"பின்னலாடை தொழில்துறையை சேர்ந்தவங்க, மத்திய அமைச்சரை வரவழைச்சு, "வெற்றிப்பாதையில் திருப்பூர்' நிகழ்ச்சி நடத்துனாங்களே; போயிருந்தியா,'' என, கேள்வியோடு, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
"ஆமாக்கா, போயிருந்தேன். பின்னலாடை துறைங்கிறது சாதாரண தொழில் இல்லை; சங்கிலி தொடர் போல, 13 பிரிவுகளை உள்ளடக்கியிருக்கு. திருப்பூர்ல ரெண்டு நாள் தங்கியிருந்த மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, "நிட்டிங்', "டையிங்', "காம்பாக்டிங்'குனு, ஒவ்வொரு கம்பெனிக்கும் போயி, ஒவ்வொரு விஷயத்தையும், நுணுக்கமா, ஆர்வமா கேட்டு தெரிஞ்சிருக்காரு.
"அதுமட்டுமல்ல. முதலையுண்ட பாலகனை மீட்ட தலமான, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வரலாறையும், திருப்பூர் வரலாறையும், மகாபாரத இதிகாச கதையோடு தொடர்புபடுத்தி, சிலாகித்து, இந்தி மொழியில், மேடையில் அவர் பேசுனதை கேட்டு, தொழில்துறையினர் அசந்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.
"அதெல்லாம் சரி, திருப்பூருக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்வாங்களா,'' என, இடைமறித்தாள் சித்ரா.
"ஏறத்தாழ, 400 சிறு, குறு தொழில்கள், மத்திய அரசின் சிறு குறு நிறுவனங்கள் துறைக்கு கீழே வருது; அதுல பின்னலாடை துறையும் வருது. பின்னலாடை துறையை ஆச்சரியமா கேட்ட அவர், அனைத்து உதவியையும் மத்திய அரசு செய்யுமுனு, <உறுதியளிச்சிருக்கார். நட்பா பழகுற, "கேபினட் மினிஸ்டர்' கிடைச்சிருக்கார்; நல்லா பயன்படுத்தி, ஒரு லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை பிடிச்சிருவோமுனு, தொழில்துறையினரும் நம்பிக்கையா இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"புது கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழாவுக்கு வேலை செஞ்ச எஸ்.ஐ., ஒருத்தரை "டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க தெரியுமா?'' என்றாள் சித்ரா.
"என்னக்கா சொல்ற? எதுக்கு "டிரான்ஸ்பர்' பண்ணுனாங்க?'' என, அதிர்ச்சியாக கேட்டாள் மித்ரா.
"கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழா தேதி அறிவிச்சதும், மாநகராட்சி பணியாளர்களை களமிறக்கி சுத்தம் செஞ்சு கொடுத்தாங்க. ஏன்னு தெரியலை, வேலை செஞ்ச, 14வது "டிவிஷன்' மேஸ்திரி, 12வது "டிவிஷன்' சுகாதார ஆய்வாளரை, வேறு மண்டலத்துக்கு "டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க. சக ஊழியர்கள் கோபத்துல இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
"ஓ... மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை (எஸ்.ஐ.,) பத்தி சொல் வர்றீயா, நானும் கேள்விப்பட்டேன். விசாரிச்சப்போ, உண்மை தெரிஞ்சுச்சு, பழைய பஸ் ஸ்டாண்டில், வேலையே செய்யாம கணக்கு போட்டு கையெழுத்து கேட்டிருக்காங்க. கையெழுத்து போட முடியாதுனு சொன்னதால, ஒரே நாளில், "டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க. நேர்மையா இருந்தா "பந்து' மாதிரி, உதைச்சு விரட்டிட்டே இருப்பாங்க,'' என்றாள் மித்ரா.
"நீர் நிலையை ஆக்கிரமிச்சு, கலெக்டர் ஆபீஸ் கட்டியிருக்குன்னு கௌம்புன, பிரச்னை என்னாச்சு: காற்றில் கரைஞ்ச மாதிரி போயிடுச்சே,'' என, கேட்டாள் சித்ரா.
"குறைகேட்பு கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் கூட, அதைப்பத்தி கண்டுக்கலை. எதிர்ப்பு காட்டிய அரசியல் கட்சியினர் வழக்கு போடப்போறதா சொன்னாங்க. அரசியல் "பிரஷர்', உறவுக்குள் பிரச்னை வருதுன்னு, கத்தியை கீழே போட்டுட்டாங்க,'' என்றாள் மித்ரா.
"அலுவலக கணக்குல வராம, மின் இணைப்பு கொடுத்து, லட்சக்கணக்குல முறைகேடு செஞ்ச விவகாரத்துல, எலக்ட்ரீசியன் மீது வழக்கு போட்டு, கைது செஞ்சிருக்காங்க, பார்த்தியா,'' என்றாள் சித்ரா.
"விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததும், ஆளும்கட்சி பிரமுகர்களிடம் பஞ்சாயத்து போயிருக்கு. பலகட்ட பேச்சு நடத்தியும், எந்த பிரயோஜனமும் ஏற்படலை. "கனெக்சன்' வாங்குனவங்க, ரொம்ப ஸ்ட்ராங்க இருந்திருக்காங்க. கடைசியா போலீசுக்கு போன, மின்வாரிய அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்த மின் மீட்டர் திருடு போய் விட்டதாக, வழக்கு பதிய பேரம் பேசியிருக்காங்க. அதெல்லாம் முடியாதுன்னு, போலீஸ் கமிஷனர் கறாரா பேசி, திருப்பி அனுப்பியிருக்கார்,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE