கடைகளை மூடுது தூசு... கவுன்சிலரு கேக்குறாரு காசு!| Dinamalar

கடைகளை மூடுது தூசு... கவுன்சிலரு கேக்குறாரு காசு!

Added : ஜன 05, 2016
Share
வ.உ.சி., பூங்காவில், ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் உட்கார்ந்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். தனது மொபைலில் வந்த 'வாட்ஸ் ஆப்' வீடியோக்களை, சித்ராவிடம் ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.''என்ன மித்து...நம்மூர்லயா நியூ இயருக்கு இவ்ளோ கூத்து நடந்திருக்கு...அவிநாசி ரோட்டுல, நடு ரோட்டுல 'தீயா' விளையாடிருக்கானுக. போலீஸ் வேடிக்கை
கடைகளை மூடுது  தூசு... கவுன்சிலரு  கேக்குறாரு  காசு!

வ.உ.சி., பூங்காவில், ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் உட்கார்ந்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். தனது மொபைலில் வந்த 'வாட்ஸ் ஆப்' வீடியோக்களை, சித்ராவிடம் ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.
''என்ன மித்து...நம்மூர்லயா நியூ இயருக்கு இவ்ளோ கூத்து நடந்திருக்கு...அவிநாசி ரோட்டுல, நடு ரோட்டுல 'தீயா' விளையாடிருக்கானுக. போலீஸ் வேடிக்கை பாக்குது'' என்றாள் சித்ரா.
''வேடிக்கை பார்த்தாங்களா... இங்க பாரு'' என்று அடுத்த வீடியோவைக் காண்பித்தாள் மித்ரா.
பைக்கை டீனேஜ் பையன் ஒருவன் ஓட்ட...பின்னால் சீட்டில் நின்றபடி, ஆடிக்கொண்டே வந்தான் இன்னொரு பொடியன். எங்கிருந்தோ ஓடி வந்த ஆயுதப்படை போலீசின் லத்தி, அந்த பொடியனை பதம் பார்த்தபின், சிதறித்தெறிக்கிறது. பெண் போலீஸ் ஒருவர், ஓர் இளைஞனை, லத்தியால் அடித்துத் துரத்துகிறார். இப்படி பல காட்சிகள்...
''ஏய்...என்னடி...இப்பிடி அடி வாங்குறானுக. ஒண்ணுமே உறைக்காதா?'' என்றாள் சித்ரா.
''மறுநாள் தெரிஞ்சிருக்கும் வலி. அப்போ நல்ல போதையில இருந்திருப்பானுங்க...பல பசங்க, சரக்கை விட அதிகமா கஞ்சா 'யூஸ்' பண்ணுனதா, நமக்குத்தெரிஞ்ச காலேஜ் பசங்களே சொல்லி வருத்தப்படுறானுக'' என்றாள் மித்ரா.
''பெரிய ஆபீசர் 'பர்மிஷன்' கொடுக்காமலா, போலீஸ்காரங்க, இப்பிடி அடிக்கிறாங்க?''
