கஞ்சா விற்கச்சொல்லும் காக்கி... காய்ச்சி விற்காததே பாக்கி!

Added : டிச 29, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement
தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக, சித்ராவை அழைத்துச் செல்ல வந்திருந்தாள் மித்ரா.''மித்து...கால் டாக்சி சொல்லிருக்கேன். அரை மணி நேரம் ஆகுமாம். அதுக்குள்ள ஒரு 'க்ரீன் டீ' சாப்பிடலாமா?'' என்றாள் சித்ரா.''ஓ...தாராளமா. இரு...நானே போடுறேன்'' என்று அடுக்களைக்குள் மித்ராவும் நுழைந்தாள்.''நம்மூர் சுகுணா கல்யாண மண்டபத்துல நடந்த 'தேநீர்த்திருவிழா'வுக்குப்
கஞ்சா விற்கச்சொல்லும் காக்கி... காய்ச்சி விற்காததே பாக்கி!

தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக, சித்ராவை அழைத்துச் செல்ல வந்திருந்தாள் மித்ரா.
''மித்து...கால் டாக்சி சொல்லிருக்கேன். அரை மணி நேரம் ஆகுமாம். அதுக்குள்ள ஒரு 'க்ரீன் டீ' சாப்பிடலாமா?'' என்றாள் சித்ரா.
''ஓ...தாராளமா. இரு...நானே போடுறேன்'' என்று அடுக்களைக்குள் மித்ராவும் நுழைந்தாள்.
''நம்மூர் சுகுணா கல்யாண மண்டபத்துல நடந்த 'தேநீர்த்திருவிழா'வுக்குப் போயிருந்தேன்க்கா. செமையா இருந்துச்சு. 'என்ட்ரி'யும் இலவசம். ஆனா, வ.உ.சி., கிரவுண்ட்ல, எக்ஸிபிஷன்க்கு 40 ரூபா என்ட்ரி ஃபீ வாங்குறாங்க...ரொம்ப ஓவர்'' என்றாள் மித்ரா.
''வெளியில வாங்குறதைச் சொல்ற...உள்ள போனா, ஒவ்வொரு 'அம்யூஸ்மென்ட்'டுக்கும் தனித்தனியா 50 ரூபா, பஜ்ஜி 25 ரூபா...அநியாய ரேட். இவ்ளோ வாங்குறாங்க. ஆனா, உள்ளுக்குள்ள ஒரு 'டாய்லெட்' கூட 'நீட்'டா இல்லை. லேடீஸ் எல்லாம் போனா, ரொம்ப அவஸ்தைப்படணும்'' என்றாள் சித்ரா.
''அதுவும் ஆளும்கட்சி வேலை தான். அதை நடத்துறவரோட பெரிய மொபைல் போன்ல பின்புறத்துல பார்த்தா, 'அம்மா' போட்டோ இல்லை. அவருக்கு 'சப்போர்ட்' பண்ற ஆளும்கட்சி வி.ஐ.பி., போட்டோதான் பெருசா இருக்கு'' என்றாள் மித்ரா.
''அதை விடு...சர்க்யூட் ஹவுஸ்ல கூட்டம் போட்டு, ஆபீசர்களை வேகமா வேலை பார்க்கச் சொன்னாங்களே. ஏதாவது வேலை நடக்குதா?'' என்றாள் சித்ரா.
''நம்ம ஊர்ல நடந்துட்டாலும்...கார்ப்பரேஷனே கரைஞ்சிட்டு இருக்கு. ரெண்டு வருஷம் முன்னாடி, 12 பேங்க்ல 200 கோடி ரூபா டெபாசிட் இருந்துச்சு. இப்போ, மொத்தமே 10 கோடி தான் இருக்காம். இதுல சம்பளம், பெட்ரோல், வண்டி பராமரிப்புக்கே மாசத்துக்கு 7 கோடி ரூபா காலியாயிரும்'' என்றாள் மித்ரா.
