கோவை : கோவை சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களில், இன்று மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட, விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
கோவை மாநகரத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செழிப்பாக உள்ளது. உழவுக்கு கைகொடுக்கும் கால்நடைகளுக்கும், உணவு தானியங்களை விளைவிக்கும் பூமிக்கும் நன்றி செலுத்தும் வகையில், தை திருநாளின் இரண்டாம் நாளான இன்று, மாட்டுப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவை மதுக்கரை, தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, அன்னுார், சூலுார் சுற்றுவட்டார கிராமங்களில், இன்று மாட்டுப்பொங்கல் விழாவுக்கு, விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். தோட்டத்திலுள்ள பசு, காளை, கன்றுக்குட்டிகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, மூக்கணாங்கயிறு, தலைகட்டி, கட்டுக்கயிறு மாற்றி வருகின்றனர். விளைநிலத்தின் தென்மேற்கு பகுதியில், இடத்தை சுத்தப்படுத்தி, பனை மற்றும் தென்னை ஓலை கொண்டு, தடுப்பு அமைத்து, மா, வேம்பு, ஆவாரம் பூ, பூளைப்பூ, எருக்கந்தலை கொண்டு காப்பு கட்டியுள்ளனர்.
விவசாய குடும்பத்திலுள்ளவர்கள், இன்று காலை கடலை, பொரியுடன், அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, கும்மியடித்து பண்டிகை கொண்டாட்டத்துக்கு தயாராகின்றனர். அதன்பின், ஆற்றுப்படுகைக்கு சென்று, மணல், கன்னிமார் சுவாமிகள், தாளைமடல், முடக்கத்தான் கொடி மற்றும் பூ பறித்துக்கொண்டு, வீடு திரும்புவர்.
தோட்டத்தில், தெப்பக்குளம் அமைத்து, சாணிக்கரைச்சல் ஊற்றி, நாலா பக்கமும் வாழைக்கன்று, கரும்பு நட்டு, மஞ்சள் கொத்து, இளநீர் வைப்பர். சுற்றிலும், மாவிலை தோரணம் கட்டுவர். தெப்பக்குளத்தின் மையத்தின், வாழைமரத்தை பதித்து, விளக்கு ஏற்றுவர். சாணக்கரைசலுக்குள், நவதானியங்கள், சில்லரை காசு கொட்டப்படும். ஆற்றில் இருந்து எடுத்து வந்த, கன்னிமார்கள் தெப்பக்குளத்தில் பிரதிஷ்டை செய்வர்.
தெப்பக்குளம் எதிரில், கற்களை குவித்து அடுப்பு கூட்டி, கன்னிமார், கருப்பராயன், மாதேஸ்வரன், பட்டியாவடை மற்றும் இஷ்ட தெய்வங்களை நினைத்து, ஏழு அல்லது ஒன்பது மண்பானைகள் அல்லது பித்தளை பானையில் பொங்கல் வைக்கப்படும். பொங்கலுக்கு உகந்த, உப்பு பருப்பு, மொச்சை சாம்பார், மிளகு ரசம், தயிர், அரசாணி மற்றும் சேனைக்கிழக்கு பொரியல் வகைகள் சமைக்கப்படும்.
பொங்கல் படைப்பு விரித்து, வழிபாடு செய்ததும், தெப்பக்குளத்தினுள் மாடு விரட்டுதல் நடக்கும். ஆற்றில் இருந்து எடுத்து வந்த, முடக்கத்தான் கொடியை மாடு அறுத்துக்கொண்டு, தெப்பக்குளத்தினுள் இறங்கி செல்ல வேண்டும்.
மழை பொழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், கால்நடை செல்வம் பெருக வேண்டும் என, விருத்த பாடல்கள் பாடுவர். படையல் பொங்கலுடன், வெல்லம், தேங்காய் கலந்து, 'வாய் கழுவு பட்டியாரே, சோறு உண்ணு பட்டியாரே' என, குழுவாக பாடிச்சென்று, ஆடு, மாடுகளுக்கு அமுது பொங்கல் ஊட்டுவர்.
அதன்பின், விழாவுக்கு அழைக்கப்பட்ட, உற்றார், உறவினர்கள், தோட்டத்து பணியாளர்களுக்கு, சமபந்தியாக பொங்கல் பரிமாறப்படும். மாட்டுப்பொங்கல், மாலை 4:00 மணிக்கு துவங்கி, 6:00 மணிக்கு நிறைவடையும்.
வெளியூர் வேலைக்கு சென்றிருக்கும், விவசாய குடும்பத்தினர், மாட்டுப்பொங்கல் விழாவுக்கு கிராமங்களுக்கு திரும்பி உள்ளதால், கிராமங்கள் சொந்தங்கள் நிறைந்து களை கட்டியுள்ளன. கோவை சுற்றுப்பகுதி கிராமங்கள் இன்றைய மாட்டுப்பொங்கல் விழாவுக்கு, இரண்டு நாட்களாக தயாராகி வருகின்றன.