"கலெக்டர் ஆபீஸ் இடிஞ்சு, மூணு பேருக்கு மண்டை உடைஞ்ச விஷயம் தெரியுமா?'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
"என்னப்பா சொல்றே? நேத்துதானே திறப்பு விழா நடத்துனாங்க, அதுக்குள்ள இடிஞ்சிருச்சா?'' என, பதற்றமானாள் சித்ரா.
"பயப்படாதீங்க, இப்ப செயல்படுற கலெக்டர் ஆபீசை சொன்னேன். கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலக கட்டடத்தில், மழை நீர் தேங்கி, "சீலிங்' வெடிப்பா இருந்துச்சு. "சீலிங்' கான்கிரீட் பெயர்ந்து விழுந்து, மூணு உதவியாளர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டுச்சு. அரசு மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போயி, சிகிச்சை கொடுத்திருக்காங்க. ஒருத்தருக்கு காயம் பலமா இருந்ததால், ரெண்டு நாள் "அட்மிட்'டாகி, சிகிச்சை எடுத்திருக்கார்,'' என்றாள் மித்ரா.
"நம்மூருக்கு புதுசா வந்திருக்கிற, "லேடி' போலீஸ் துணை கமிஷனர், கோல்கட்டா பெண் மாதிரி, "டிரஸ்' பண்ணிட்டு, விசேஷத்துக்கு போனாங்க, தெரியுமா,'' என்றாள் சித்ரா.
"விஷேசத்துக்கு போறதுல, என்ன ஸ்பெஷல் இருக்கு?'' என, அலட்டிக் கொண்டாள் மித்ரா.
"கோல்கட்டா அமைப்பு சார்பில், கிறிஸ்துமஸ் விழா நடந்துச்சு. அம்மாநில கலாசார ஆடை அணிந்து, துணை கமிஷனர் குடும்ப சகிதமா கலந்திருக்காங்க. வழக்கம்போல், அதிரடிப்படை வீரர்களும் கூடவே போயிருக்காங்க. ஓட்டலுக்குள் நுழைந்ததும், "பங்ஷன்'ல சாதாரண பிரஜையா இருந்தால் தான், மக்கள் சகஜமா பழகுவாங்க; பாதுகாப்புக்கு வர வேண்டாம்னு திருப்பி அனுப்பிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
"ஆளும்கட்சி வி.ஐ.பி.,களுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல் ரொம்ப அதிகமாயிடுச்சாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"சிட்டி மம்மிக்கும், "காட்டு ராஜா'வுக்கும் நடக்கும் மோதல்தான், "கார்டன்' வரை சிரிக்குதே. அதைப்பத்தியா சொல்றீங்க,'' என, கேட்டாள் சித்ரா.
"மிலாடி நபி அன்னைக்கு மதுக்கடைகளை மூட, உத்தரவு போட்டிருந்தாங்க. முந்தைய நாள், பல கடைகளில், "சரக்கு'களை பதுக்கி வச்சிருக்காங்க. பல்லடம் ரோட்டுல இருக்கற ஒரு கடையை குறிவச்சு, அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ஏழு ஊழியர்களை "சஸ்பெண்ட்' செஞ்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"பதுக்கல் நடந்தா, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது வழக்கம்தானே. இதுல, என்ன அரசியல் இருக்கு,'' என, துருவினாள் சித்ரா.
"அதே பகுதியில் இருக்குற மற்றொரு கடையில் ஆய்வு நடக்கலை. ஏன்னா, இந்த கடையில், "சிட்டி மம்மி'யோட குரூப்பை சேர்ந்த கட்சி பிரமுகரின் தம்பிதான், சேல்ஸ்மேன். அவரை பழிவாங்குறதுக்காக, இந்த கடையில் மட்டும் ஆய்வு நடந்துருக்குனு கட்சிக்காரங்க சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.
"வருவாயை மீறி, செலவு கூடிட்டே போகுது; கட்டுப்படுத்த யாருமே நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா?'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.
"என்னக்கா, வருவாய் - செலவுன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டீங்க. ஒங்க சக்திக்கு மீறி, அப்படி என்னத்த வாங்குனீங்க?'' என, குசலம் விசாரித்தாள் மித்ரா.
"நான், ஒண்ணும் வாங்கலை. குடிநீர் குழாய் பதிக்காத ஏரியாக்களுக்கு, வாடகை லாரி மூலமா குடிநீர் சப்ளை செய்றாங்க. இதுக்கு முன்னாடி, மாசத்துக்கு, 12 லட்சம் ரூபாய் செலவு செஞ்சாங்க. அதனால், மாநகராட்சி நிதியில, புதுசா தண்ணி லாரி வாங்குனாங்க. ஆனாலும், தண்ணி லாரி வாடகை குறைந்தபாடில்லை. இப்ப, மாசம், 15 லட்சம் ரூபாயா செலவு உயர்ந்திருக்கு. தண்ணி லாரி வாடகைக்கே, வருஷத்துக்கு, 1.80 கோடி ரூபாய் "கப்பம்' கட்டிட்டு இருக்காங்க. இதுக்குப்பதிலா, குழாய் பதிச்சே தண்ணீர் கொடுக்கலாம். ஆனா, எந்தக் கட்சிக்காரங்களும், மன்றத்துல குரல் கொடுக்கறதே இல்லை, அதான் மர்மமா இருக்கு,'' என, ஆவேசப்பட்டாள் சித்ரா.
"இதுக்கு எதுக்கு கோபப்படுறீங்க. மாசம் மாசம் "கணக்கு' எழுதி, "கல்லா' நிரப்புறாங்க. இதுல, எல்லாத்துக்கும் பங்கு இருக்குமே,'' என, கிண்டலடித்தாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE