங்கராங்க.இப்பிடி ஒட்டு மொத்த சமுதாயமே கெட்டுகெடக்கே, அப்பால இப்படி வெருமனே வாய்பந்தல் போடலாமா? நாமதானே அரசாங்கம்?சொதந்திரத்தின் அருமை தெரியாத சனங்களுக்கு யாரும் ஒதவி முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-டிச-201511:47:55 IST Report Abuse
Srinivasan Kannaiya சும்மா எல்லோரும் இது குறித்து காக்கவா கத்தி கொண்டு இருந்தாலும்... எதுவும் இந்த அரசு செய்ய போவதில்லை... மாறாக எப்பிடி தேர்தலில் ஜெயிக்கலாம் என்று வியூகம் வகுக்க தொடங்கிவிட்டார்கள்...இயற்கையும் . தெய்வமும் வாயில் விரலை வைத்து கொண்டு இருக்கவேண்டியதுதான்..
Rate this:
Share this comment
Cancel
g k - chennai  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201510:19:17 IST Report Abuse
g k நீர் நிலைகளையும் நீர் வழித்தளங்களையும் வெப் சைட்டில் யார் வேண்டுமானாலும் பார்க்கும்படி வெளியிட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X