தமிழர் வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது ஜல்லிக்கட்டு. மரபு சார்ந்த, பண்பாடு கலந்த, சமயம் சார்ந்த, தமிழக மக்களின் உணர்வாகவும் கருதப்படும் ஜல்லிக்கட்டு, மிருக வதை சட்டத்தின் அடிப்படையில், 2014, மே மாதம் தடை செய்யப்பட்டது.
காளைகளின் கொம்புகளில் பரிசுப் பொருட்கள் கட்டப்படுகின்றன. அந்தப் பொருட்களை கவர்தல் பொருட்டு, காளைகளை அடக்க ஆண்கள் முற்படுகின்றனர். அந்த நேரத்தில், ஒரு சிலர் அதன் முதுகில் அடிக்கின்றனர்; துன்புறுத்துகின்றனர்; சிலர் மாடுகளுக்கு மது ஏற்றுகின்றனர் என, காரணம் காட்டி, இவ்விளையாட்டுக்கு தடை
விதிக்கப்பட்டது.நீதிமன்றம் கூறும் காரணங்கள் நடக்கவே இல்லை என, கூறி விட முடியாது; அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருக்கலாம். அந்தக் காரணங்கள் நடைபெறாமல் காக்க வேண்டியது, அரசின் கடமை, பொதுமக்களின் பொறுப்புணர்வாகவும் இருக்கிறது.
மாடுகளை, செல்வமாகக் கருதினர் தமிழக மக்கள். அந்த மாடுகளை கொண்டாடினர். துன்புறுத்தல் என்ற நிலைக்கு அவர்கள் செல்லவில்லை. கருதவும் இல்லை. அப்படி கருதியிருந்தால் மாடுகளுக்கென்று ஒரு பொங்கல் வைத்திருக்க மாட்டார்கள். அதை குளிப்பாட்டி, கொம்பு சீவி, சாயம் பூசி, பொட்டு வைத்து, பூமாலைப் போட்டு கொண்டாடும் பழக்கத்தையும் கொண்டு வந்து இருக்க மாட்டார்கள். கோழி, ஆடுகளை சாப்பிடுவதற்கும், பலி கொடுக்கவும் வளர்த்தனர்; ஆனால் மாடுகளை உழவுக்கும், பாலுக்கும் மட்டுமே வளர்த்தனர்.
பகை நாட்டின் மீது போர் தொடுக்க நினைக்கும் அரசன், முதலில் பசுக்களை தான் கவர்ந்து வரச்சொல்வான். அவ்வாறு கவர்ந்து செல்லப்படும் பசுக்களை, மானம், செல்வமாகக் கருதி மீட்டு வருவர் என்கிறது இலக்கியம்.
தமிழர்களின் அகத்தையும், புறத்தையும் மகிழ்வித்த வீரவிளையாட்டான இது, பழங்காலத்தில் ஏறுதழுவுதல் என்றும் மஞ்சுவிரட்டு என்றும் அறியப்பட்டது.
பெண் பிள்ளைகள் இருக்கும் முல்லை நிலத்து வீட்டில், காளைகள் வளர்க்கப்படும். அந்தக் காளையை அடக்கும் ஆணே, தன் பெண்ணை மணப்பதற்குத் தகுதி வாய்ந்தவன்; வீரத்தில் சிறந்தவன் என்று, பெண்ணைப் பெற்றவர்கள் முடிவு செய்வர். பெண்ணும், காளையை அடக்கும் வீரனையே மணக்கவிரும்புவாள்.ஐந்தறிவு காளையை, ஆறறிவு ஜீவனாகிய ஒருவன் அடக்குதல் தான் வீரமா, மாண்பா என்ற கேள்வி எழுந்தால், அதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது.முல்லை நில மக்கள் மலை சார்ந்த பகுதிகளில் வசித்தனர். ஆடு, மாடுகள் தான் அவர்களது வாழ்வின் ஆதாரம். பால், நெய், வெண்ணெய், மோர் விற்றுப் பிழைத்தல் அவர்களின் தொழில். அப்படி வாழ்வின் ஆதாரமான பசுக்களுக்குப் புல் இடுவது, புண்ணாக்குக் கொடுத்து பராமரிப்பது பெண்ணின் கடமை; ஆனால் அவற்றிற்கு ஓர் ஆபத்து என்றால் காப்பது, குடும்பத் தலைவனின் கடமையாக இருந்தது.காட்டிலிருந்து புலிகள், மாடுகளை எளிதில் கவர்ந்து சென்று விடும் அபாயமும் இருந்தது. அத்தகைய சூழலில் புலியை விரட்டி பசுக்களை, ஆண் காப்பாற்ற வேண்டும்; அதற்கு அவன் வீரம் பொருந்தியவனாக இருக்க வேண்டும்.
