வேட்டி மடிச்சு கட்டு...

Updated : ஜன 08, 2016 | Added : ஜன 08, 2016 | கருத்துகள் (5)
Share
Advertisement
தடைகளை தகர்த்தெறிந்து ஜல்லிக்கட்டு நடக்கப்போகிறது.மாடு பிடித்து பெயர் பெற்றவர்கள் பலர் உண்டு மாடு பிடிப்பதை படம் பிடித்து பெயர் பெற்றவர்கள் சிலர் உண்டு அவர்களில் சிறப்பானவர் சென்னை லட்சுமணன்.அவரது படங்களுக்காகவே எழுதப்பட்ட கட்டுரை முழு விவரத்தி்றகு நிஜக்கதை பார்க்கவும்.வேட்டி மடிச்சு கட்டு...இந்த வருடம் ஜல்லிக்கட்டு இருக்குங்ற வார்த்தையே தமிழர்கள் பலரது
 வேட்டி மடிச்சு கட்டு...


தடைகளை தகர்த்தெறிந்து ஜல்லிக்கட்டு நடக்கப்போகிறது.மாடு பிடித்து பெயர் பெற்றவர்கள் பலர் உண்டு மாடு பிடிப்பதை படம் பிடித்து பெயர் பெற்றவர்கள் சிலர் உண்டு அவர்களில் சிறப்பானவர் சென்னை லட்சுமணன்.அவரது படங்களுக்காகவே எழுதப்பட்ட கட்டுரை முழு விவரத்தி்றகு நிஜக்கதை பார்க்கவும்.

வேட்டி மடிச்சு கட்டு...

இந்த வருடம் ஜல்லிக்கட்டு இருக்குங்ற வார்த்தையே தமிழர்கள் பலரது வயிற்றில் பால் வார்த்துள்ளது.

அந்தக்காலத்தில் புழக்கத்தில் இருந்த சல்லிக்காசை மாட்டின் கொம்பில் கட்டிவிடுவார்கள்,அந்த காசை எடுப்பதற்காக நடத்தப்பட்ட விளையாட்டு என்பதால், சல்லிக்காசுக்கான விளையாட்டு கொஞ்சம்,கொஞ்சமாக மருவி ஜல்லிக்கட்டு விளையாட்டாகிவிட்டதாக ஆய்வாளர்களால் கருதப்படும் இந்த விளையாட்டு, சல்லிக்காசிற்கு பெறாத விளையாட்டாகிவிடுமோ என்ற அச்சம் நீங்கியதில் கிராமங்களில் சொல்லமுடியாத மகிழ்ச்சி கரைபுரண்டு ஒடுகிறது.

கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்து குரல் கொடுத்தது அநேகமாக இந்த ஒரு விஷயத்தில்தான், இருந்தாலும் இதைவிடாமல் முன்னெடுத்து சென்று வெற்றி பெற்றதில் பாஜகவிற்கும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் கூடுதல் பங்கு இருக்கிறது.அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் இவர்கள் கூடுதல் நன்றிக்குரியவர்கள்.

பெயரைக்கேட்ட மாத்திரத்தில் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை நாடி நரம்பெல்லாம் முறுக்கெடுத்து களத்தில் நிற்பார்கள் என்றால் அந்த பெயர்தான் ஜல்லிக்கட்டு.

இயற்கை இன்னல்கள் யாவற்றையும் தாங்கிக்கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் வியர்வை பெருமையை ,விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றும் பொங்கல் திருநாளின் உற்சாக வடிவமே இந்த ஜல்லிக்கட்டு.

ஜல்லிக்கட்டு என்பது தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட விஷயம்,ஊரோடு ஒன்றிவிட்ட கலாச்சாரம்.தமிழர்களின் மானம்,வீரம் மற்றும் பண்பாட்டின் சின்னமாக விஞ்சி இருக்கும் இந்த ஜல்லிக்கட்டை மீட்டு எடுப்பதற்குள்தான் எவ்வளவு பாடு.

