uratha sindhanai | பேரிடர் மேலாண்மை வாரியம் தூங்குகிறதா?| Dinamalar

பேரிடர் மேலாண்மை வாரியம் தூங்குகிறதா?

Added : ஜன 03, 2016 | கருத்துகள் (1)
பேரிடர் மேலாண்மை வாரியம் தூங்குகிறதா?

இந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை வழக்கத்திற்கு மாறாக, தமிழக மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, கடலுார், துாத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் பல உயிரிழப்பு, வயல்கள், வீடுகள், சாலைகள் என, அனைத்து இடங்களிலும், வெள்ளத்தின் ஆக்கிரமிப்பு, குடி தண்ணீர், மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.

'டெங்கு' காய்ச்சல், கொசுத் தொல்லை, மருத்துவ உதவியில் மந்தம், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத பரிதாபம், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள் இயங்க முடியாத நிலை என, அல்லல்களுக்கும், தொல்லைகளுக்கும் பஞ்சமே இல்லை.பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசுக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதை விட, வேறு என்ன வேலையோ? குறிப்பாக கடந்த, 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட, ஆண்டு வரும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் ஆண்டுதோறும் பருவ மழை பெய்யும் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் உண்டாகும் அபாயங்களையும், பேரிழப்புக்களையும் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?இயற்கைச் சீற்றத்தின் போது நிகழும் துயரச் சம்பவங்களின் போது, அரசியல்வாதிகள் வடிக்கும் நீலிக் கண்ணீர் நாடக அரங்கேற்றம் என, தமிழகம் ஒரு வார காலமாகச் சந்தித்த வரலாறு காணாத வெள்ளச் சேதங்கள்.

வடகிழக்குப் பருவ மழையால் உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் உண்டாகும் என்பதை அனுபவ ரீதியாக அறிந்திருந்தும், மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது ஏன்?பெரு வெள்ளத்தால் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்ட பின், உணவுப் பொட்டலங்கள் வழங்குவதாலும், இலவச வேட்டி, சேலைகள் தருவதாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சில ஆயிரங்களோ, லட்சங்களோ நிவாரண நிதியாக வழங்குவதாலும் மாத்திரம், மக்களுக்கு நிரந்தர நிவாரணம் கிடைத்து விடுமா?கோடை காலத்தில் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள், ஆறுகள், கடல் முகத்துவாரங்களில் குவிந்திருக்கும் அடைப்பு மணலை அப்புறப்படுத்த, துார்வாரும் பணியை மேற்கொள்ள பொதுப் பணித் துறையும், வருவாய்த் துறையும் அக்கறை கொள்ள வில்லை.குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க, மராமத்துப் பணிகளை மேற்கொள்வதோடு, புதிய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தோண்டவும், வீணாகக் கடலில் சென்று கலக்கும் ஆற்றுநீரைத் தேக்கி வைக்க, தமிழக ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டவும், தமிழக ஆறுகளை இணைக்கவும் மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

'டிவி'யிலும், மற்ற ஊடகங்களிலும், அ.தி.மு.க., அரசு, அதைச் செய்யத் தவறிவிட்டது; இதைச் செய்யத் தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தும், தி.மு.க., அக்கட்சி தமிழகத்தை ஆண்ட காலங்களில் இயற்கை விளைவிக்கும் பேரிடர்களைத் தடுக்க ஏன் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை? பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களும், அவற்றில் உள்ள பயிர்களும், மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்குவதும், அதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாவதும், ஆண்டுதோறும் காணுகின்ற காட்சியாகி விட்டது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஓடைகள் மற்றும் இணைப்புக் கால்வாய்கள் ஆண்டுதோறும் துார்வாரப்படாமல் இருப்பதே, மழைநீர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்குக் காரணம்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு முதல்வர் நேரடியாகச் சென்று, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவில்லை என்று, தி.மு.க.,வினர், முதல்வர் மீது குற்றம் சுமத்துவது இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க.,வினரின் அற்ப ஆசையைத் தான் காண முடிகிறது. கடந்த காலத்தில், தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, வெள்ள அபாயத்தைத் தடுக்க எந்தவிதமான நடவடிக்கையையும், மேற்கொள்ளவில்லை என்பதை, மக்கள் நன்கு அறிவர்.

இதே போல், முதல்வர் ஜெ., இந்த ஆண்டு, மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்தது தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டதற்குக் காரணம் என்று, சப்பைக் கட்டு கட்டுவதை ஏற்க இயலாது. கடந்த காலத்தில், தி.மு.க., செய்த அதே தவறைத் தான் அ.தி.மு.க., அரசும் செய்துள்ளது.இவ்விரு கட்சிகளின் ஆட்சியின்போதும், அரசுத் துறைகளின் செயல்பாடுகள், தற்காலிக நன்மை பயப்பனவாகவே இருந்துள்ளன, இருந்து வருகின்றன என்பது தான் உண்மை. பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் விதத்தில், எந்த ஒரு திட்டத்தையும், முழுமையாகச் செயல்படுத்த இவ்விரு கட்சிகளும் அக்கறை காட்டியதில்லை. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள (செயல்படாத) மாநில பேரிடர் மேலாண்மை வாரியம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அரசுக்கு, தன் பரிந்துரைகளை வழங்கி, அரசு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மேற்கொண்டிருந்தால், இத்தகையே பேரிடர் நிகழாதவாறு தடுத்திருக்கலாம். எனவே, இத்தவறுக்கு மாநில அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலம் துவங்கியதும், சாலைகள் தவறாது பழுது பார்க்கப்பட வேண்டும். குறிப்பாக, தற்போது நடைமுறையில் இருக்கும், தார் பயன்படுத்தப்படுவதற்கு பதில் குஜராத் மாநிலத்தில், அம்மாநில அரசு செய்வது போல், உறுதியான கான்கிரீட் சிமென்ட் சாலைகள் போடப்பட வேண்டும். இவ்வாறு செய்வதால் எத்தனை கடுமையான மழை பெய்தாலும், சாலைகள் சேதமின்றி, நீண்டகாலத்திற்கு தாக்குப் பிடிக்கும் வலிமையுடன் இருக்கும். இதை ஊழலற்ற அரசியல்வாதிகளால் மட்டுமே செய்ய முடியும்.ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் ஆண்டுதோறும் கோடை காலத்தில் துார் வாரப்பட வேண்டும். மணல் மேடுகளை அகற்றி, மழைநீர் தாராளமாக ஏரி, குளங்களை சென்றடையும் வண்ணம் துார்வாரும் பணி நடைபெற வேண்டும். இவ்வாறு செய்வதால் தண்ணீர் விளைநிலங்களில் தேங்கி, பயிர்கள் நாசமாகும் நிலை தவிர்க்கப்படும். இதை பேரிடர் மேலாண்மை வாரியம் தான் செய்ய முடியும்.
இ.மெயில்: krishna_samy2010@yahoo.com

- ஜி.கிருஷ்ணசாமி -
கூடுதல் காவல் துறை
கண்காணிப்பாளர் (பணி நிறைவு)
கட்டுரையாளர்,எழுத்தாளர்,
சிந்தனையாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X