சிவகாசி;விருதுநகர் மாவட்டத்தில் தகுதி இருந்தும் தரம் உயராத முதல் நிலை ஊராட்சிகளில், அடிப்படை வசதிகள் என்பது முழுமையாக பூர்த்தியாகாமல் உள்ளன.நகராட்சி பகுதிகளை யொட்டி உள்ள முதல் நிலை ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்காக அல்லல்படுகின்றனர். இந்த ஊராட்சிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை, ஆண்டுக்கு ரூ.30 முதல் 40 லட்சம் வரை வருவாய் வருகிறது. வருமானம் வரும் ஊராட்சிகளாக இருந்தாலும் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. குறைந்த அளவிலே சுகாதார பணியாளர்கள் உள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு:குறைந்தளவு துப்புரவு பணியாளர்களால் டன் கணக்கில் சேரும் குப்பையை அகற்ற முடியவில்லை. இதனால் ஆங்காங்கே குப்பையை கொட்டி மாத கணக்கில் வைக்கின்றனர். சில இடங்களில் தீ வைத்து எரித்து வேலை பளுவை குறைக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாடுபடும் நிலை உருவாகிறது. சேரும் குப்பையை அகற்ற டிராக்டர் வசதி கூட இல்லை. இதனால் இங்குள்ளோர் சுகாதார சீர்கேட்டில் பாதிக்கின்றனர். குடிநீரும் போதுமான அளவு கிடைப்பது இல்லை. வாரம் ஒருமுறை, பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் பெறும் நிலை உள்ளது.
சுணக்கம் :ஒருசில ஊராட்சிகளில் பிரச்னை தீர்க்கும் நோக்கில் ஊராட்சி தலைவர்கள் தங்கள் சொந்த செலவில் கூடுதல் "ரிஸ்கில்' துப்புரவு பணியாளர்களை கூலிக்கு வைத்து குப்பையை அப்புறப்படுத் துகின்றனர். கூலி பிரச்னைகளை எப்படி சரி செய்வது என உள்ளாட்சி பொறுப்பில் உள்ளவர்கள் தவிக்கின்றனர். ஊராட்சி விரிவாக்க பகுதிகளில் தெரு விளக்கு, ரோடு வசதிகள் செய்து கொடுப்பதிலும் பெரும் சுணக்கம் நிலவுகிறது. தாமதம்உதாரணத்திற்கு சிவகாசி ஒன்றியத்தில் ஒரு பேரூராட்சி கூட இல்லை. ஆனால் சிவகாசி யொட்டிய சித்துராஜபுரம், ஆனையூர், விஸ்வநத்தம், பள்ளபட்டி முதல் நிலை ஊராட்சிகளை பல ஆண்டுகளுக்கு முன்பே பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி இருக்க வேண்டும். என்ன காரணத்தினலோ தரம் உயர்த்தாமல் உள்ளனர். சிவகாசி 52 ஊராட்சிகளை உள்ளடக்கிய பெரிய ஊராட்சி ஒன்றியமாக உள்ளது. இங்குள்ள நான்கு முதல் நிலை ஊராட்சிகளை தரம் <உயர்தி பேரூராட்சிகளாக மாற்றப்பட்டால் , ஒன்றியம் பகுதி சுருங்கி விடும் என்ற நோக்கில் பேரூராட்சிகளாக தரம் உயர்த்த தாமதப்படுத்துகிறார்களா என புகார் கூறுகின்றனர்.
வாழ்க்கை தரம் :சிவகாசி பாண்டியன்,"" தகுதி உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தினால் மக்கள் வாழ்க்கை தரம் மேம்படும். அடிப்படை வசதிகளும் மேம்படும். தற்போது முதல் நிலை ஊராட்சிகளில் நிதி ஆதாரம் நல்ல நிலையில் இருந்தும் வசதிகள் செய்ய முடியாத நிலை உள்ளது. தகுதியான முதல் நிலை ஊராட்சிகளை தரம் உயர்த்த வேண்டும்,''என்றார்.