முறிந்து போன முதுகெலும்பின் முனகல்!| uratha sindhanai | Dinamalar

முறிந்து போன முதுகெலும்பின் முனகல்!

Added : ஜன 17, 2016 | கருத்துகள் (50)
Share
முறிந்து போன முதுகெலும்பின் முனகல்!

காளைக்கும், பசு மாட்டுக்குமான வித்தியாசத்தை அறிந்திராதவர்கள் கூட, ஜல்லிக்கட்டை வேண்டாம் என, வாதிடுவது வேடிக்கை தான். நெல், கம்பு, ராகி, சோளம், பருத்தி, எண்ணெய் வித்துகள் என்று, பயிர் செய்த காலத்தில், கால்நடைகள் பெருகியிருந்தன. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்ற வேளாண்மை நம்முடையது.

நிலத்தில் சிதறிய தானியங்களைக் கொத்தித் தின்ற கோழிகள், வீதி முழுக்கப் பெருகி மேய்ந்தன. பயிர் செய்தலோடு ஆடு, மாடு, கோழி, வாத்து என்று, வீட்டு விலங்குகளோடு இயைந்து வாழ்ந்து வந்ததொரு காலமிருந்தது. கடும் பஞ்சங்களாலும், ஜப்தி நடவடிக்கைகளாலும், வேளாண்மையில் புகுத்தப்பட்ட நவீனங்களினாலும், கூடவே வானும் பொய்து, பருவ நிலைகள் மாற, நீர்ப்பாசனமின்றி விவசாயம் குறைந்ததால், இன்று கால்நடைகளின் வாழ்வாதாரம் சிக்கலுக்குள்ளானது. சத்தான பால் உற்பத்தி, நம் கை விட்டுப் போனது.நோய்களைக் குன்றாமல் அள்ளித் தரும் பிராய்லர் கோழிகள், நம் வாராந்திர உணவுப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்கே சோறு போட்ட விவசாயம் செத்துப் போனதினால், விவசாயிகளும் பிழைப்புத் தேடி கிராமங்களை விட்டு வெளியேறி விட்டனர். நெற்களஞ்சியங்கள் எல்லாம் இன்றைக்குக் கஞ்சித் தொட்டிகள் திறக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.

வெங்காயம், தக்காளி விலையேறினால் குதிரை விலை, யானை விலை என்று குதிக்கிறோம். ஆனாலும் என்ன விலை கொடுத்தாலும் வாங்கியே தீரவேண்டிய கட்டாயம். பருப்புக்கு, பத்து மடங்கு விலை கொடுத்து வாங்கும் அரசாங்கம், அதில் நியாயமான விலையையும், விவசாயிகளுக்கான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், உள்ளூர் உற்பத்தியிலே தன்னிறைவை அடைந்திட முடியுமே! அடிப்படையில் விவசாய பூமியான நம் நாட்டில், மொபைல் போன் உற்பத்தி ஆலைகள், வானகத் தொழிற்சாலைகள் என்று, லட்சம் கோடிகளில் முதலீடுகள் செய்யும் பெருந்தொழில் முதலாளிகளுக்கு வரிச்சலுகையும், மின் கட்டணத்தில் மானியமும் வழங்குகிற அரசுகள் தான், விவசாயிக்கு சொல்லி மாளாத மின்வெட்டை அளித்து, அவனது பியூசைப் பிடுங்குகிறது.

ஆண்டு முழுக்க நிலத்தில் உழைத்துக் களைத்த விவசாயி, அறுவடை முடிந்த தை முதல் நாளில் இயற்கைக்கும், அடுத்தநாள் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லிக் கொண்டாடப்படும் கலாசாரப் பண்டிகையின் ஓர் அங்கம்தான் ஜல்லிக்கட்டு. அது ஒரு விவசாயியின் அடையாளம்; தமிழனின் கலாசாரம். விவாசாயத்தை அழித்து தீர்த்தது போதாதென்று, இன்றைக்கு இவ்விளையாட்டுகளுக்கும் தடை கேட்டு, கொந்தளிக்க வைப்பதன் பின்னணியில், நம்மோடு இயைந்து வாழும் காளையினங்களையே அழிக்க பெரும் முயற்சி நடக்கிறது. இதற்கு பன்னாட்டு அமைப்புகளும் கைக்கூலியாக உதவுகின்றன.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், மீந்துபோன நைட்ரஜன் வெடி உப்புகளை உரமாக, நம் நிலங்களில் கொட்டினர்; நிலம் கெட்டிப் பட்டது. கடினப்பட்ட நிலத்தை உழவோட்ட டிராக்டர்கள் வந்திறங்கின. பணப் பயிர்கள் விளைச்சல் நிலத்தை ஆக்கிரமித்தன. மிச்ச விவசாய நிலங்களிலும் வீரியமிக்க உரத்தினால், நாட்டு நெற்பயிர்கள் சரிந்து விழுந்தன.

இதன் காரணமாகக் குட்டை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மாடுகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. கால்நடைகளின் தேவையும் குன்றி, உணவும் பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது. பால்பொருட்களுக்காக மட்டுமே எஞ்சியிருந்த பசுக்களை வளர்ப்பு மையங்கள் என்ற பெயரில் இனக்கலப்பு செய்து, பல்வேறு நாட்டு இனங்களை அழித்தொழித்தனர். காளைக் கன்றுகளைக் கொத்திக் கொண்டு போயினர். பராமரிக்க வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் மாடுகளை, இறைச்சிக்காக வாங்கத் துடித்தனர். இந்த மண் சார்ந்த குணாதிசயங்களோடு வளர்ந்த காளை இனங்கள் மெல்ல மெல்ல அழிவைச் சந்தித்தன.

ஆனாலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றுக்காக வளர்த்தவர்களின் விடாப்பிடித்தன்மையால், நாட்டு இனங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இன்று, இயற்கை விவசாயம் நோக்கித் திரும்புகிறவர்களின் முக்கியத் தேவையாக இருப்பது இயற்கை உரம். அவற்றை அள்ளித் தரும் மாடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் காளை இனங்களை, மீட்டெடுக்கும் பணியை தக்கவைத்திருக்கும் இனமாகத் தமிழினம் திகழ்வது, சந்தை முதலாளிகளின் கண்களை உறுத்துகிறது. தங்களின் பால்பொருட்கள், மாட்டுத்தீவனங்கள் விற்கப்பட வேண்டும். மாட்டு இறைச்சி ஏற்றுமதிச் சந்தையைத் தக்க வைக்க வேண்டும்.

இதெல்லாம் காளைகளையும், பசுக்களையும் தம் பிள்ளைகள் போல் பராமரிக்கிறவர்களிடம் எப்படித் திணிக்க முடியும்? ரேக்ளா பந்தயத்தைத் தடை செய்து ஆலம்பாடி காளையினத்தையே கண்காணாமல் செய்து விட்டனர். இன்று ஜல்லிக்கட்டுக்கு மணியடித்திருக்கின்றனர். இந்தத் தடையைத் தடுத்து நிறுத்தாவிட்டால், காளை இனங்கள் அழிந்து போவதை, நம்மால் தடுக்கவே முடியாது. பயிர்களில் மரபின மாற்றம் போல், பீடா போன்ற அன்னிய சக்திகள், காளைகளிலும் கலப்பினங்களை வலிந்து திணிக்கும் முயற்சியே இது என்ற, உள் அரசியல் புரியாமல் இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் மாடுகளை, வதை செய்கின்றனர், கொல்கின்றனர், க்ரூயலிட்டி என்று, தலையைச் சிலுப்பிக் கொதித்துப் போய் பேட்டி கொடுக்கின்றனர்.

விலங்கு நல ஆர்வலர்களோ, கோடிகளைக் கொட்டிக் குவித்து நீதியையே அசைத்துப் பார்த்துவிட்டனர். சரி, விலங்குகளை வதைக்கின்றனர் என்று கொந்தளிக்கும் இவர்கள், எத்தனைப் பிராணிகளை தங்கள் வீட்டில் பராமரிக்கின்றனர்? ஒரு கிராம் பட்டு நூலிழை தயாரிப்பதற்காகக் கொல்லப்படும் பட்டுப்பூச்சிகளின் எண்ணிக்கைப் பற்றி, இவர்களது அக்கறை என்ன நிலையில் இருக்கிறது? மலை வாசஸ்தலங்களுக்கு யாத்திரை போகிறவர்களைச் சுமந்து செல்லும் கழுதையினங்களுக்காக, எப்போது குரல் கொடுக்கப் போகின்றனர். கண்கட்டப்பட்ட குதிரைகளை காட்டுத்தனமாய் ஓடவிட்டு, பெட்டிங் கட்டி விளையாடும் பணம் படைத்தவர்களுக்கெதிராக உங்கள் கோஷம் என்ன? காட்சி ஊடகங்களும் ஜல்லிக்கட்டுக்கான விவாதங்களை வெறும் டி.ஆர்.பி., ரேட்டிங்கை கணக்கில் வைத்தே அணுகுகின்றன.

நெறியாளுனர்கள் ஒரு விவசாயின் இடத்திலிருந்து கேள்விகளை முன் வைத்திருந்தால், விவாதங்களின் போக்கே வேறு வடிவம் கண்டிருக்கும். விவசாயத்தை அழித்து, விவசாயின் முதுகெலும்பை முறித்து, அவனது அத்தனை உரிமைகளையும், உடைமைகளையும் பறித்து, இன்று அவனது பண்பாட்டிலும், கலாசாரத்திலும் கை வைப்பதால் நடக்கப் போகும் விபரீதம் அறியாமல், தட்டையான கருத்தாக்கத்தை விதைக்கும் மூடர்களை என்ன செய்வது? தேர்தல், கூட்டணி, காசு, பணம், பேரம் என அரசியல் கட்சிகளின் கவனம் வேறெதிலோ இருக்க, 'சும்மா பேசி வைப்போமே...' என, 'ஜல்லிக்கட்டை தடை செய்யாதே' என ஈனக் குரலில் முனகுவது, அவர்கள் காதுகளையே கூட எட்டப்போவதில்லை.

'விவசாயத்துல கை நிறையக் காசு வந்தா, நாங்க ஏண்டா கழனிய விட்டு வெளியேறி, கால் காசு பெறாத இந்தக் கான்கிரீட் காட்டுல உட்கார்ந்துட்டு, உங்க அறிவு கெட்ட பேச்சுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு இருக்கப் போறோம்?' என்ற விவசாயியின் குரல் கேட்கிறதா யாருக்கேனும். இந்த நாட்டின் முறிந்து போன முதுகெலும்பின் முனகலும் கூட இது தான்!
கோவை ஜீவா
பத்திரிகையாளர்.

இ மெயில்: kovaijheeva@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X