பதிவுத்துறையில், 27 லட்சம் ஆவணங்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, 6,000 கோடி ரூபாய் வருவாய் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, சொத்து பரிமாற்றம், உயில், திருமணம் போன்ற ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எனினும், சொத்து பரிமாற்ற ஆவணங்கள் பதிவு செய்வதே பிரதான பணி. இதற்காக, நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
கடந்த 2012ல், அமலுக்கு வந்த, திருத்தி அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்புகளில் குளறுபடிகள் உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதனால், ஆவணங்கள் பதிவு வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த 2011 - 12ல், 36 லட்ச ஆவணங்கள் பதிவானது; 2014 - 15ல், 25 லட்சமாக குறைந்து
விட்டது. தவிர்க்க முடியாத சூழலில் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டிய
நிலையில் உள்ளோர், வழிகாட்டி மதிப்பை விட குறைவாக உள்ள சந்தை மதிப்பை
குறிப்பிட்டு விண்ணப்பிக்கின்றனர்.
இதுபோன்ற ஆவணங்களை வாங்கி, மேல் முறையீட்டுஅதிகாரிக்கு சார் பதிவாளர்கள் அனுப்புவர். இவ்வாறு பரிந்துரைக்கப்படும் ஆவணங்களில், உரிய முடிவு எடுப்பதில் அதிக தாமதம் ஆவதாக புகார் எழுந்துள்ளது.
சமாதான திட்டம் வருமா?
*வழிகாட்டி மதிப்பு பிரச்னையால், பதிவுத்துறையில் ஆவணங்கள் எண்ணிக்கை குறைந்து, வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது* இந்த சமயத்தில், மதிப்பு நிர்ணயம் தொடர்பான பிரச்னைகளால், நிலுவையில் உள்ள ஆவணங்கள் விஷயத்தில் விரைந்து முடிவு எடுத்தால் வருவாய் அதிகரிக்கும்*முந்தைய காலங்களில், இரண்டு ஆண்டுக்குஒரு முறையாவது சமாதான திட்டம் அறிவித்து, நிலுவை பிரச்னைகள் தீர்க்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சமாதான திட்டம் எதுவும் அறிவிக்கப்படாததால், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும், வழிகாட்டி மதிப்பை விட குறைவாகவும், அதிகமாகவும் குறிப்பிட்ட வகையில், மேல் முறையீட்டு அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட, 27 லட்சம் ஆவணங்கள் நிலுவையில் உள்ளன. இதன் வாயிலாக, கிடைக்க வேண்டிய, 6,000 கோடி வருவாயும் நிலுவையில் உள்ளது. இந்த ஆணவங்களை ஆய்வு செய்து முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும், பதிவுத்துறை நலன் கருதி அதிகாரிகள் முடிவு எடுப்பதில்லை. இதனால், சம்பந்தப்பட்டோர் கோர்ட்டை அணுகி தடை பெறுவர். எனவே, சமாதான திட்டத்தை அறிவித்தால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் உடனே கிடைக்கும்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply