பல கோடி ரூபா அவுட்... கிடைச்ச வேலையும் டவுட்!| Dinamalar

பல கோடி ரூபா அவுட்... கிடைச்ச வேலையும் டவுட்!

Added : ஜன 12, 2016
Share
லேசான வெயிலுடன் மதிய நேரத்தில், அந்த வனம் அத்தனை குளுமையாயிருந்தது. சித்ராவும், மித்ராவும், 'டிரெக்கிங்' முடித்து விட்டு, கோவைக் குற்றாலத்தில் குளியல் போட நடந்து கொண்டிருந்தனர்.''மித்து! சாடிவயல்லயும் 3 கும்கிகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடக்குது தெரியுமா?'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா! முடிஞ்சா போறப்ப, எட்டு வயசு குட்டி மசினியோட சேட்டையப் பாத்துட்டுப் போவோம்.
பல கோடி ரூபா அவுட்... கிடைச்ச வேலையும் டவுட்!

லேசான வெயிலுடன் மதிய நேரத்தில், அந்த வனம் அத்தனை குளுமையாயிருந்தது. சித்ராவும், மித்ராவும், 'டிரெக்கிங்' முடித்து விட்டு, கோவைக் குற்றாலத்தில் குளியல் போட நடந்து கொண்டிருந்தனர்.
''மித்து! சாடிவயல்லயும் 3 கும்கிகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடக்குது தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா! முடிஞ்சா போறப்ப, எட்டு வயசு குட்டி மசினியோட சேட்டையப் பாத்துட்டுப் போவோம். வீட்டுல ஒரு வேலையும் இல்லை. மெதுவாப் போகலாம்'' என்றாள் மித்ரா.
''ஒரு வேலையும் இல்லேன்னா, நீயும் 'மெகா' ஜாப் மேளாவுக்குப் போயிருக்கலாமே. நீ வேலைக்குப் போனா, ஊர்ல பல பேரு நிம்மதியா இருப்பாங்கள்ல'' என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்ரா.
''அதென்னவோ உண்மைதான்க்கா...ஆனா, அங்க நடந்தது, 'மெகா' சொதப்பல் மேளா. செம்ம கூட்டம்...குறிப்பிட்ட காலேஜ்கள்ல இருந்து, 'ஃபைனல் இயர்' பசங்களை எல்லாம் பஸ்சுல கூப்பிட்டு வந்துட்டாங்க. மேளாவுல பங்கேத்த ஒரு காலேஜோட ஸ்டூடண்ட்ஸ் சில பேருக்கு காலையில 6 மணிக்கே, 'இன்டர்வியூ' முடிச்சு, 'ஃப்ளைட்'ல சென்னைக்குக் கூப்பிட்டுப் போயி, அம்மா கையில 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' கொடுக்குறதா 'ப்ளான்' பண்ணிருக்காங்க'' என்று நிறுத்தினாள் மித்ரா.
''அம்மாவோட 'அப்பாயின்மென்ட்' கிடைக்கலையா?'' என்றாள் சித்ரா.
''அது தெரியலை...ஆனா, வந்ததெல்லாம் மொக்க கம்பெனி. இன்ஜினியரிங் முடிச்சவுங்களுக்கு, மூவாயிரம் ரூபாலயிருந்து 8 ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பளமில்லை. ஈரோடு, திருப்பூர்ன்னு எங்கெங்கேயோ இருந்த 'கேக்ரான் மேக்ரான்' கம்பெனியெல்லாம் பிடிச்சுட்டு வந்து, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாதிரி, ஒரு 'மெகா டிராமா'நடத்திட்டாங்கன்னு, பேரன்ட்ஸ் பல பேரு பேசிக்கிட்டாங்க''
என்றாள் மித்ரா.
''ஆனா, ஸ்கூல்ல படிச்சவுங்களுக்கு நல்லா வேலை கிடைச்சதுன்னு சொன்னாங்க''
''ஆமா...அது உண்மைதான். அஞ்சாங்கிளாஸ், பத்தாங்கிளாஸ் படிச்சவுங்க பல பேருக்கு, லேத் வேலை, ஓட்டல் வேலைன்னு பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைச்சது. பள்ளிப்படிப்பு முடிச்சவுங்களுக்கு, அது 'சக்சஸ் மேளா'தான். பட்டதாரிகளுக்கு, அது சர்க்கஸ்மேளா. பல பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க. அதுவும் நிலைக்குமான்னு 'டவுட்'டா இருக்காம்!''
''ஆளே தேவையில்லைன்னு, விஆர்எஸ் கொடுக்குற சில கம்பெனிகளை நிர்ப்பந்தப்படுத்தி கூப்பிட்டு வந்தாங்களாம். அவுங்க, முதல் ஒரு மணி நேரத்துல, பேருக்கு சில பேரை எடுத்துட்டு, கடைய மூடிட்டாங்களாமே'' என்றாள் சித்ரா.
''ஆமா...மா...இதுக்காக, பல டிபார்ட்மென்ட்கள், ஆளும்கட்சி வி.ஐ.பி., எல்லாம் சேர்ந்து, எட்டு கோடி ரூபா செலவழிச்சதாப் பேசிக்கிறாங்க. ஒரு பிரயோஜனமும் இல்லை. பசங்க, இப்பவே பேஸ்புக்லயும், வாட்ஸ் ஆப்லயும் வறுத்தெடுக்குறாங்க'' என்றாள் மித்ரா.
''ஒரு வி.ஐ.பி., தொகுதியைச் சேர்ந்த, ஆறாயிரம் பேருக்கு வேலை கொடுத்திருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.
''வாழ்ந்தா...அந்த தொகுதியில வாழணும்க்கா. அந்த ஒத்தத் தொகுதியில ஜெயிக்கிறது, உறுதியாயிருச்சு. மத்த தொகுதி...?'' என்று மூச்சு வாங்கிக் கொண்டே கேட்டாள் மித்ரா.
''மத்த தொகுதிகளுக்காகத்தான், இந்த 'ஜாப் மேளா'வே நடத்துனதா சொல்றாங்க. சிட்டியில மூணு தொகுதி, ரொம்ப 'வீக்'கா இருக்குன்னு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்த பிறகு தான், இந்த வேலை வாய்ப்பு முகாம் வேலையவே ஆரம்பிச்சாங்களாம்'' என்றாள் சித்ரா.
''சிங்காநல்லுார் தொகுதியில இருக்குற ஆளும்கட்சி கிளைச் செயலாளர்களுக்கெல்லாம், தலைக்கு 10 ஆயிரம் பிளஸ் ஸ்வீட் பாக்ஸ் கிடைச்சுதாம். கொடுத்தது யாருன்னு தெரியுமா?'' என்றாள் மித்ரா.
''யாரு....சிரிக்கவே தெரியாத சிடுசிடு ....சாமிதானா?''
''அவரே தான்...காசைக் கொடுத்துட்டு, 'எனக்கு தான் 'சீட்'டுன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதனால, நீங்க வீடு வீடாப் போய், கேன்வாசை ஆரம்பிங்க. உங்களுக்கு என்ன செய்யணுமோ செய்யுறேன்னு சொன்னாராம்''
''போன வருஷம் கூட, அவரை 'காணவில்லை'ன்னு தொகுதியில போஸ்டர் ஒட்டுனாங்க. இத்தனை வருஷமா கண்டுக்காதவரை, இப்போ யாரும் கேள்வி கேக்கலையா?''
''கேள்வி கேட்டு, காசு கெடைக்காமப் போயிட்டா...!''
''எல்லாம் காசாலயே அடிக்கலாம்னு நினைக்கிறாங்க போலிருக்கு. மத்த தொகுதிகளை விட, வடக்குத் தொகுதிக்கு தான், ஆளும்கட்சியில பெரிய கிராக்கியாம். மேயரு, கான்ட்ராக்டரு, பழையவருன்னு பல பேரு முட்டி மோதுவாங்க போலிருக்கு'' என்றாள் சித்ரா.
''ஆனா, டிஎம்கேல வடக்குத் தொகுதியில, எனக்கு சீட்டு உறுதின்னு, அந்த 'மேக்கப்' கவுன்சிலர் மேடமும், அவரோட வீட்டுக்காரரும் களத்துல இறங்கி, வேலை பாக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.
''ஸ்டாலின் இங்க வந்தப்போ, ஏதாவது உத்தரவாதம் கொடுத்தாரா?'' என்றாள் சித்ரா.
''தனியா சில பேரு சந்திச்சிருக்காங்க. இப்போ எதுவும் முடிவு பண்ண முடியாது. கூட்டணியெல்லாம் முடிவாகட்டும். அப்புறம் பார்க்கலாம்னு சொல்லிட்டாராம்'' என்றாள் மித்ரா.
''கூட்டணின்னு சொன்னதும், எனக்குக் கோயம்புத்துார்ல புதுசா துவங்கியிருக்குற ஒரு தொழில் கூட்டணி ஞாபகத்துக்கு வந்துச்சு. கிரைண்டர் கம்பெனி வச்சிருக்கிறவரும், ப்ரியமான ப்ரதர் ஒருத்தரும் கூட்டணி போட்டு, சீனாவுல இருந்து மோட்டாரை வாங்கி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்ல மாட்டி 'சப்ளை' பண்றாங்களாம். லேட்டஸ்ட்டா கொடுக்குற மிக்ஸி, கிரைண்டர்களோட தரம், படு மோசமா இருக்காம்'' என்றாள் சித்ரா.
''என்னக்கா...விவகாரம் பெருசா இருக்கும் போலயே...யாருக்கா இந்த கூட்டணி?'' என்றாள் மித்ரா.
''கண்மணி...அன்புடன் காதலன் நான் எழுதும் கடிதமே...முதல்ல கண்மணி போட்டியா...!'' என்று 'குணா' கமல் பாட்டைப் பாடினாள் சித்ரா.