''அப்பிடின்னா, அடுத்த வருஷத்துலயிருந்து, கார்ப்பரேஷன்காரங்களுக்கு சம்பளம் கிடையாதா?''
''போற போக்கைப் பார்த்தா, அதுவே கஷ்டமாயிரும்போலிருக்கு. கவர்மென்ட் சப்சீடி, டேக்ஸ் கலெக்ஷன், கடன் காசெல்லாம் இந்த டெபாசிட்லதான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து, ரோடு போடுறேன், ஆகாயத்தாமரை எடுக்குறேன்னு அள்ளீட்டாங்க. அப்புறம் என்ன இருக்கும்?''
''சரி...கவர்மென்ட்லயிருந்து ஃபண்ட் கொடுப்பாங்களே. அது என்னாச்சு?''
''இருந்ததை காலி பண்ணிட்டாங்க. இனிமே, கவர்மென்ட் கொடுத்தாத்தான் உண்டு''
''இப்பிடி இருக்குறப்ப...வேலைகளை வேகமா செய்யுங்கன்னு, வெறும் கையில முழங்கை போடச் சொல்றாங்களே. ஆபீசர்க என்ன செய்வாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.
''அவுங்க என்ன செய்வாங்க... நிதியில்லைன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாங்க. ஊரு நல்லாயிருக்கணும்னு எந்த ஆபீசர் இப்போ நினைக்கிறாங்க?'' என்று நொந்து கொண்டாள் மித்ரா.
''நினைச்சாலும் எங்க வேலை பார்க்க விடுறாங்க...போன வாரம், பூ மார்க்கெட் ஏரியால, ரோட்டோர ஆக்கிரமிப்பை கார்ப்பரேஷன்காரங்க எடுத்தாங்க. ஆளும்கட்சியிலயிருந்து ஒரு வி.ஐ.பி., கூப்பிட்டு, 'யாரைக்கேட்டு அதெல்லாம் எடுக்கப்போனீங்க'ன்னு மெரட்டிருக்காரு. உடனே கிளம்பி வந்துட்டாங்க'' என்றாள் சித்ரா.
''இந்த மிரட்டல் பரவாயில்லையே...கஞ்சா விக்கலைன்னா, தொலைச்சிருவேன்'னு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மெரட்டுறாரு...இதுக்கு என்ன சொல்ற?'' என்று குண்டு போட்டாள் மித்ரா.
''ஏய் என்னடி சொல்ற... இது எந்த ஊருல?''
''துடியலூர், கவுண்டம்பாளையம் ஏரியாவுல, கஞ்சா வித்துட்டுருந்த ஒருத்தனை 'குண்டாஸ்'ல போட்டாங்க. அவன் வெளியில வந்ததும், அந்த ஏரியா இன்ஸ்பெக்டரே அவனைக் கூப்பிட்டு, 'மறுபடியும் தொழிலை ஆரம்பி. சீக்ரெட்டா பண்ணு. பொது ஏரியால விக்காத. காலேஜ் பசங்களை மட்டும் கஸ்டமரா வச்சுக்கோ'ன்னு அட்வைஸ் பண்ணி, மாமூல் ரேட்டைச் சொல்லி அனுப்பிருக்காராம்''
''என்ன கொடுமை சரவணன்?''
''கஞ்சா மட்டுமில்லைக்கா. ஒரு நம்பர் லாட்டரி விக்கவும், சில இடங்களை ஏற்பாடு பண்ணிக் கொடுத்து இருக்காராம். இதுல காசை விடுறது, அப்பாவி கட்டிடத் தொழிலாளிங்க''
''சிட்டிய ஒட்டி இருக்குற ஏரியாக்கள்ல தான் இப்போ இந்த மாதிரி அநியாயம் நடக்குது மித்து. வடவள்ளி ஏரியா இன்ஸ்பெக்டரைப் பத்தியும் ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' வருது'' என்றாள் சித்ரா.
''சிட்டிக்குள்ள மட்டும் என்ன வாழுதாம்...சரவணம்பட்டி ஏரியால, ஸ்பெஷல் டீம், 'பிராஸ்டியூஷன்' கேசுல, சிலரைப் பிடிச்சிருக்கு. அதுல ஒரு பொண்ணுக்கு 18 வயசு, இன்னொரு பொண்ணுக்கு 17 வயசு. விசாரிச்சா, அந்த ஏரியா ஸ்டேஷன்ல உளவு பாக்குற ஒரு 'குமாரு'தான், இதுக்கு 'பேக்ரவுண்ட்'ல இருந்திருக்காரு. அதனால, கேசே ரேஸ்கோர்ஸ் ஸ்டேஷன்ல தான் போட்ருக்காங்க'' என்றாள் மித்ரா.
''என்ன மித்து... 17 வயசுப் பொண்ணா... இவுங்கள்லாம் மனுஷங்கதானா?'' என்று கொதிப்போடு பேசினாள் சித்ரா.
''இதுக்கே கொந்தளிக்கிற...கஸ்டமர்கள்ட்ட 15 ஆயிரம் ரூபா வாங்கிட்டு, அந்தப் பொண்ணுங்களுக்கு ரெண்டாயிரம் ரூபாதான் கொடுத்திருக்காங்க. மீதி அமவுன்ட்ல, போலீசுக்கு பெரிய தொகையாம்'' என்றாள் மித்ரா.
''இப்பிடியெல்லாம் சம்பாதிச்சா, அந்தக் காசுல ரத்த வாடை அடிக்காதா?'' என்று வேதனையோடு பேசினாள் சித்ரா.
இருவரும் ஹாலுக்கு வந்து, 'க்ரீன் டீ'யை ருசித்துக் கொண்டே, பேச்சைத் தொடர்ந்தனர்.
''அக்கா...நம்ம சிட்டில, இந்த வருஷத்துல நவம்பர் வரைக்கும், 685 வழிப்பறி, திருட்டு, கொள்ளை நடந்திருக்கு. பணம், நகைக்காக 3 பேரை கொன்னுருக்காங்க. ஏழே முக்கால் கோடி போயிருக்கு. இதுல, 512 கேசுல ஆளைப் பிடிச்சு, ஆறரை கோடி ரூபாயத்தான் மீட்ருக்காங்க. மீதிக்கேசுகள்ல ஆளைப் பிடிக்க முடியாததுக்கு ஒரு முக்கியமான காரணம் சொல்றாங்க''
''போலீசே ஆளுங்களை வச்சுத் திருடுறாங்களா...?''
''சீச்சீ...நம்மூர்ல அந்தளவுக்கு மோசமான ஆபீசர்ஸ் யாரும் இருக்கிறதாத் தெரியலை. இங்க வேலைக்கு வர்ற வட மாநிலத்துக்காரங்களை வச்சு, வழிப்பறி, கொள்ளை நடத்துறதுக்கே ஒரு 'கேங்' இருக்குன்னு சொல்றாங்க. இவுங்களை வேலைக்குக் கூப்பிட்டு வர்ற, வட மாநிலத்து ஆளுங்க தான் இதைப் பண்றதாவும் சொல்றாங்க''
''அப்பிடி இருந்தா, இதுவரைக்கும் எப்பிடி சிக்காம இருப்பாங்க?''
''அங்க தான் விஷயமே இருக்கு. இந்தப் பசங்க எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்களா... அதனால, ஒருத்தருக்கு ஐ.டி.கார்டு வாங்கி வச்சிக்கிட்டு, அதே கார்டுகள்ல கலர் ஜெராக்ஸ் போட்டு, எல்லாருக்கும் கொடுத்துர்றாங்க. கூப்பிட்டு வர்றவனைத் தவிர, இவுங்க யாருக்குமே தமிழ் தெரியாது. அதனால, இவுங்களை வச்சு, கச்சிதமா கொள்ளையடிச்சிட்டு, ஊருக்கு அனுப்பி வச்சிர்றாங்களாம்'' என்றாள் மித்ரா.
