காலம் காலமாக குரோம்பேட்டை சாலை மட்டும் மூழ்குவதேன்?| Dinamalar

காலம் காலமாக குரோம்பேட்டை சாலை மட்டும் மூழ்குவதேன்?

Updated : ஜன 23, 2016 | Added : ஜன 13, 2016 | கருத்துகள் (4)
Advertisement
காலம் காலமாக குரோம்பேட்டை சாலை மட்டும் மூழ்குவதேன்?

சமீபத்திய பெருமழை வெள்ளத்தில், சென்னையை மற்ற நகரங்களோடு இணைக்கும், அனைத்து நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சென்னையே முடங்கியது.அந்த சாலைகளில், முக்கியமானது, தாம்பரம்- கிண்டி இடையேயான ஜி.எஸ்.டி., சாலை. அந்த சாலை முடங்க, பெருமழை பெய்ய வேண்டிய அவசியமே இல்லை. வெறும், 2 மணிநேரம் மட்டும் தொடர்ந்து மழை பெய்தாலே, குரோம்பேட்டையில் ஒரு கி.மீ., துாரத்திற்கு சாலை மூழ்கி விடும். வாகன போக்குவரத்து முடங்கும். இது கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. குரோம்பேட்டையின் பிரதான பகுதியிலேயே ஏன் இந்த வெள்ள பாதிப்பு; அங்கு என்ன தான் பிரச்னை; இந்த பிரச்னைக்கு தீர்வு தான் என்ன என்று நமது நிருபர் குழு, பல்லாவரம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன. வெள்ளம் எதனால்?* பருவமழைக் காலத்தில் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், 'மெப்ஸ்' வளாகம் வழியாக, தேசிய சித்தமருத்துவமனையை அடையும்.* அங்குள்ள கால்வாய் வழியாக, சானடோரியத்தில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோவில் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள சிறுபாலத்தில் புகுந்து, ரயில் தண்டவாளத்தை மற்றொரு சிறுபாலம் வழியாக கடந்து, சிட்லபாக்கத்தில் உள்ள, மத்திய அரசுக்கு சொந்தமான கிடங்கு வழியாக, சிட்லபாக்கம் பிரதான சாலையை, மேலும் ஒரு சிறுபாலம் வழியாக கடந்துசிட்லபாக்கம் ஏரிக்கு செல்லும். * அதேபோல், பச்சைமலையில் இருந்து வரும் மழைநீரும், திருநீர்மலை துர்கா நகரில் உள்ள, வீட்டு வசதி வாரியத்தில் இருந்து வெளியேறும் ஒரு பகுதி மழைநீரும், ஜி.எஸ்.டி., சாலையில் ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள சிறுபாலம் வழியாக சிட்லபாக்கம் ஏரிக்கு செல்லும்.* இந்த கால்வாய், 2001ம் ஆண்டு புதுப்பித்து கட்டப்பட்டது. அப்போது மேற்கு பகுதியில் இருந்து, கிழக்கு நோக்கி நீர் செல்லும் வகையில் இருந்த கட்டமைப்பை, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நீர் வரும் வகையில் மாற்றி அமைத்து விட்டனர்.* இந்த மிகப்பெரிய குளறுபடியால், சிட்லபாக்கம் ஏரிக்கு செல்ல வேண்டிய மழைநீர், பின்நோக்கி திரும்பி குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, நியூ காலனி குடியிருப்பு பகுதி, ஜி.எஸ்.டி., சாலையில் எம்.ஐ.டி., மேம்பாலம் ஆகிய பகுதிகளில் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.* அடுத்ததாக திருநீர்மலை துர்கா நகர்; வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் மற்றொரு பகுதி மழைநீரும், கக்கலஞ்சாவடி, காசநோய் மருத்துவமனை ஆகிய இடங்களில் இருந்து வரும் மழைநீரும், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள சிறுபாலம் வழியாக, ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்.* பின்னர் இந்திரா காட்டன்மில் நிறுவனம் வழியாக, சிட்லபாக்கம் பிரதான சாலையில் உள்ள கால்வாயை அடைந்து, சிட்லபாக்கம் ஏரிக்கு செல்லும்.* இந்த கால்வாய் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியில்லை. * ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள சிறுபாலம், பி.எஸ்.என்.எல்., அலுவலக சிறுபாலம் ஆகிய இரண்டும் செயலிழந்ததால், வெள்ளம், சாலையில் பாய்கிறது. * அடுத்ததாக, எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சிறுபாலம் வழியாக, பல்லாவரம் நகராட்சி 39, 40வது வார்டுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், ரயில் தண்டவாளத்தைக் கடந்து, எம்.ஐ.டி., மேம்பாலம் - கொல்லஞ்சாவடி - காந்தி நகர் வழியாக, அஸ்தினாபுரம் ஏரிக்கு செல்ல வேண்டும்.* அந்த கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைநீர், ஜி.எஸ்.டி., சாலை, அணுகு சாலையில் தேங்கி நிற்கிறது.* குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் எதிரே, ஜி.எஸ்.