''ஓ...பாட்டாவே படிச்சிட்டியா?'' என்று சிரித்த மித்ரா, ''அக்கா...சுவாஜ் பாரத்ல நம்ம கார்ப்பரேஷனுக்கு 196வது ரேங்க் கிடைச்சதா, போன வருஷம் ஒரு பட்டியல் வெளிய வந்துச்சே. ஞாபகமிருக்கா?'' என்றாள்.
''திருச்சிக்கு ரெண்டாவது இடம்னு போட்ருந்தாங்களே. அது ஒரு அபத்தமான லிஸ்ட்டாச்சே''என்றாள் சித்ரா.
''ஆமா...அது பொய்ன்னு நம்ம கார்ப்பரேஷன் கமிஷனர் மறுத்தாரே...இப்போ, சென்னையில இருந்து ஒரு ஏஜன்சி டீம் நிஜமாவே வந்து, மூணு நாளு, சிட்டில 'ரேண்டமா' ஆய்வு பண்ணிட்டுப் போயிருக்காங்க. இந்த முறை சிங்கிள் அல்லது டபுள் டிஜிட்டுக்குள்ள நமக்கு ரேங்க் கிடைக்கும்னு கமிஷனர் நம்பிக்கையாச் சொல்றாரு'' என்றாள் மித்ரா.
''நம்பிக்கையே நல்லது....எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது'' என்று 'சிகரம்' பாடலைப் பாடினாள் சித்ரா.
''அக்கா...ஹவுசிங் போர்டுல நடந்த கலாட்டா பத்தி எதுவும் கேள்விப்பட்டியா?'' என்றாள் மித்ரா.
''தெரியலையே...என்னா மேட்டர்?'' என்றாள் சித்ரா.
''ஆளும்கட்சி கவுன்சிலரோட ஹஸ்பெண்ட் ஒருத்தரு, ஹவுசிங் போர்டுல வாட்ச்மேனா இருந்தாரு. ஆளும்கட்சி தொழிற்சங்கத்துல இருக்கிறதை வச்சு, ஜூனியர் அசிஸ்டென்ட் போஸ்ட்டிங் வாங்கிட்டு வந்தாரு. வீரகேரளத்துல ஆள் மாறாட்டம் பண்ணி, பத்திரம் கொடுத்த கேசுல சிக்கி, சஸ்பெண்ட் ஆயிட்டாரு. ஆனா, தன்னோட வேலையப் பார்க்க, தங்கச்சியைக் கொண்டு வந்தாரு'' என்றாள் மித்ரா.
இடையி்ல் புகுந்த சித்ரா, ''அந்தப் பொண்ணுக்கு, கருணை அடிப்படையில வேலை வாங்குறதுக்காக, கல்யாணமாகலைன்னு பொய் சொன்னதா நானும் கேள்விப்பட்ருக்கேன். அந்தப் பொண்ணா?''என்றாள்.
''அதே மேடம் தான்...பத்திரம் கொடுக்கிறதுல அந்தப் பொண்ணு, பயங்கரமா காசு வாங்குதுன்னு வேற சீட்டுக்கு இ.இ.,மாத்திருக்காரு. அதுக்கு தான், தண்ணியப் போட்டு வந்து, இன்ஜினியரை தாறுமாறா திட்டிருக்காரு, அந்த பாசக்கார அண்ணன். இ.இ.,புகார் கொடுத்து, 5 செக்ஷன்ல எப்ஐஆர் போட்டாங்க. ஆனா, அரெஸ்ட் பண்ணவேயில்லை'' என்றாள் மித்ரா.
''அடக்கொடுமையே...மினிஸ்டர் வைத்தியலிங்கம் இங்க வந்தாரே...இதெல்லாம் அவருக்குத் தெரியாதா?''
''ரெண்டு பேருமே, அவர்ட்ட புகார் பண்ணிருக்காங்க. அம்மாவைப் பத்தியும், ஆட்சியைப் பத்தியும் அவரு தப்பாப் பேசுனாருன்னு அடிச்சி விட்ருக்காரு அந்த தகராறு பார்ட்டி. ஆனா, அந்த இன்ஜினியர் நல்லவர்ன்னு மினிஸ்டருக்கு நேரடியாத் தெரிஞ்சதால, அவரு எப்ஐஆர் போடச் சொல்லிட்டாராம்''
''மித்து...இப்போ 'ஐ.ஜி.இன்ட்'டா வந்திருக்கிறவரு, கொங்கு மண்ணின் மைந்தராம். அவரு, கொங்கு பெல்ட்ல நடக்குற பல விஷயங்களை தனி டீம் போட்டு விசாரிக்கிறதா ஒரு தகவல்'' என்றாள் சித்ரா.
அதற்குள், அருவியின் சத்தம் அவர்களின் பேச்சை நிறுத்தியது. கூட்டமேயில்லாத கோவைக்குற்றாலம், ரம்மியமாய், அமைதியாய்
இருந்தது. பாலருவியாய்த் தெளித்த மூலிகைத் தண்ணீர், அவர்களை ஆனந்தத்தில் நனைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X