''அது தெரியலை...ஆனா, இப்பிடி அடிச்சதாலதான், ஆக்சிடென்டை குறைக்க முடிஞ்சது. முந்துன வருஷம் புது வருஷத்தன்னிக்கு, 'நைட்'ல ஏகப்பட்ட ஆக்சிடென்ட்...நாலு பேரு இறந்தாங்க. இந்த வருஷம், ஒரே ஒரு பையன்...அதுவும் தானா விழுந்து இறந்திருக்கான்''
''ஆனா, ரேஸ்கோர்ஸ் ஏரியால, கலெக்டர் பங்களாவுக்கு முன்னயே, காலைல மூணு மணி வரைக்கும், பசங்க ஆட்டம் ஓவரா இருந்துச்சாம் மித்து. போலீஸ் எட்டியே பார்க்கலையாம்''
''எல்லாம் பெரிய இடத்துப் பசங்கன்னு கண்டுக்காம விட்ருப்பாங்க. போலீஸ் வந்திருந்தாலும், காசைப் பறிச்சிட்டு போயிருப்பாங்க''
''கரெக்ட் மித்து...இந்தப் பசங்களுக்கு காசைப் பத்தி கவலையே இல்லை. அதனால தான், போலீஸ் பேட்ரோல் வண்டியில வர்ற போலீஸ்காரங்க, காலேஜ் பசங்கள்ட்ட வலுவா காசைப் புடுங்குறாங்க'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...நானும் கேள்விப்பட்டேன். அவிநாசி ரோட்டுல, 17ம் நம்பர் பேட்ரோல் வண்டில வர்ற போலீசுங்க, எட்டுல இருந்து 11 மணிக்குள்ள அஞ்சாயிரத்துல இருந்து பத்தாயிரம் ரூபா பாத்துர்றாங்க. காலேஜ் பசங்களைப் பிடிச்சு, 'லைசென்ஸ் இருக்கா, சரக்கு அடிச்சிருக்கியா'ன்னு மெரட்டி, 500, 1000னு புடுங்குறாங்க'' என்றாள் மித்ரா.
''முருகா...முருகா...இதைத்தான் மித்து...நானும் சொல்ல வந்தேன்!'' என்ற சித்ரா, தனக்கு வந்த 'வாட்ஸ் ஆப்' வீடியோவை மித்ராவிடம் காண்பித்தாள்.
அதில், காந்திபுரம் இரண்டாவது வீதியில், ரோட்டில் போதையில் ஒரு பெண், பைக் மீது விழுந்து கிடக்க, சுற்றிலும் வேடிக்கை பார்க்கிறது கூட்டம். எஸ்.ஐ.,ஒருவர், அந்தப் பெண்ணின் முகத்தில் தண்ணீரை அடித்தும் அந்தப் பெண்ணால் எழ முடியவில்லை.
''இப்பிடி பட்டப்பகல்லயே, பொண்ணுங்க போதையில ஆடிட்டுத் திரியுற ஊருல, ராவெல்லாம் கடைகளைத் திறந்து வச்சா, என்ன நடக்கும்? நம்ம ஊருல ஏற்கனவே, விடிய விடிய டாஸ்மாக் 'பார்'கள்ல சரக்கு தாராளமா விக்கிறாங்க. சரக்கடிக்கிறவுங்க சாப்பிடணும்னே இப்பிடி ஓட்டல், பேக்கரியெல்லாம் 24 மணி நேரமும் திறந்து விட்டாங்களோ?'' என்றாள் மித்ரா.
''ஊரு பெருசாகிறப்ப, இதெல்லாம் தவிர்க்க முடியாது மித்து...ஆனா, இதைப் பயன்படுத்தி, போலீஸ்காரங்க, வசூல் பண்ணாம இருந்தா சரி'' என்றாள் சித்ரா.
''போலீஸ்ல வசூல் பண்றவுங்களுக்குத்தான் மவுசுக்கா...வெரைட்டி ஹால் லிமிட்ல, மாட்டுக்கறி விவகாரத்துல ரெண்டு 'மர்டர்' நடந்துச்சே. அந்த கேசுல, அக்யூஸ்ட்களைப் பிடிக்கிறதுக்கு, கரெக்டா உளவு பாத்துச் சொன்னது ஒருத்தரு. ஆனா, ரிவார்டு கொடுத்தது, இன்னொருத்தருக்கு'' என்றாள் மித்ரா.
''இதுக்கும் வசூலுக்கும் என்னடி சம்மந்தம்?''