டி., சாலை - ரயில் தண்டவாளப் பகுதியில், ஒரு சிறுபாலம் உள்ளது. இதுதான் அதிக வெள்ள பாதிப்பிற்கு காரணமான பாலம். இந்த சிறுபாலம், ஜி.எஸ்.டி., சாலை, ரயில் தண்டவாளம் ஆகியவற்றைக் கடந்து, ராதா நகர், ஸ்டேஷன் பார்டர் சாலை வழியாக, பல்லாவரம் பெரிய ஏரிக்குச் செல்ல வேண்டும்.* இந்த கால்வாய் ஆக்கிரமிப்பிலும், குப்பை, கழிவுகளால் துார்ந்தும் போயிருப்பதால், ஜி.எஸ்.டி., சாலையில் வெள்ளம் தேங்குகிறது. இந்த சிறுபாலத்தில், பல்வேறு கேபிள்கள் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன, என்பதும் குறிப்பிடத்தக்கது.* பம்மல் மூங்கில் ஏரி, திருநீர்மலை சாலை பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், பல்லாவரம் மேம்பாலம் இறங்கும் இடத்தில் உள்ள ஜி.எஸ்.டி., சாலை - ரயில் தண்டவாள சிறுபாலங்களைக் கடந்து, பல்லாவரம் பெரிய ஏரிக்குச் செல்லும். * அந்த சிறுபாலமும் சுருங்கிவிட்டதால், ஒவ்வொரு மழையின் போதும், பல்லாவரம் மேம்பாலம் இறங்கும் இடத்தில் வெள்ளம் தேங்குகிறது.* குரோம்பேட்டை வீரராகவன் ஏரி ஆக்கிரமிப்பு, இந்த ஏரிக்கான வரத்து மற்றும் போக்கு கால்வாய்கள் ஆக்கிரமிப்பு தான், மும்மூர்த்தி நகர், நியூ காலனி குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்க காரணங்கள்.* நெமிலிச்சேரி ஏரி நிரம்பியதால், நேதாஜி நகர் குடியிருப்பு பகுதிகள், செம்பாக்கம் ஏரி நிரம்பியதால் திருமலை நகர், சரஸ்வதி நகர் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கன.* பல்லாவரம் பெரிய ஏரி, ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டது. அதனால் கீழ்க்கட்டளை ஏரிக்கு அதிக நீர்வரத்து சென்றது. கீழ்க்கட்டளை ஏரி உடைந்ததாலும், மூவரசம்பட்டு ஏரி நிரம்பி அதிகளவில் உபரிநீர் வெளியேறியதாலும், கீழ்க்கட்டளை பகுதி வெள்ளத்தில் சிக்கியது.* ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறத்திலும், ஒரே சீராக மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. அங்கு கொஞ்சம், இங்கு கொஞ்சம் என, தொடர்ச்சி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மழைநீர் வேகமாக வடியாததற்கு காரணம்.
என்ன செய்ய வேண்டும்?* ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள சிறுபாலத்தை மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அதன் நீர்வாட்டத்தை மாற்றி கட்ட வேண்டும். * பி.எஸ்.என்.எல்., எதிரே உள்ள சிறுபாலத்தில் இருந்து செல்லும் கால்வாயை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, முறைப்படுத்த வேண்டும்.* எம்.ஐ.டி., மேம்பாலம் கீழ் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, எம்.ஐ.டி., கல்லுாரியின் உட்பகுதியில் உள்ள கால்வாயை முறைப்படுத்த வேண்டும்.* வெற்றி தியேட்டர் எதிரே செல்லும் சிறுபாலத்தை, ரயில் தண்டவாளத்தின் அடிப்பகுதியில் துார்ந்து போயுள்ள கால்வாயை சீரமைக்க வேண்டும். ஏரிக்கு செல்லும் வரை, கால்வாய்களை உண்மையான அகலத்திற்கு மாற்ற வேண்டும்.* பல்லாவரம் மேம்பாலம் இறங்கும் இடத்தில் சுருங்கிப் போயுள்ள சிறுபாலத்தை விரிவுபடுத்த வேண்டும். அதேநேரத்தில், ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாயை மீட்க வேண்டும்.* இந்த ஐந்து முக்கிய சிறுபாலங்களை, பழைய நிலைக்கு கொண்டு வந்தால் மட்டுமே, ஜி.எஸ்.டி., சாலை வெள்ளத்தில் மூழ்குவதையும், அதை ஒட்டிய குடியிருப்புகள் மூழ்குவதை யும் தடுக்க முடியும்.

- நமது நிருபர் குழு -வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜன-201609:52:14 IST Report Abuse
Srinivasan Kannaiya இது திராவிட கட்சிகளின் சாதனை... மக்களின் வேதனை...
Rate this:
Share this comment
Cancel
Sivaraman.B - chennai,இந்தியா
14-ஜன-201608:06:17 IST Report Abuse
Sivaraman.B பல்லாவரம் ஏரியின் சுற்றுவட்டம் சுருங்கியதன் காரணம் அறியாமல் நீர் வரத்தின் போக்கு மற்றுமே ஆராய்வது சரியல்ல
Rate this:
Share this comment
Cancel
MAN-ROOP - TTI,இந்தியா
14-ஜன-201606:58:14 IST Report Abuse
MAN-ROOP இது சம்பந்தமாக முதலமைச்சருக்கு எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்க பட வில்லை? காசிபுரம் கலைக்டர் இது வரை எந்த முயற்சியும் பண்ணவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X