பசுக்களைப் பிடிக்க வரும் புலி, தன் அன்பு மகளை பிடித்துப் போகாது என்பது என்ன நிச்சயம்? அப்போது தன் மகளையும் காத்து, புலியுடன் தைரியமாகச் சண்டையிடும் மனம், உடல் தகுதி கொண்டவனாக ஆண் இருக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கருதினர். அதன் அடிப்படையில் தான் இந்த ஏறுதழுவுதல் விளையாட்டு நடைபெற்றது.
ஏறுதழுவுதல், 2,000 ஆண்டு
களுக்கு முற்பட்டது என்பதை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
'ஓஓ இவள் பொருபுகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் திருமாமெய் தீண்டலர்' - என்னும் கலித்தொகைப் பாடல் வரிகள், 'போர் செய்வதில் விருப்பமுடைய ஆணைத் தவிர, வேறு யாரும், இவள் மெய் தீண்டத் தகுதியற்றவன்' என்று குறிப்பிடுகிறது.
ஏறுதழுவும்போது பயம், அச்சம் போன்ற உள்ளுணர்வுகள் விலக வேண்டும் என்ற கருத்தில், வாத்தியங்கள் இசைப்பர்; பறையடிப்பர். விழா முடிந்த பின் மகிழ்ச்சியின் அடையாளமாக, பெண்கள் குரவைக் கூத்து நடத்துவர்.
ஓர் ஆண் மகன், காளையை அடக்கும் நிகழ்வை, பரண் மீது அமர்ந்தோ, வரிசையாக நின்றோ, பெண்கள் வேடிக்கை பார்த்தனர். காளை அடக்கச் செல்லும் முன் மாமரத்தின் கீழ் இருக்கும் கடவுளையும், ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து இருக்கும் தெய்வத்தையும் வணங்கிச் சென்றதாக, முல்லைக் கலி கூறுகிறது.காளையை அடக்கி, ஏறுதழுவுதல் முடிந்த பின், திருணம் நடக்கும். வீட்டின் முன் மணல் பரப்பி, வீட்டிற்கு செம்மண் பூசுவது வழக்கம். இப்போதும், பொங்கலின்போது கிராமங்களில், திண்ணைகளுக்கு செம்மண் பூசும் வழக்கம் உள்ளது.
டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு முத்திரை, சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது. அந்த முத்திரையில் ஒரு எருதை பல ஆண்கள் சுற்றி நின்று அடக்குவது போல் உள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீர விளையாட்டு நடந்திருக்கிறது என்பதற்கு இது சான்றாகக் கருதப்படுகிறது. எருது, வீரன் இருப்பது போன்ற சில தமிழக நடுகற்களும், தமிழர்களின் வீரவிளையாட்டு இது என்பதை
நிரூபிக்கின்றன.ஆரம்பத்தில், நிலம் சார்ந்து தான் இனம் அறியப்பட்டது; ஜாதியெல்லாம் பிற்காலத்தில் வந்தவை. அதனால் தான் ஜல்லிக்கட்டு, தமிழக மக்கள் அனைவரின் கலாசாரமாகக் கருதப்படுகிறது.
சங்க இலக்கியங்கள் பெரும்பாலும், களவு வாழ்க்கை - காதல், கற்பு வாழ்க்கை - திருமணம் ஆகிய இரண்டையும் குறிப்பிடுகின்றன. ஆனால் முல்லை நிலத்தில் மட்டும் தான் களவை விடவும், வீரம் அதிகமாகப் பேசப்படுகிறது. வீரத்தைச் சார்ந்து அவர்களின் திருமணம் நடந்தது. இந்த வீரம், காதலுக்கு ஒப்பானது என்பதை, சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
தமிழகம் தவிர ஸ்பெயின், போர்சுகல் நாடுகளில் காளையை அடக்கும் போட்டி நடைபெறுகிறது. எனவே, ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டல்ல; அது நம் பண்பாட்டின் பிரதிபலிப்பு என்பதில் பெருமை கொள்வோம்!இ-மெயில்:eslalitha@gmail.com