எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வரவில்லை!
மோகமுள்ளுக்கு பிறகு தமிழில் நாவல்கள் வரவில்லை
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆ.மாதவன் 'சுளீர்'

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, ஆ.மாதவனின், 'இலக்கியச் சுவடுகள்' என்ற புத்தகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழுக்கு பல்வேறு புத்தகங்களை மொழிபெயர்த்த ஆ.மாதவன், 'புனலும் மணலும், கிருஷ்ண பருந்து, துாவானம்' உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதிஉள்ளார்.தன், 92 வயதிலும் தொடர்ந்து வாசித்தும், அவ்வப்போது எழுதியும் வருகிறார். அடுத்த நாவலை எழுதும் அளவுக்கு சாகித்ய அகாடமி விருது, அவரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இந்த வயதிலும் வார்த்தைகளில் குழப்பம் இல்லை. சொற்களில் பிசகு இல்லை. போராளியின் கடைசி துப்பாக்கி ரவையைப் போல, ஒவ்வொரு வார்த்தைகளையும் நேர்த்தியுடன் வீசுகிறார்.

மொழிபெயர்ப்பிலும், புனைவிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டவர் நீங்கள். மொழிபெயர்ப்பை, படைப்பை விட கூடுதல் சுமை கொண்டதாக கருதுகிறீர்களா?
நான், தொழில்முறை எழுத்தாளன் கிடையாது. மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு ரஷ்ய இலக்கியங்களில் மனதை பறிகொடுத்தவன் நான். அதை தமிழுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான், மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன்.
அப்போது திராவிட இயக்க இதழ்கள் நிறைய வெளியாகிக் கொண்டிருந்தன. அவற்றில், 'சிறுகதை' என்ற இதழில் என் மொழிபெயர்ப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, பல படைப்புகள் வெளியாகின. விக்டர் ஹியூகோ, மாப்பசான் போன்றோரின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தேன். மொழிபெயர்ப்பு என்பது, எனக்கு மிகவும் பிடித்து செய்த வேலை. எனவே அதில் எனக்கு எந்த கூடுதல் சுமையும் இல்லை. விருப்பத்துடன் செய்யும் வேலை எப்படி சுமையாகும்?


எந்த புள்ளியிலிருந்து மொழிபெயர்ப்பாளராக இருந்த நீங்கள், புனைவின் பக்கம் சென்றீர்கள்?
ஒரு படைப்பை உச்சபட்ச அளவில் ரசிக்கும் போதே, அந்த இடத்திலிருந்து படைப்பாளனும் உருவாகிறான். தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்து கொண்டிந்த நேரத்தில், கற்பனை கதைகளையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை. திருவனந்தபுரத்தில் நான் சொந்தமாக
பாத்திரக் கடை வைத்திருந்தேன். கடைவீதி, வியாபாரம், வணிகர், புதுப்புது மனிதர்கள், அவர்கள் பேசும் மலையாளமும் தமிழும் கலந்த தமிழ் போன்றவற்றை எழுத்தில் பதிவு செய்ய விரும்பினேன். அதனால் நானும் எழுதினேன்.

எழுத்தாளர் ஞாநி, ஆ.மாதவன் இத்தனை நாட்களாக உயிரோடு இருப்பதை கண்டுபிடித்த சாகித்ய அகாடமிக்கு வாழ்த்துகள் என்று. இத்தனை ஆண்டுகள் உங்களுக்கு விருது வழங்காமல், இப்போது கொடுத்திருப்பதை விமர்சித்திருந்தார். இந்த ஆதங்கம் உங்களுக்கு எப்போதேனும் வந்திருக்கிறதா?
எப்போதும் வந்ததில்லை. நான் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு பிரிவில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவன். அங்கு நடப்பவை எனக்குத் தெரியும். என் புத்தகம், இறுதிச் சுற்று வரை சென்று வந்திருக்கிறது. என் மேல் அன்பு

கொண்ட எழுத்தாளர் திலகவதி கூட, அதற்காக பல முறை முயன்றிருக்கிறார். இருந்தாலும்அதை எல்லாம் நான் ஒருபோதும் கண்டுகொண்டதில்லை. அங்கு நடக்கும் உள் போராட்டங்கள் பற்றி கவனம் செலுத்தியதில்லை. நான் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். அது மட்டும் தான் என் வேலை. அதனால், நமக்கு விருது கிடைக்கவில்லையே என்ற எண்ணம் எப்போதும் எனக்கு வந்ததில்லை. இனி மேலும் அது வரப் போவதில்லை.

