சென்னை:மதுரை, கிருதுமால் ஆற்றில், குப்பைகளை அகற்ற, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.மதுரை மாநகராட்சி, அதன் புறநகர் பகுதியில் பாயும் கிருது மால் ஆற்றை துார்வாரி பராமரிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த, அழகுமுத்து வேலாயுதம் என்பவர், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், பொதுநல வழக்கு தொடர்ந்தார்.நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் அடங்கிய, இரண்டாவது அமர்வு முன், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மதுரை மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனு:வைகை ஆறு, கிருதுமால் ஆற்றை துார்வாரி சீரமைப்பது தொடர்பாக, மூன்று வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன.இரண்டு நீர் நிலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய, 2014 பிப்., 1ல் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் காந்திமதி நாதன், தனியார் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் நாகராஜன் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சி தாக்கல் செய்த மனுவில், 'கிருதுமால் ஆறு, 20 கி.மீ., துாரம் மதுரை மாநகராட்சியில் பாய்கிறது. எங்கள் பகுதிக்கு உட்பட்ட ஆற்றை பராமரித்து வருகிறோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுபணித் துறை தாக்கல் செய்த மனுவில், 'மதுரை மாநகராட்சியை தவிர்த்து, புறநகர் பகுதியில், 66 கி.மீ., துாரம் கிருதுமால் ஆறு பாய்கிறது. அந்த ஆற்றை சீரமைக்க, 2013 - 14ல், 66 கோடி ரூபாய் செலவிட்டு பராமரித்து வருகிறோம்' என, கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுரை மாநகராட்சி, அதன் புறநகர் பகுதியில் பாயும் கிருதுமால் ஆற்றில் இருக்கும் குப்பையை அகற்ற வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுத்து, பராமரிக்க வேண்டும். உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கிருதுமால் ஆறு தொடர்பாக வழக்கு நடந்து வருவதால், இரு வேறு உத்தரவுகள் பிறப்பிக்கும் பட்சத்தில் குழப்பம் நேரிடலாம். அதனால், இந்த வழக்கு முடித்து வைக்கப் படுகிறது.பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கை தொடர்ந்த மனுதாரர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெறும் வழக்கில் தன்னையும் இணைத்து கொள்ள, மனு தாக்கல் செய்யலாம். மேலும், கிருதுமால் ஆற்றை முறையாக பராமரிக்காத பட்சத்தில், தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE