உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்| Dinamalar

உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்

Updated : ஜன 04, 2016 | Added : ஜன 04, 2016 | கருத்துகள் (3)
உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்

'இந்தியாவை ஆண்ட முகலாய வம்சத்தின் முதல் மன்னர் யார்' - ஐந்தாம் வகுப்புத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது. இதற்கு 'அக்பர்' என்று பதில் எழுதி விட்டான் ஒரு சிறுவன்.அன்று மாலை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, தான் எழுதிய விடை தவறு என்பதை உணர்ந்தான். கோயிலுக்கு ஓடினான்.
'இறைவா எனக்காக முகலாய வம்சத்தின் முதல் மன்னர் 'பாபர்' என்பதற்குப் பதில் 'அக்பர்' என மாற்றி விடேன். இல்லாவிட்டால் நான் பெயிலாகி விடுவேன்' என வேண்டினான். இதே தவறைதான் நாமும் செய்கிறோம். நாம் செய்யும் வேலையைத் தொழில்நுட்பம் தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
ஆங்கில புத்தகக்கடைகளை 'ஆன் லைன்' கடைகள் விழுங்கி விட்டன. உயரத்தில் நின்று விளம்பரப் பலகை எழுதுபவர்களின் பிழைப்பில் 'பிளக்ஸ்' போர்டு மண்ணைப் போட்டு விட்டது. இந்த நிலையில் நாம் இந்த நாளில் என்ன பிரார்த்திக்க போகிறோம்?
'இறைவா என் உலகம் என்றும் மாறாமல் இருக்க வேண்டும்'.'நான் தொடர்ந்து பார்முலா படங்களை எடுத்து அவை ஒவ்வொன்றும் நுாறு நாள் கொண்டாட வேண்டும்'.'நான் செய்த வேலையையே செய்து பதவி உயர்வு பெற வேண்டும்'.2016ல் தட்ப வெப்ப நிலை உட்பட அனைத்துமே மாறப்போகிறது என்று வல்லுனர்கள் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் 'மாறும் உலகத்திற்கு ஏற்ப மாறும் வல்லமை வேண்டும்' என இறைவனை வேண்டுவோம்.
இதையும் ஒரு புத்தாண்டுத் தீர்மானமாக எடுத்து கேலிக்கூத்தாக்கி விடாதீர். எனக்குப் புத்தாண்டுத் தீர்மானங்களில் இம்மியளவு கூட நம்பிக்கையில்லை.
நண்பரின் சபதம் :பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை என் நண்பர் டிச., 31ம் தேதி புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு ''நாளை முதல் புகை பிடிக்க மாட்டேன்'' என்று என் முகத்தில் புகையை ஊதியபடி சபதம் செய்தார்.''நீங்கள் இந்த சபதத்தை மீறினால்,'' என்றேன்.''அப்படி மீறினால் ஒவ்வொரு முறை மீறும் போதும் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்,'' என்றார்.மறுநாள் காலை ஒன்பது மணி. நானும் அந்த நண்பரும் வெளியூரில் காருக்காக காத்திருந்தோம். ஒரு மணி நேரம் ஓடியது. கார் வரவில்லை. வெறுத்த நண்பர் என் கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டுப் பக்கத்து கடையில் ஒரு 'வில்ஸ்' சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தார்.''உங்கள் வில் பவரை விட (மன உறுதி) வில்ஸ் பவர் (சிகரெட்டின் சக்தி) அதிகம்,'' என்று சொன்னபடி ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்தேன்.
'உங்களால் சத்தியமாகப் புகைப்பிடிக்கும் வழக்கத்தை விட முடியாது''பின் என்ன தான் செய்வது''இனிமேல் புகைப்பிடிக்க மாட்டேன் என்று புத்தாண்டுத் தீர்மானம் செய்யும் கெட்ட பழக்கத்தையாவது இன்றுடன் விட்டு விடுங்கள்'புகைப்பிடிக்க வேண்டும் என்று விரும்புவது யார்? நீங்கள் தான். அந்த பழக்கத்தை விட வேண்டும் என்று மூர்க்கத்தனமாகத் தீர்மானம் செய்வது யார்? அதுவும் நீங்கள்தான். ஆக புத்தாண்டு தீர்மானம் செய்யும் போது நீங்களே உங்களுக்கு எதிரி ஆகிறீர்கள். அதனால்தான் பெரும்பாலான புத்தாண்டு தீர்மானங்கள் ஜனவரி 1-ம் தேதி அன்றே காற்றில் பறக்க விடப்படுகின்றன.
எது முழுமையான வெற்றி :உங்கள் பல் தவறுதலாக உங்கள் நாக்கை கடித்து விட்டது. 'வஞ்சகப் பல்லே நீயா என் நாக்கைக் கடித்தாய்? உன்னை இப்போதே கல்லால் அடித்து உடைக்கிறேன் பார்,' என்று சொல்வதைப் போன்றவைதான் புத்தாண்டு தீர்மானங்கள்.
சரி என்னதான் வழி? நாக்கையும் பல்லையும் கொஞ்சம் கவனமாக கையாளுங்கள். பல்லால் நாக்கு காயப்படும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பல்லிற்கும், நாக்கிற்கும் சண்டை வந்தால் எது தோற்றாலும் அது உங்கள் தோல்விதான்.