''அப்பிடிக் கேளு...அந்த ஏரியாவைப் பத்தி, அத்துப்படியா தெரிஞ்ச உளவுத்துறை போலீசை, திருநெல்வேலிக்குத் துாக்கி விட்டாங்க. அவரு சொன்ன 'க்ளூ'வை வச்சுத்தான், அக்யூஸ்ட்களைப் பிடிச்சிருக்காங்க. ஆனா, அந்த ஏரியாவுல வசூல் பண்ணி, உளவுத்துறை ஆபீசர்களுக்குக் கொடுக்குற உளவுத்துறைப் போலீசுக்கு 'ரிவார்டு' கொடுத்திருக்காங்க''
''முருகா...முருகா...திருவிளையாடல் ஞானப்பழம் கதையால்ல இருக்கு...நீ இதைச் சொன்னவுடனே, முருகர் பேருல ஆனந்தமா அஞ்சாறு மாவட்டத்துல வசூல் பண்ற ஆபீசர் ஞாபகம் வந்துச்சு. ஆபீஸ் ஆபீசுக்கு வசூல் பண்றது போதாதுன்னு, வெஸ்ட் ஆபீஸ்ல 'சூப்பர்' பொறுப்புல இருக்குற லேடி ஆபீசர்ட்ட மட்டும், மாசம் 20 ஆயிரம் தனியா 'கட்டிங்' வாங்கிக்கிறாராம்'' என்றாள் சித்ரா.
''ஓ...அந்தம்மா மேல எவ்ளோ புகார் போனாலும் தப்பிக்கிறதுக்கு இப்பதான் காரணம் தெரியுது'' என்ற மித்ரா, ''ஏன்க்கா...ஜாப் மேளா வேலையெல்லாம் செமையா நடக்குது. எப்பிடியும் ஒரு லட்சம் பேரைத் திரட்டணும்னு முயற்சி பண்றாங்களாமே?'' என்று கேட்டாள்.
''ஆமா மித்து...ஆளும்கட்சி கவுன்சிலர்க, நிர்வாகிகளை வீடு வீடாப் போயி, நோட்டீஸ் கொடுக்கச் சொல்லிருக்காங்க. குறைஞ்சது, 20 ஆயிரம் பேருக்காவது வேலை கொடுக்கணும்னு 'டார்கெட்' வச்சிருக்காங்களாம். அப்பிடி செஞ்சா, 20 ஆயிரம் குடும்பங்களோட ஓட்டு கிடைக்கும்னு நினைக்குறாங்க போலிருக்கு'' என்றாள் சித்ரா.
''அது சரி...இந்த மேளா சம்மந்தமான போட்டோ, விளம்பரங்கள்ல எல்லாம், அரசியல்வாதிக, ஆபீசர்க இல்லாம, மலர்ந்த முகத்தோட, இன்னொரு மேடத்தோட படமும் சேர்ந்து வருது...கவனிச்சியா?'' என்றாள் மித்ரா.
''நல்லாவே...கவனிச்சேன். அவுங்க தான், இப்போ ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கு, முக்கியமான 'அட்வைசரா'ம்... மகளிரணியில பொறுப்பு ஏதும் வாங்கி, எலக்ஷன்ல நிக்கப் போறாங்களா என்னன்னு தெரியலை''
''அதுக்கெல்லாம் வாய்ப்பு இருக்குறதாத் தெரியலை. ஏற்கனவே, 'அம்மா'வைப் பாத்து, நிதி கொடுக்குறதுக்கு முயற்சி பண்ணுனாங்களாம். ஆனா, உளவுத்துறைட்ட 'ரிப்போர்ட்' கேட்டு வாங்குனதுக்கு அப்புறமா, 'அப்பாயின்மென்ட்' கொடுக்கலைன்னு ஒரு தகவல்''
''டிஎம்கே பீரியட்ல, அந்தக் கட்சி 'தளபதி'யைப் பாத்து, ரெண்டு கோடி ரூபா கொடுத்து தான், அனுமதியில்லாம, அவுங்க கட்டுன காலேஜ் கட்டிடத்துக்கெல்லாம் 'அப்ரூவல்' வாங்குனதா கேள்விப்பட்ருக்கேன். இப்போ, இந்தப் பக்கமா நெருக்கமா இருக்காங்களா...ஒண்ணுமே புரியலை உலகத்துல'' என்று விரலைச் சுழற்றி, தலை சுற்றுவது போல் காட்டினாள் சித்ரா.
