திருப்பூர்: தமிழர் திருநாள் பொங்கல் விழா, திருப்பூரில் பெரும் உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. வீடுகளில் பொங்கல் வைத்தும், கோவில்களில் சிறப்பு பூஜைகளுடனும் வழிபாடு நடந்தது. சிறுவர் - சிறுமியர், பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிக்கப்பட்டது.
தமிழகத்தின் முக்கிய பண்டிகையான, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல், திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கடந்த இரு நாட்கள் கடை வீதிகளில் பண்டிகைக்கு புத்தாடை வாங்கவும், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நேற்று முன்தினம் போகி பண்டிகை மற்றும் காப்புக்கட்டு நடந்தது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் சாணத்தால் மெழுகி, மாகோலமிட்டு பண்டிகையை வரவேற்றனர். கரும்பு மற்றும் மஞ்சள் படைத்து, அடுப்பு மூட்டி, புதிய பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து வழிபட்டனர்.
மார்கழி மாத நிறைவு மற்றும் தை மாதப் பிறப்பு முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. தென்னம்பாளையம் மாகாளியம்மன், வீரமாத்தியம்மன் கோவிலில், சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
அணைக்காடு மாரியம்மன், வளையன்காடு மாகாளியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். லட்சுமி நகர் ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, ராமகான சபா சார்பில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் பங்கேற்று, பக்தி பாடல் பாடி நடனமாடினர். சக்தி ஐஸ்வர்ய நகர் விநாயகர் கோவில் வளாகத்தில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்,
கோ வழிபாடு நடந்தது.
தைப்பொங்கலுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும் வகையில், எங்கு பார்த்தாலும், விளையாட்டு போட்டிகள் நடந்த வண்ணம் இருந்தது. திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள், பெண்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தி, பரிசளிக்கப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களும், கடைகளும் திறக்கப்படவில்லை. இரு நாளாக, பொங்கல் விற்பனையில் களைகட்டிய வீதிகள் பரபரப்பின்றி காட்சியளித்தன. டவுன் பஸ்களில் மட்டும் கூட்டம் ஓரளவு காணப்பட்டது. திருப்பூர் நகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய ரோடுகள், வாகன நெரிசல் மற்றும் பரபரப்பின்றி இருந்தது. சினிமா தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது; அடுத்தடுத்த காட்சிகளுக்காக நீண்ட நேரம் ரசிகர்கள் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்தனர்.