நீங்கள் உங்களையே வெல்ல வேண்டும் என்றால் பல்லையும், நாவையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். அதுதான் முழுமையான வெற்றி.
புகை பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் எப்படி தோன்றுகிறது என்று உங்களுக்குள் உற்றுப் பார்த்தாலே போதும். அந்த பழக்கம் போய்விடும்.என் நண்பரின் தந்தைக்கு வயது 80க்கும் மேல் ஆகி விட்டது. நாள் எல்லாம் சும்மாவே வீட்டில் உட்கார்ந்திருந்த அந்த முதியவருக்கு வாழ்க்கை சலித்து விட்டது. அனைவரையும் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.
இதனிடையே மறதி நோய் தாக்கியது. எங்கு இருக்கிறோம். எங்கே செல்கிறோம் என்பதையே மறந்து விடுவார்.நண்பர் ஒரு நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை கேட்டார்.
'இப்படியெல்லாம் நடக்காமல் இருக்க இளமையிலேயே காப்பீடு செய்திருக்க வேண்டும்''அவர் மேல் ஐந்து லட்ச ரூபாய்க்கு உடல் நலக்காப்பீடு இருக்கிறது டாக்டர்''நான் அந்த காப்பீட்டை சொல்லவில்லை. கை கால்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் தினமும் நடைபயிற்சி செய்கிறோம் அல்லவா? அதுபோல முதுமைக்காலத்தில் சலிப்பு நோயும் மறதி நோயும் வராமல் இருக்க நல்ல இலக்கியம் படிக்க வேண்டும். இலக்கியத்தால் செம்மைப்பட்ட மனதையும், பக்தியால் பக்குவப்பட்ட மனதையும் இந்த நோய்கள் தாக்காது'முதுமையில் மருத்துவமனை வாசமா, இல்லை இப்போதே இலக்கிய நேசமா என்று நீங்கள்தான் தெரிவு செய்ய வேண்டும்.வாழ்க்கை பயணம் இனிக்கும் ஒரு நாளில் நீங்கள் பொதுவாக எட்டு மணி நேரம் உழைப்பீர்கள் என்றால் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே திட்டமிடுங்கள். மீதி இரண்டு மணி நேரத்தை விட்டு விடுங்கள். அந்த உபரி நேரத்தில் முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு உதவுங்கள். ரத்த தானம் செய்யுங்கள். முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கே இருப்பவர்களிடம் அளவளாவுங்கள். உங்கள் வாழ்க்கை பயணம் இனிக்கும்.'புதுவருஷம் பிறந்தாச்சு! இந்த வருஷத்திலயும் அதே வேலை! எப்போதும் திட்டிகிட்டு இருக்கிற மேலதிகாரி! பிடுங்கி எறிகிற வேலை! துண்டும் விழும் பட்ஜெட்! கணவனின் நச்சரிப்பு. அதே தொலைகாட்சி சீரியல். அரசியல்வாதிகளின் அலம்பல்கள். 2016க்கும் 2015க்கும் எனக்கு வித்தியாசமே தெரியல சார் என்று சொல்கிறீர்களா?' தினமும் காலையில் கண்ணாடி முன் நிற்கும் போது உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டு கொள்ளுங்கள்.காலாவதியான வாழ்க்கையும் ஆபத்துஇன்று உங்கள் வாழ்க்கையின் கடைசி நாளாக இருந்தால் இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நினைத்திருந்தீர்களோ அதைத் தான் செய்வீர்களா?'இல்லை' என்று தொடர்ந்து பல நாட்களுக்குப் பதில் வந்தால் உங்கள் வாழ்க்கை காலாவதியாகி விட்டது என்று பொருள். காலாவதியான மருந்துக்கள் மட்டுமில்லை. காலாவதியான வாழ்க்கையும் ஆபத்தானதுதான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்குத் தலை முழுகிவிட்டு, இன்று புதிதாக பிறந்தோம் என வாழத் துவங்குங்கள்.தன்னை புரிதல் அவசியம்உலகையே வெல்ல வேண்டும் என்று நினைத்த அலெக்சாண்டரும், ஹிட்லரும் மண்ணோடு மண்ணாய்ப் போனார்கள். தன்னை வென்று இசைவோடு வாழ்ந்த நம் ஞானிகள் பின்னர் உலகையே வென்றார்கள். தன்னை வெல்லுதல் என்பது தன்னைப் புரிந்து கொள்ளுதல்தான். அந்த புரிதலில் அந்த வெற்றியில் நமக்கு எல்லா வரங்களும் கிட்டும்.'என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,எத்தனை மேன்மைகளோ-தன்னை வென்றாலவை யாவும் பெறுவதுசத்தியா மாகுமென்றே'என்று பாரதியின் முழக்கத்தை இந்த புத்தாண்டில் செயல்படுத்துவோம் வாருங்கள்.-வரலொட்டி ரெங்கசாமி,எழுத்தாளர், மதுரை.80568 24024

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X