மாட்டை பட்டினி போட்டு லாரிகளில் ஏற்றி அடிமாடாக அனுப்பினாலும் சரி, அது போகுமிடத்தில் கொன்று கூறுபோடப்பட்டாலும் சரி அதெல்லாம் தப்பில்லை ஆனால் அதே மாட்டை குளிப்பாட்டி கொம்பிற்கு வண்ணம் பூசி பொங்கலும் கரும்பும் கொடுத்து வருடத்தில் ஒரு நாள் துள்ளி விளையாடவிட்டு வேடிக்கை பார்த்தால் தப்புன்னு சொன்னதுதாங்க புரியலை.

காலம்,காலமாக நண்பர்கள்,உறவினர்கள் பார்த்து மகிழ நடத்தப்பட்டுவந்த இந்த வீரவிளையாட்டு,வெளிநாட்டுக்காரர்களை சந்தோஷப்படுத்த கண்காட்சி போல நடத்தப்பட்டதை அடுத்துதான் பிராணி வதை தடுப்பு இயக்க தலையீடு, தடை போன்ற சங்கடங்களை அனுபவிக்கவேண்டி வந்தது.

'சொல்லேற்றுக் கோடாஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் துல்லிச்சுட்டு வேண்டும்'என்று கலித்தொகை காலந்தொட்டு பெருமையுடன் பேசப்பட்ட,பாடப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாமல் போனதால் வெறிச்சோடியது கிராம மண் மட்டுமல்ல தமிழர்கள் பலரின் மனதும்தான்.

அலங்கநல்லுார்,பாலமேடு,,சிறாவயல்,புதுக்கோட்டை,கொடிக்குளம்,வேந்தன்பட்டி,அவனியாபுரம்,மேட்டுப்பட்டி உள்ளீட்ட கிராமங்களில் ஏதோ ஒன்றை பறிகொடுத்த சோகத்திற்கு உள்ளானார்கள்

இப்போது சில வழிகாட்டுதல்களின்படி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.காட்டாற்று வெள்ளம் போல ஒரு வரை முறையில்லாமல் நடந்த ஜல்லிக்கட்டிற்கும் இந்த வழிகாட்டுதல்கள் தேவைதான்.

நாலு பேருக்கு மேல் சூழ்ந்துகொண்டு மாடு பிடிக்கக்கூடாது,மாடுகளின் கொம்புகளிலோ,உடம்பிலோ எண்ணெய் தேய்க்கக்கூடாது,ஊக்கமருந்து கொடுக்கக்கூடாது,விலங்குள் நலவாரியத்திற்கு தகவல்தந்து வாரியத்தின் பிரதிநிதிகளை பார்வையாளர் பகுதியில் உட்காரவைக்கவேண்டும்,கால்நடை மருத்துவர் சான்றிதழ் தந்த மாடுகளே களத்தில் இறக்கப்பட வேண்டும்,பார்வையாளர்களுக்கு பாதுகாப்பாக இரண்டு அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்,மாடுகள் மற்றும் வீரர்களுக்கு காப்பீட்டு செய்யவேண்டும் என்பது போன்ற விஷயங்கள் ஏற்கக்கூடியதுதான்.

சிங்கம்,புலி,கரடி,சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் பட்டியலில் இருந்து தற்காலிகமாக காளைகள் கழட்டிவிடப்பட்டது குறித்து மகிழ்ச்சி இது நிரந்தரமாகவேண்டும் காரணம் காளை என்பது கிராம மக்களுக்கு விலங்கல்ல வீட்டில் ஒரு உறுப்பினர் என்பதை கிராமத்து பக்கம் போனால் தெரிந்து கொள்ளலாம்.

கேரளாவில் அடிக்கடி யானைகளை வைத்து நடக்கும் விழாக்களில் ஏற்படும் விபத்துகளைவிட தமிழகத்தில் காளைகளைவைத்து நடத்தும் விழாக்களில் குறைவுதான்,ஆனால் யானைகளை விட்டுவிட்டு மாடுகளை தடைசெய்தது குறிப்பாக ஜல்லிக்கட்டை குறிவைத்தே போடப்பட்ட தடையை நீக்கியே ஆகவேண்டும் என்று போராடிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது.

இது மாடு அல்ல எங்கள் கிராமத்து தெய்வம் என்று என இறந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்றின் நினைவாக அதன் உருவத்தை சிலைவடிவத்தில் வைத்து வழிபடும் மதுரை மாவட்டம் பொந்துகம்பட்டி கிராமத்தினரிடம் பேசிப்பார்த்தால் தெரியும் ஜல்லிக்கட்டு எந்த அளவிற்கு அவர்களது ரத்தத்ததோடு ஊறிப்போய் இருக்கிறது என்பதை.

இதில் 20 அடி நீளக்கயிற்றில் கட்டப்படும் காளையின் கொம்பில் முடிச்சுப்போட்டு தொங்கவிடப்படும் பணத்தை நேருக்கு நேர் சென்று,நின்று,வென்று எடுக்கும் மஞ்சுவிரட்டு விளையாட்டுகளும் மறுவாழ்வு பெற்றது கூடுதல் மகிழ்ச்சி.

காலம் மாறுது உலகம் கம்ப்யூட்டர் யுகத்தில் போய்க்கொண்டு இருக்கிறது இப்ப போய் மாடு பிடிக்கிறேன் அது இதுன்னு என்று கேலிப்பேச்சு பேசியே பல பழமையான நல்ல விஷயங்களை கொளுத்தி போட்டுவிட்டோம்.மிஞ்சியிருப்பது இந்த ஜல்லிக்கட்டு மட்டுமே.தடை நீக்கப்பட்டதில் ஜல்லிக்கட்டிற்கு மட்டுமல்ல ஆர்வலர் அனைவருக்குமே உயிர்வந்துள்ளது.

முனியாண்டி,முத்தாலம்மன்,காளியம்மன் என்று அந்தந்த கிõரம தெய்வங்களை வணங்கி மண்ணின் நன்மைக்காகவும்,மக்களின் மேன்மைக்காகவும் ஓரு வழிபாடு போல நடத்தப்படுவதே இந்த ஜல்லிக்கட்டு என்பதை புரியவைப்போம்.

வராது வந்த மாமணி போல காலம் காலமாக போற்றி புகழ்ந்து நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டை செவ்வனே நடத்துவதில்தான் நம் பெருமையும் புகழும் மட்டுமல்ல ஜல்லிக்கட்டின் பெருமையும் அருமையும் அடங்கியிருக்கிறது.

-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
22-ஜன-201602:07:20 IST Report Abuse
kundalakesi நான் ஜல்லிக் கட்டை நேரில் பார்த்ததில்லை. ஆயினும் இது நடக்கப் போகிறது என்பதில் சொல்ல முடியாத உற்சாகம் வருகிறது. சண்டித்தனம் செய்யும் புரிந்து கொள்ள மறுக்கும் பேட்டா முகத்தில் அடி, அவர்கள் வகுத்த பொருளாதார சதியில் இடி.
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
09-ஜன-201607:48:36 IST Report Abuse
மு. செந்தமிழன் முருகராஜ் அவர்களே உங்கள் கட்டுரைகள் அனைத்துமே ரசிக்கும்படி உள்ளது. சலசலப்பு இல்லாமல் அமைதியாக ஓடும் ஆற்றங்கரையில் உள்ள ஒரு சாய்ந்த தென்னை மரத்தின் தோகைகள் அந்த நதியின் மேல்புறத்தில் உள்ள நீரை வருடுவதுபோல் உள்ளது. அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
09-ஜன-201607:37:47 IST Report Abuse
மு. செந்தமிழன் கொஞ்சம் வேஷ்டிய எறக்கி விடப்பா டவுசர் தெரியுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X