 மோகமுள்ளுக்கு பிறகு தமிழில் நாவல்கள் வரவில்லை: சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆ.மாதவன் 'சுளீர்'

இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கிறீர்களா? அவர்களின் எழுத்துக்கள் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?
இன்றைய இளைய தலைமுறையினரின் எழுத்துக்களை சிறு பத்திரிகைகள் மூலமாகவும், தொகுப்புகளாகவும் வாசித்து வருகிறேன். அவர்களில் பத்துக்கு இரண்டு பேர் மட்டுமே தேறுகின்றனர். அவர்கள் இன்னும் நிறைய வாசித்து தங்கள் எழுத்துக்களை செழுமைப்படுத்த வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரில், நாஞ்சில் நாடன் பிரமாதமாக எழுதுகிறார். அவருடைய மொழிநடை குறிப்பிடும்படியாக இருக்கிறது. நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கை, தன் எழுத்தில் கூர்மையாக பதிவு செய்து வருகிறார். புனைவுகளில் மட்டுமல்ல; கட்டுரைகளிலும் அதை பார்க்க முடிகிறது. அவருடைய எழுத்துக்களில் நிறைய நல்ல அம்சங்களை பார்க்கிறேன்.

நாஞ்சில் நாடன், இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு மூத்த தலைமுறை ஆயிற்றே?
எனக்கு, 92 வயதாகிறது. என்னுடைய வயதையும், அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு அவர் தான் இளைய தலைமுறை.

மொழிபெயர்ப்பில், புனைவில் தனித்த இடம் பிடித்த நீங்கள், ஒரு வணிகராக வெற்றி பெற முடியவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு என்றாவது ஏற்பட்டதா?
நான் பாத்திரக் கடை நடத்தி வந்தாலும், என் கவனம் முழுவதும் எழுத்தில் தான் இருந்தது. இருந்தாலும் என்னுடைய தொழிலுக்கு நான் உண்மையாகவே இருந்து வந்தேன். தொழிலில் நேர்மையை கடைப்பிடித்தேன். இரண்டு மகள்கள், ஒரு மகன். பாத்திரக் கடைநடத்தி, அதன் மூலம் பெற்ற லாபத்தில் தான், இரண்டு மகள்களுக்கும் சிறப்பாக திருமணம் நடத்தினேன். எழுத்துக்கு எவ்வாறு உண்மையாக இருந்தேனோ, அதைப் போலவே தொழிலுக்கும் உண்மையாக இருந்தேன். பல்வேறு காரணங்களால், அந்த தொழிலை என்னால் தொடர முடியாமல் போனது. இருந்தாலும், ஒரு வணிகராக

Advertisement

வெற்றி பெற முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை.

ஆரம்ப காலங்களில் திராவிட இயக்கங்களோடு தொடர்பில் இருந்தவர் நீங்கள். அதைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?
தமிழகத்தில் வாசிப்பை ஒரு இயக்கமாக முன்னெடுத்ததில், திராவிட இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் தான் அதை பரவலாக்கினர். இலக்கியத்திற்கென்று பல இதழ்கள் நடத்தினர். பிற்காலங்களில் அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காததால் அவர்களிடம் இருந்து விலகி விட்டேன்.

