ஊட்டி: தேர்தல் களத்துக்கு செல்லும் போது, மக்களால் ஏற்படும் 'நெருக்கடி'யில் இருந்து கவுன்சிலர்களை தப்புவிக்க, ஊட்டி நகராட்சி சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணி மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதில், ஆளுங்கட்சி வசமுள்ள ஊட்டி நகரமன்றம், அவசர கதியில், வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.
நகரில் உள்ள, 36 வார்டுகளில், நடைபாதை, கால்வாய், தெரு விளக்கு, தடுப்புச்சுவர் என, பல பணிகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள நிலையில், மாதந்தோறும் நடக்கும் நகரமன்ற கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள் வார்டுகளில் அடிப்படை வசதி கேட்டு, குரல் எழுப்பி வருகின்றனர்; நுாதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பணிகளை மேற்கொள்ள நிதி நெருக்கடியை நகராட்சி நிர்வாகம் காரணங்காட்டி வந்தது. தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், வார்டு மக்களின் அதிருப்தியில் இருந்து தப்பிக்கவும், மக்கள் மத்தியில் கவுன்சிலர்களுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும், 3.00 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு, நகரமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நீளும் பட்டியல்
அதன்படி, 'கணபதி தியேட்டர் சாலை புதுப்பிப்பு, வெட்னரி ஆஸ்பிட்டல் சாலையில் கால்வாய், கீழ் புதுமந்து, ஆர்.கே.புரம் சாலையில் குழாய், வி.சி.,காலனியில், தடுப்புச்சுவர், பீட்டஸ் சாலையில் மழைநீர் கால்வாய், சார்ட்லைன் பகுதியில் கால்வாய், பட்பயரில் நடைபாதை, வண்டிச்சோலை நாராயணபுரத்தில் தடுப்புச்சுவர், நடைபாதை, காளியப்பன் தெருவில், நடைபாதை' என, 60க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொள்ள, 3.00 கோடி ரூபாய் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி எங்கே?
நகராட்சி சார்பில், ஏற்கனவே, ஏராளமான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு இல்லாததால், அந்த பணிகள் டெண்டர் விடப்படாமல், தீர்மான நிலையிலேயே உள்ளன. ஏற்கனவே, நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் திணறி வரும் நிலையில், நிதி எங்கிருந்து வரும், பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது,'நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு நிதி தயாராக இல்லை; பொது நிதி அல்லது அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதியின் கீழ் தான் பணிகளை செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் வளர்ச் சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு வருமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என்றனர்.