வியர்வைக்கு வெகுமதி தரும் வெற்றித்திருநாள் | Dinamalar

வியர்வைக்கு வெகுமதி தரும் வெற்றித்திருநாள்

Added : ஜன 14, 2016
 வியர்வைக்கு வெகுமதி தரும் வெற்றித்திருநாள்


தை முதல் திருநாள், பொங்கல் திருநாள்! உழவர் வாழ்வு செழிக்க வேண்டிய உன்னதத் திருநாள்!
தைப் பொங்கலின்; முதல் திருநாள்- போகித் திருநாள்! போக்கித் திருநாள்! இல்லத்துக் குப்பை, கூளங்களைத் துாய்மை செய்யும் நாம் இதயத்துக்
குப்பைகளைத் துாய்மை செய்கிறோமா? ஆசை, கோபம், பொறாமை முதலிய குணங்கள் நம்மிடம் இருந்து விடை பெற்றுள்ளதா?
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம்'
என்றார் திருவள்ளுவர்.
உள்ளத்தில் ஓடும் அழுக்கு ஆறு எந்தப் புனித நீரில் தூய்மை செய்தாலும் நம்மை விட்டு நீங்காது. நாம் பெறுவதை விட பிறரின் இழப்பைத் தான் நாம் பெற்றதாக எண்ணி மகிழ்ச்சியுறுகிறோம். அந்த அழுக்கை மனதில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
பொங்கலின் 2ம் திருநாள் தைப் பொங்கல் திருநாள்மார்கழி பனிக்காலம் மட்டும் அல்ல பக்திக் காலமும் தான். பெண்கள் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி, ஊன் உருக, உயிர் உருகப் பிரார்த்திப்பர். நல்ல கணவர் வேண்டி இருக்கும் நோன்பு அது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை.
எப்படிப்பட்ட கணவர் அமைய வேண்டும் என்று திருவெம்பாவை பாடலில் பெண்கள் பாடுகின்றனர்?
'முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் போர்த்தும்; அப்பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார்; தாள் பணிவோம்
ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவா; ஆவார்; அவர் உகந்து
சொன்ன பாரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்'
என்று பெண்கள் இறைவனின் தொண்டர்களைத் தாம் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்வோம் என்று பாடுகின்றனர். உலகம் வாழ வாழ்வது. உயிர்க்குலம் வாழத் தன்னையே தியாகம் செய்வது தான் இறைமைப் பண்பு. அதே பண்பு இறைவனின் அடியவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உண்டு என்பதால் அப்படிப்பட்டப் பண்பு உள்ளவர்களைத் தாம் எங்கள் கணவராக ஏற்றுக் கொள்வோம் என்று பெண்கள் பாடுவதாக அமைந்துள்ளது
இத்திருப்பாடல்.
உலக வாழ்வு எப்படி உள்ளது?
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றார் திருவள்ளுவர். அந்த இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இல்வாழ்க்கை இன்று அமைந்துள்ளதா?
வாழ்க்கை என்பது புரிதலில் தான் இருக்கின்றது. இன்பத்தில், துன்பத்தில், சுகத்தில், துக்கத்தில், நன்மையில், தீமையில், ஏற்றத்தில், இறக்கத்தில் பின்னிப் பிணைந்து, நெகிழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்வது தான் வாழ்வு! அந்த வாழ்வை வாழும் இல்லங்கள் என்றும் சர்க்கரைப் பொங்கலின் தித்திப்பைக் காணும்.
'பொங்கலின் அடுத்தத் திருநாள் -மாட்டுப் பொங்கல்!
காளைகளைப் போற்றும் உழைப்புத் திருநாள்.
'உழுத நோன் பகடு அழி தின்றாங்கு'
என்று புறநானுாறு பேசும்.
காளைகள் நமக்காக கழனிகளில் உழைக்கின்றன. மண்ணைப் பொன்னாக்கி, நெல்மணிகளைத் தந்து விட்டு, நாம் ஒதுக்கும் கழிவாகிய வைக்கோலைத் தான் உண்கின்றன. அதனால் தான் தவம் செய்யும் காளைகள் என்று புறநானுாறு பாடுகிறது.
பற்றற்ற உழைப்பின் அடையாளமாக விளங்கும் காளையைத்தான் (நந்தி) சிவபெருமான் வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ளார். எருதுக் கொடியைத் தான் சிவபெருமான் ஏற்றிப் பிடித்துள்ளார். பற்றற்ற உழைப்பின் அடையாளமாகிய காளைகளைப் போற்றுவோம். பென்னிகுவிக்கிற்கு நன்றி
மழை மரங்களுக்கு தருவது உயிர்ப்பு! வியர்வைக்கு வெகுமதி தரும் வெற்றித் திருநாளில் மண்ணை வளப்படுத்துவோம். மண்ணகத்தைப் பசுமை ஆக்குவோம்.
தமிழகத்தில் கம்பம் பகுதி மக்கள் பொங்கல் திருநாளைப் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேயப் பொறியாளருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தொலைநோக்குப் பார்வையோடு கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், நீர் வரத்துக்கால்வாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை பேணிப்பாதுகாக்க வேண்டும். இப்பணி இன்றைய அவசர அவசியத் தேவை. நீர் ஆதாரங்களுக்கு ஆதாரம் மழை! மழைக்கு ஆதாரம் மரங்கள்!
மரங்கள் மழைக்குத் தருவது பிறப்பு!
பூமியைப் பசுமை ஆக்குவது மூலம் தான் புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாம். நச்சுக் காற்றை துாய்மை செய்து உயிர்க்காற்றைத் தந்து நம்மை வாழவைக்கும்
மரங்களை நாம் வளர்க்க வேண்டாமா?
நம் திருக்கோயில்களில் தல விருட்சங்கள் இருந்தன. ஊர்களே வனங்களாய் இருந்தன. வனங்களே நமது வளம்! அதை நாம் பேணிப் பாதுகாப்போம்.
பொங்கல் பொங்குகின்றது. பொங்கலோ பொங்கல் என்று பொங்குகின்றது.
பொங்கல் பொங்கும் மண்பானை மண் தந்த கொடை!
நெல் மண் தந்த கொடை!
கரும்பு மண் தந்த கொடை!
மஞ்சள் மண் தந்த கொடை!
வாழை மண் தந்த கொடை!
மண்ணைத் தோண்டினால் (உழுதால்) நெல்மணியாம் பொன்மணி கிடைக்கின்றது.உழைப்பைப் போற்றுவோம். உழைப்பைப் போற்றும் எல்லா நாட்களும் தித்திக்கும் பொங்கல் திருநாளே!
-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்திருவண்ணாமலை ஆதீனம்குன்றக்குடி adigalar-kundrakudi@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X