தமிழ், மலையாள இலக்கிய உலகத்தை அறிந்தவர் நீங்கள். மலையாளத்தில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவதைப் போல், தமிழில் ஏன் நடப்பதில்லை. இந்த மர்ம முடிச்சு எங்கிருந்து துவங்கியது?
தமிழுக்கு பல்வேறு வட்டார வழக்குகள் உள்ளன. மதுரை தமிழ், நெல்லைத் தமிழ், கொங்கு தமிழ், தொண்டை மண்டலத் தமிழ் என, பல வட்டார மொழிகளில் எழுதப்படுகின்றன. ஆனால், மலையாளத்தில் அப்படி இல்லை. தமிழகத்தை ஒப்பிடுகையில் அங்கு கல்வி அறிவு அதிகம். இலக்கிய வாசிப்பு அதிகம். குடும்பத்தில் எல்லாருக்கும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் அப்படி இல்லை. இன்றும் மலையாளத்தில் இளம் எழுத்தாளர் எழுதும் புத்தகங்கள் பல, ஆயிரக்கணக்கில் விற்பனையாகின்றன. தமிழில், பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் கூட, சில ஆயிரங்களை தாண்டுவதில்லை. இந்த பெரும் இடைவெளிக்கு, வாசிப்பு பழக்கமும் கல்வி அறிவுமே பிரதான காரணம்.

தி.ஜானகிராமன் எழுதிய 'மோகமுள்' நாவலுக்குப் பின், தமிழில் நல்ல நாவல்களே வரவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?
பூமணி எழுதிய, 'அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அது, 1,300 பக்கங்கள் கொண்டது. ஜோ டி குரூஸ் எழுதிய, 'ஆழிசூழ் உலகு'க்கும் சாகித்ய அகாடமி கிடைத்திருக்கிறது. அது ஏறத்தாழ, 1,000 பக்கங்கள் கொண்டது. இவ்வளவு பக்கங்கள் எழுதினால், வாசகன் எப்படி படிப்பான்? வட்டார வழக்கில் பிரமாதமாக எழுதக் கூடியவர் கி.ராஜநாராயணன். இருந்தும் நல்ல நாவல் அவரிடமிருந்து வரவில்லை. பொன்னீலன் எழுத்துக்களில் புரட்சி இருந்தாலும் நல்ல புனைவு இல்லை. இப்படி நிறைய எழுத்தாளர்களிடம் நிறைய காரணங்கள். இப்போதும் சொல்கிறேன், தி.ஜானகிராமனுக்குப் பின், தமிழில் நல்ல நாவல்கள் இன்று வரை வரவில்லை.

-அ.ப.இராசா-

Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-201614:44:51 IST Report Abuse

Chinnappa Pothirajநான் பலமுறை என்னை நானே கேள்வி கேட்டுள்ளேன்,சங்க இலக்கியங்கள்,மொழியிலே மூத்த மொழி தமிழ் மொழி,பல புராணங்கள்,என்று அடுக்கிக்கொண்டே போகலாம்,ஆனால் இன்றைய தமிழ் நாடும் ,மக்களும் உண்மையிலே,கல்வி அறிவு,நன்னடத்தை,நல் அறிவு என்று ஒன்று உள்ளதா?எனக்கு என்னைபொருத்தவரை இல்லையென்றே மனம் சொல்கிறது,அதற்கு காரணம் பல.இன்று நடக்கும் பல சம்பவங்கள்,நாட்டின் மீதோ,சமூக அக்கறையில்லாமல்,நேர்மையில்லாமல் செயல்படும்,அரசியல்வாதிகளும்,அரசு பொதுவாக எல்லா துறையினரும்,நேர்மையானவர்கள் சிலரே காணப்படுவர்,அவர்களும் மற்றவர்களால்,ஏமாளி,கோமாளி என்ற புனைபெயர்களோடு,மாறுமா இந்தநிலை?மாறவேண்டும்,வந்தேமாதரம்,ஜைஹிந்த்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஜன-201608:26:40 IST Report Abuse

Kasimani Baskaranநூலகத்துக்கு எதிரானவர்கள் ஆளும் பொழுது நூல்களை படிக்க எப்படி ஆட்கள் வருவார்கள்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X