''அதை விடு...ஏடிஎம்கேல, இப்பவே பூத் கமிட்டியில இருக்குற மத்த கட்சிக்காரங்களை, விலை பேசுற வேலைய ஆரம்பிச்சிட்டாங்களாம். ஏற்கனவே, எம்.பி., எலக்ஷன்ல, பூத் கமிட்டியில இருந்த பிஜேபிக்காரங்களை விலைக்கு வாங்கித்தான், மயிரிழையில ஜெயிச்சாங்க. இப்பவும், சிட்டிக்குள்ள 50 வார்டுகளுக்கு மேல, பிஜேபிக்காரங்கதான் 'அன்கோ' ஆவுறாங்களாம். பேரம் துாள் பறக்குது''
''துாள் பறக்குதுன்னு சொன்னியே...கிராஸ்கட் ரோட்டுல, 20 நாளைக்கு மேல துாசி பறக்குதே. அதுலயும் அந்த வார்டு கவுன்சிலரு, பேரம் பேசுறாரு. சீக்கிரமா ரோடு போட, கொஞ்சம் செலவாகும்னு, கடை 'சைஸ்'க்கேத்தாப்புல, காசு கேக்குறாராம். ரோட்டுக்கடைக்காரங்கள்ட்ட, ஆளுக்கு ரெண்டாயிரம் கொடுங்க, ரோட்டைக் கழுவி விடுறேன்னு எகத்தாளமாப் பேசிருக்காரு''
''ரொம்ப தைரியம் தான்...!'' என்றாள் மித்ரா.
''ஆட்சி மாறாதுங்கிற தைரியத்துல தான், இந்த மாதிரிப் பேசுறாங்க. ஆனா, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சில பேரு, 'நமக்கு உறுதியா சீட்டு இல்லை'ன்னு தெரிஞ்சதும், கட்சி நிகழ்ச்சி எல்லாத்துலயும் ஒதுங்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்றாள் சித்ரா.
''அங்க ஒதுங்குறாங்க. டிஎம்கேல ஒதுக்குறாங்க. நேத்து நடந்த ஆர்ப்பாட்டத்துல, எல்லா கோஷ்டி நிர்வாகிகளையும் மேடையில ஏத்துனாங்க. ஆனா, மீனா லோகுவை மேடையில ஏத்தல. அவுங்க போட்ருந்த மஞ்ச 'பேட்ஜ்'ல, ஸ்டாலின் படத்துக்குக் கீழ, லோகு, மீனா படத்தையும், பேரையும் பெருசா போட்டதுல மாவட்டங்க கடுப்பாயிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.
''கூட்டம் எப்பிடியிருந்துச்சு மித்து?''
''பரவாயில்லைக்கா. ஆனா, வடக்கு, தெற்கு மாவட்டம் எல்லாத்துக்கும் சேர்த்துன்னு கணக்குப் பண்ணுனா, அது ரொம்ப குறைச்சலான கூட்டம் தான். மாநகராட்சியக் கண்டிச்சு நடந்த ஆர்ப்பாட்டத்துல, அதைப்பத்தி அதிகமாப் பேசாம, அமைச்சரைக் கண்டிச்சு தான் அதிகமா பேசுனாங்க''
''மித்து...பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டுன பொலிரோ ஒண்ணு...பொள்ளாச்சி ரோட்டுல, ராத்திரியில நின்னு, போலீஸ்னு மெரட்டி பணம் பறிக்குதாமே?'' என்றாள் சித்ரா.
''வெறும் வண்டியா வசூலிக்குது...உள்ளுக்குள்ள இருக்குற கருப்பு ஆடுகள் யாரு?'' என்று கேட்டாள் மித்ரா.
சுற்றிலும் ஆள் நடமாட்டம் அதிகரிக்கவே, 'வெளிய வா...சொல்றேன்' என்று எழுந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X