''ஓ...இவுங்களோட கை ரேகை எதுவும் பதிவுல இல்லாததால தைரியமாப் பண்றாங்களோ?'' என்றாள் சித்ரா.
''ஆமா...இனிமேலாவது, இவுங்களைத் தீவிரமா கண்காணிச்சா நல்லதுங்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''மித்து....கேக்கவே மறந்துட்டேன். உக்கடம் டெப்போவுல ரெண்டு சொகுசு பஸ் எரிஞ்சுச்சே. என்ன மேட்டர்னு விசாரிச்சியா?''
''ஆமாக்கா...அதுல ஒண்ணு ஸ்பேர் பஸ். அந்த வண்டியோட டிரைவர், ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடியே, வயர்ல பிரச்னை, இன்ஜின் ஹீட் ஆகுதுன்னு சொல்லி, எடுத்துட்டுப்போன வண்டியை திரும்பக் கொண்டு வந்து நிறுத்திட்டு, இதை எழுதி வச்சிருக்காரு. சீனியர் இன்ஜினியர், எலக்ட்ரீஷியன் ரெண்டு பேருமே கண்டுக்கலை. மினிஸ்டர்ஸ் வந்து பார்த்துட்டு, சம்மந்தமில்லாத ரெண்டு பேரை 'சஸ்பெண்ட்' பண்ணிருக்காங்க''
''மினிஸ்டர்ன்னு சொன்னதும், நம்மூரு எம்.எல்.ஏ.,ஞாபகம் வந்துச்சு. சட்டசபையில 'கோக்கு மாக்கா' பேசுனப்போ, 'இவரு யாரு'ன்னு ஜெ.,கேட்டாங்களே. அதே எம்.எல்.ஏ.,தான்...அவரு, சாய்பாபா கோவில்கிட்ட ஒரு இடத்துல, 'மனவாடு'களைக் கூப்பிட்டு, மீட்டிங் போட்டு, 'மறுபடியும் 'சீட்' தர்றேன்னு 'அம்மா' சொல்லிட்டாங்க. அதனால, என்னைய ஆதரிக்கணும். டிஎம்கேல கார்த்திக் நிப்பான். அவனை நம்பாதீங்க'ன்னு சொல்லிருக்காரு''
''அதுக்கு அவுங்க என்ன சொன்னாங்களாம்?''
''ஆளும்கட்சி சிட்டிங் எம்.எல்.ஏ.,கிட்ட என்ன சொல்ல முடியும்...'இத்தனை வருஷமா, இவருக்கு ஜாதிக்காரங்களைத் தெரியலை. எலக்ஷன் வந்ததும், திடீர்னு பற்று வந்துருச்சோ'ன்னு புலம்பிருக்காங்க'' என்றாள் சித்ரா.
''அக்கா... சென்னை வெள்ளத்துல பாதிக்கப்பட்டவுங்களுக்கு மருந்து வாங்குன மேட்டர்ல, நம்மூரு ஆளும்கட்சி வி.ஐ.பி., பெரிய அளவுல காசு பாத்தது, 'அம்மா' வரைக்கும் போயிருச்சாம். ஏதோ அதிரடி இருக்கும்னு, ஏ.டி.எம்.கே., வட்டாரத்துல பேச்சா இருக்கு'' என்றாள் மித்ரா.
சித்ராவின் மொபைலுக்கு, கால் டாக்சி டிரைவர் அழைப்பு விடுக்க, இருவரும் வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
29-டிச-201517:31:36 IST Report Abuse
Murukesan Kannankulam க்ரீன் டீ' போட்டு குடிபதுர்க்குள் முழு நீள படமே ஓடிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X